வணக்கம் யோகேஸ் யோ நீங்கள் ஒடுக்கப்படும் மக்களுக்கான தளம் என்னும் அமைப்பை நிறுவி செயல்ப்பட்டு வருகின்றீர்கள் அத்தோடு சமூக சேவையிலும் ஈடுபட்டு வருவதோடு மக்கள் போராட்டங்களிலும் பங்கேற்று வருகின்றீர்கள் அந்த வகையில் உங்களிடம் சில கேள்விகள்,
யோ கேஸ் யோ – உங்கள் கேள்விக்கான பதில் பகுதியில் எமது அமைப்பு பற்றியும் , செயற்பாடுகள் பற்றியும் அதன் செயற்பாட்டாளர் என்கிற வகையில் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். உங்கள் கேள்விகளுக்கான பதிலை ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன்.
கடலூரான் சுமன்- ஒடுக்கப்படும் மக்களுக்கான தளம் அமைய பெற்றதன்காரணம் ..?
யோகேஸ் யோ – 2009 ஆம் ஆண்டு வரை தமிழ் இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் பேரவலமாக அழிவை சந்தித்த பின்பு , தமிழ் அரசியல் தலைமைகள் என தம்மை தாமே சொல்லிக்கொள்வோர் யாருமே மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க முன்வரவில்லை.இதனால் மக்களே தங்களது உரிமை போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
சிங்கள பேரினவாத அடக்குமுறைக்கு உள்ளாகும் மக்களின் பலம் – தமிழ் அரசியல் தலைமைகளின் சுயநல தேர்தல் அரசியல் , மற்றும் குழுவாத போக்குகளால் மேலும் பலவீனம் அடைந்துள்ளது.இதனை மாற்றி அமைக்க ஓர் அமைப்பு வேண்டும் என்கிற காலத்தின் தேவை எமக்கான அரசியல் வேலையினை தந்துள்ளது என எண்ணுகிறேன். இதன் மூலம் மக்கள் அரசியல் பலத்தை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படைகள் காரணமாக அமைந்தன எனலாம்.
வடகிழக்கில் தற்போது ஏற்பட்டிருக்கும் தமிழர் அரசியல் வெறுமை மற்றும் தமிழ் பேசும் மக்களின் தமிழ்த்தேசிய விடுதலை கனவு பற்றி பேசிக்கொண்டிருந்தாலும், மக்களை சரியான முறையில் அரசியல் மயப்படுத்தி ஒரு அரசியல் போராட்ட சக்தியினை இளையோர் மத்தியில் ஏற்படுத்துவதில் 2009 இற்கு பின்பாக வடகிழக்கு தவறியுள்ளமையினை நாம் காண முடியும்.
அந்த அடிப்படையிலேயே , ஒடுக்கப்படும் மக்களுக்கான தளம் சரியான முறையில் அரசியல் தெளிவு நிலையினை இளையோர் மத்தியில் ஏற்படுத்த அனைத்து தரப்பினரையும் உள்வாங்கி செயற்படுத்த முயற்சிக்கும் வகையில் உருவாக்கம் பெற்றது.
இவ்வாறான, போராட்ட அரசியல் (Resistance Politics) பொதுவாக மேற்குலகில் மற்றும் ஆசிய பிராந்தியங்களில் இடதுசாரிகளால் முன்னெடுக்கப்பட்டாலும், இலங்கையில் அதுவும் குறிப்பாக வடகிழக்கில் போருக்குப்பின்னர் அதன் தன்மைகள் உணரப்பட்டது இல்லை என்றே கூறலாம்.
தேசிய விடுதலை பற்றிய சிந்தனையில் ஒரு போராட்ட பாதையில் பயணித்த தமிழ் இனம், அதன் ராணுவ ரீதியிலான கட்டமைக்கப்பட்ட பாதை முடக்கப்பட்ட பின்னர், இலக்கு நோக்கி செல்ல இந்த 9 வருடங்களில் எந்த தரப்பும் முயற்சி எடுக்கவில்லை என்றே கூற வேண்டும் , அந்த அடிப்படைகளை கருத்தில் கொண்டே ஒடுக்கப்படும் மக்களுக்கான தளம் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக போராடும் அமைப்பாக தன்னை அடையாளப்படுத்தி ஒரு சிறு அமைப்பாக பயணிக்க தன்னை சமூகத்துள் ஈடுபடுத்த முயற்சித்து வருகிறது.
கடலூரான் சுமன்- அமைப்பின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள்..?
