அந்தம்மாவை கொழும்பன்ரி என்று சொல்லுவினும்
பெரியப்பாவின் கொழும்பு லாட்ஜ் அவனது புதிய தங்குமிடமாக மாறி இருந்தது. புதிதாக யாராவது கொழும்பில் வந்து தங்கினால் போலீஸ் பதிவு அவசியமாகி இருந்த நேரம் அது. மானேஜர் அவனை அழைத்திருந்தார். அவன் அடையாள அட்டை பாஸ்போட் இரண்டையும் கையோடு கொண்டுவந்து அமர்ந்திருந்தான். சற்று நேரத்தில் அவனது 7ஆம் வகுப்பு ரீச்சர் போல ஒரு ஐம்பது வயது அம்மா வந்து நின்றார் அவர்கள் முன். தோளில் ஒரு பீபீ வாக்கு கையில் ஒரு பேனா. “தம்பி அம்மாவோட போங்கோ. ஒண்டும் பிரச்சினை இல்ல. அம்மா பாத்து பெடியன் பயந்தவன்” என்றபடி மானேஜர் எழும்பி வழியனுப்பி வைத்தார்.
அந்தம்மா கொழும்பில் இருக்கும் அந்த சில அடுக்கு பாதுகாப்புள்ள போலீஸ் நிலையத்தை நோக்கி விறு விறு வென்று நடந்தார். அவன் பின் தொடர்ந்தான். அங்கு காவலில் இருந்த இரு பெண் போலீசாரும் சில ஆண் போலீசாரும் அவரை முகம் மலர பார்த்தார்கள். இப்போதும் அவன் அந்தம்மாவின் பின்னேயே போய்க்கொண்டிருந்தான். அங்கு அருகாமையில் உள்ள பல்வேறு லாட்ஜ்களில் இருந்தும் ஆட்கள் போலீஸ் பதிவுக்கு வந்திருந்தார்கள். அந்தம்மாவை கண்டதும் உள்ளுக்கும் நல்ல மரியாதை கிடைத்தது. போலீஸ் அதிகாரி அவனையும் அடையாள அட்டையையும் திரும்ப திரும்ப பாத்தார். மகன் தான்… என்று தமிழில் ஆரம்பித்து சிங்களமும் கலந்து அந்தம்மா பேசுவதை அவன் பார்த்தபடி நின்றான். போலீஸ் அதிகாரி சிரித்தபடி மளமளவென்று வேலையை முடித்துக் குடுத்தார். வந்த பிறகுதான்அவனுக்கு பல தகவல்கள் தெரிந்தது. அந்தந்த லாட்ஜ் மானேஜர் தான் தங்குவோருடன் செல்ல வேண்டும். ஆனால் அந்தம்மா போனால் வேலை ஈசியாக முடியும். மேலும் லஞ்சமும் குடுக்கவேண்டி வராது. அதனால் அந்தம்மாவை அனுப்புவார் மானேஜர். இது தவிர மாதம் ஒரு முறை ஒரு போலீஸ் சாதாரண உடையில் வந்து லாட்ஜ் பதிவை சரி பார்ப்பதாக அங்கேயே கிடப்பார். அவர் வருவதும் லஞ்சத்துக்கே என்றாலும் உள்ளே உள்ளவர்கள் அறைகளில் அடைந்து கிடப்பார்கள் பயத்தில்.
போலீஸ் பதிவு மட்டுமல்லாது பாஸ்போட் எடுக்க போவது, உடுப்பெடுக்க போவது எதுக்கு கூப்பிட்டாலும் அந்தம்மா எல்லோருடனும் செல்வார். அமைதியாக இருப்பார். அவருடன் போவது பாதுகாப்பு என்று பொதுவாக எல்லோரும் நம்பினார்கள். ஒரு நாள் மானேஜர் சொல்லியே அந்தம்மாவின் கதை அவனுக்கு தெரிந்தது. அவர் வவுனியாவை சேர்ந்தவர். கணவனை இழந்தவர். ஒரு மகளும் மகனும் அவருக்கு. மகளுக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்தது. கொழும்பு கடையில் வேலைக்கு வந்திருந்த அவரது மகனை ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது சந்தேகத்தில் கைது செய்தது போலீஸ். அவனுடன் சேர்த்து வேறு பெடியன்களும் கைது செய்யப்பட்டார்கள். இவன் வவுனியா என்ற ஒன்றே அவனை வெளியே வர முடியாமல் செய்யப் போதுமாக இருந்தது. மகனை போலீஸ் பிடித்த தகவல் அறிந்து அந்தம்மா வந்து சேரும்போதே மகன் நாலாவது மாடிக்கு அனுப்பப்பட்டான். நாலாம் மாடி என்பதன் பொருள் சித்திரவதை என்று தமிழர்கள் எழுதுவார்கள். சித்திரவதை தாங்க முடியாமல் அவன் போலீஸ் விருப்பம் போலவே எல்லாவற்றுக்கும் தலையாட்டினான். எல்லாம் கைமீறிப் போயிருந்தது. பெரிதாக அந்தம்மா படித்தவர் இல்லை. என்றாலும் ஆறு மாசம் அலைந்து ஒருவாறாக மகனைப் பார்த்து விட்டார். வழக்கறிஞர்கள் வழக்கு நடத்தி ஒன்றும் தீரவில்லை. நாலாம் மாடியில் இருந்து மெகஸீன் சிறைக்கு மாற்றியது மட்டுமே நடந்தது. அவ்வப்போது வழக்கு நடக்கும் ஒரு முன்னேற்றமும் இருக்காது.
