சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், தொடர்ந்து அதே நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது” என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குணமடைந்து, மீண்டும் மக்கள் பணியினை தொடர இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபரின் வாழ்த்து கடிதத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில், அமைச்சர்கள் செந்தில் தொண்டைமான், எம்.ராமேஸ்வரன் உள்ளிட்டோர் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினர்.
முன்னதாக திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திங்கள்கிழமை காலை 10 மணி அளவில், ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்தனர்.
அவர்களுடன் பல அமைச்சர்களும், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். சுமார் 20 நிமிடங்களில் அவர்கள் வெளியே வந்து செய்தியாளர்களின் சில கேள்விகளுக்குப் பதில் அளித்தனர்.
“திமுக மூத்த தலைவர் பெரியவர் கலைஞரை மருத்துவமனையில் நானும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரும் நேரில் பார்த்தோம். அவரது உடல் நிலை சீராக உள்ளது” என்று தெரிவித்தார்.
அதன்பின் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும் ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்திருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென அவரது உடல்நிலை மோசமானதாக செய்திகள் வெளியாகின.
கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது என்ற செய்தி பரவியவுடன் மருத்துவமனையை சுற்றி திமுக தொண்டர்கள் குவிந்தனர்.
கூட்டத்தினரை களைக்க லேசான தடியடியும் நடத்தப்பட்டது.
“திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்காலிக பின்னடைவுக்கு பிறகு தற்போது மீண்டும் சீரடைந்து வருகிறது” என காவேரி மருத்துவமனை இரவு 9 மணிக்குமேல் வெளியானது.
அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் கூட்டம் குறையாத நிலையில், “காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியுள்ளபடி, கலைஞரின் உடல்நிலையில் தற்காலிகமாக ஒரு பின்னடைவு ஏற்பட்டது. பின்னர், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக தற்போது கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது அசம்பாவிதங்களுக்கு இடம் கொடுத்து விடாமலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் காவல்துறையினருக்கு திமுக தொண்டர்கள் ஒத்துழைப்பு தந்திட வேண்டும்” என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அங்கு சென்றார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் மற்றும் அவரின் குடும்பத்தாரிடம் விசாரித்தாகவும் வெங்கைய நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
95 வயதான திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்கவும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி தெரிந்துகொள்ளவும் அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், திமுக கட்சித் தொண்டர்கள் என பலரும் மருத்துவமனைக்கு வந்து சென்றனர்.