திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று அதிகாலை ரத்த அழுத்த குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை பெற்று நலமாக இருப்பதாக காவேரி மருத்துவமானை தெரிவித்துள்ளது.
உடல்நிலை சரியில்லாமல் போனதால், வீட்டிலேயே அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. சிறுநீரக பகுதியில் ஏற்பட்ட தொற்று காரணமாக இரு தினங்களுக்கு முன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்கு பின் அவர் தேறி வந்தார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. வதந்திகளை நம்ப வேண்டாம் என மு.க ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் எச்சரித்து வந்தாலும், பதற்றத்தால், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தின் அருகே, தொண்டர்கள் கூடினர்.
இந்நிலையில், திடீரென கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ரத்த அழுத்த குறைவு காரணமாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிய வந்தது. அதிகாலை 1.30 மணியளவில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால், மேலும் பரபரப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின், தற்போது ரத்த அழுத்தம் சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. திமுகவின் ஆ.ராசா துரைமுருகன் ஆகியோரும், கருணாநிதி தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.