அந்தம்மா கொழும்போடு தங்கி ஏழு வருடங்கள். கொழும்புக்கு வருவோர் போவோருக்கு உதவுவார். அவர்கள் குடுப்பதை வாங்குவார். சிலரிடம் ஒன்றும் வாங்கவும் மாட்டார். மாசம் ஒரு நாள் நன்றாக தென்படுவார். கொஞ்சம் நல்ல சீலை கட்டுவார். தன்ர கையால சமச்ச சாப்பாட்டோட சிறைக்கு போவார். அந்த ஒரு நாள் அவரை ஒருத்தரும் தொந்தரவு செய்வதில்லை. சிங்களமும் கொஞ்சம் பேசிப்பேசி பழகி இருந்தார். துணிச்சலும் அவருக்கு வரும்போது இல்லை. மகனுக்காக கொழும்பில் அலைய தொடங்கிய பிறகே அவர் உரமானவராக மாறினார். எந்த பிரச்சினை என்றாலும் அந்தம்மாவை கூட்டியண்டு போவம் என்று அங்கிருந்த பல லாட்ஜ்களிலும் அவர் பிரபலமாகி இருந்தார். தன் சோகத்தை அவர் யாருடமும் வெளிக்காட்டியதில்லை. மானேஜரால் அவருக்கு பெரிதாக உதவ முடியாது என்றாலும் அந்தம்மாவுடன் தனியாக வரும் பெண்களை சேர்ந்து தங்க வைப்பார். நல்ல விதமாக உண்மையை சொல்லி பலருக்கும் உதவியாக சேர்த்து விடுவார்.
அவனுடனும் சில நாட்களில் அந்தம்மா பேசத்தொடங்கினார். தன் மகனைப் பற்றிப் பேசும்போது கூட உற்சாகமாக பேசுவார். என்ர மகன் துணிச்சல் காரன். நீரும் துணிச்சலா இருக்கோணும் என்று அடிக்கடி சொல்லுவார். மகனை கூட்டிக் கொண்டு தான் கொழும்பை விட்டு போவேன் என்பதில் பிடிவாதமாகவே இருந்தார். அவன் சில ஆண்டுகளில் லண்டன் சென்றான். அவ்வப்போது அந்தம்மாவை கேட்காமலேயே சிறு தொகை அனுப்புவான். மாசம் ஒரு முறை பேசுவான். பேசும்போதெல்லாம் அந்தம்மாவின் குரலில் இருக்கும் உற்சாகமும் தன்னம்பிக்கையும் அவனுக்கு பெரிய ஆறுதலாக இருக்கும்.
அவன் கடைசியாக பேசிய போதும் அந்தம்மா சிறைக்கு சென்று திரும்பி வந்திருந்தார். பேச்சில் உற்சாகம். மகனுடன் பேசியவைகளை சொல்லி சிரித்தார். அந்தம்மாவால் எப்படி தன் சோகத்தை கொஞ்சமும் காட்டாமல் பேச முடிகிறது என்று அவனுக்கு விளங்கியதே இல்லை. “மகன கெதியா வெளிய கொண்டு வந்திடுவன். அவனுக்கு ஒரு பெட்டைய பாக்கோணுமடா. உன்ர கதை என்ன மாதிரி. காட் கிடச்ச உடன சொல்லு. உனக்கும் ஒண்டப்பாக்கிறன் என்னடா”. நிம்மதியாக படுக்கைக்கு போனான்.
அந்தம்மாவை கொழும்பன்ரி என்று சொல்லுவினும்.
-வாசு முருகவேள்