யோகேஸ் யோ – இது ஒரு சுயாதீனமான அரசியற் போராட்ட அமைப்பாக இருப்பதுடன், சனநாயக உரிமைகளை வென்றெடுத்தலுடன் , எமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட நாம் ஓரணியில் ஒன்று திரளுதல் அவசியம். இந்த அடிப்படையில், இணைந்து ஓர் அமைப்பாக நாம் இயங்குதல் எமது நோக்கமாகும். அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்ட சக்தியை திரட்ட செயற்பட்டு வருகிறோம்.
– தமிழ் மக்களின் அரசியல் குறுகுவதை கடுமையாக எதிர்க்கும் அமைப்பாகும்.
– சமூக , பொருளாதார, அரசியல் புரிதலின் அடிப்படையில் ஒரு போராட்ட சக்தியை கட்டி அதன் மூலம், தமிழ் பேசும் மக்களின் தேசிய உரிமை உட்பட்ட அனைத்து சனநாயக உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்தை நிகழ்த்துவது ஒடுக்கப்படும் மக்களுக்கான தளத்தின் நோக்கமாகும்.
– தமிழ் பேசும் மக்களின் கோரிக்கைகள் பலப்படுவதற்கும் , ஒடுக்கப்படும் மக்களுக்கான தளம் பலப்படுவதற்கும் நேரடி தொடர்பு உண்டு. இந்த அமைப்பில் இணைந்து பலமடைவது அரசியல் ரீதியாக இயங்க முற்படும் அனைவரதும் கடமை என்று உணர்கிறோம்.
– அதிகார சக்திகளிடம் அடிபணிதலுக்கு சாத்தியமேயில்லை என்கிற அடிப்படையிலும், எமது அரசியல் நிலைப்பாட்டில் எந்தவித சமரசமும் மாற்று அமைப்புக்களுடன் வைத்துக்கொள்வது இல்லை என்கிற புரிதலுடன் செயற்பட்டு வருகிறோம். ஆனால், நமது நிலைப்பாட்டை ஏற்கும் அனைவரும் தயக்கமின்றி எம்முடன் இணைந்து, உரையாடல்களில் கலந்து கொண்டு ,செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.
– அரசியல் ரீதியான உடன்பாடே உறுப்பினர் ஆவதற்கான முதல் அடிப்படை.
– எமது நிலைப்பாடு மற்றும் செயற்பாடுகளை சனநாயக முறையில் முன்னெடுத்து செல்வதாயின் அமைப்பின் கட்டுமானம் மற்றும் அரசியல் திசை ஆகியன பற்றிய தீர்மானத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கு பற்ற வேண்டும்.
– இழுக்கும் காற்றில் பறந்துகொண்டு நிலையான கதைகள் பேச முடியாது. நாம் எமக்கான – எமது உரிமைக்கோரிக்கைகளை சமரசம் செய்யாத சுயாதீன அமைப்பு ஒன்றை பலமாக நிறுத்தியே ஆகவேண்டும். இத்தகைய அமைப்பை மக்களின் பக்கம் சார்ந்து , ஒடுக்கப்படும் சமூகத்தில் இருந்தே கட்ட முடியும். தெற்கில் உள்ள வலதுசாரிய பண்புள்ள அவ்வப்போதான அரசுகளின் அபிலாசைகளுக்குள் அசைந்துகொண்டு இத்தகைய அமைப்பை கட்டுவது பற்றிகற்பனை செய்வதே தவறு.
– சாதிய, பால், வகுப்பை ஒடுக்குமுறை உட்பட்ட அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக எம்மை நாம் நிறுத்துகிறோம். இதனால் தான் நாம் இடது சாரிய அமைப்பாக எம்மை அடையாளப்படுத்திக்கொள்கிறோம். வலது சாரிய அரசியல் ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் உள்ளடக்கியதாக இருப்பதால், நாம் அதில் இருந்து மாறி அல்லது விலகி நிற்கிறோம்.
கடலூரான் சுமன்– ஒடுக்கப்படும் மக்களுக்கான தளத்தின் வளர்சிக்கு பெரிதும் உதவியாக இருப்பவர்கள் யார்..?
யோகேஸ் யோ – ஒடுக்கப்படும் மக்களுக்கான தளத்தின் வார்ச்சிக்கு உதவியாக இருப்பவர்கள்
ஒடுக்கப்படும் மக்களுக்கான தளம் உறுப்பினர்களால் இயக்கப்படும் அமைப்பு அதனால், அமைப்பின் வளங்களின் பயன்பாடு மற்றும் நிலைப்பாட்டுக்கு உறுப்பினர்களே பொறுப்பு. எமது அரசியல் நிலைப்பாடு மற்றும் செயற்பாட்டின் சரித்தன்மையில் உறுதி உள்ளவர்கள் அந்த செயற்பாடு தொடர வளங்களையும் ஏற்படுத்தி தர முன்வர வேண்டும், இதனால் தான் உறுப்பினர்களின் மாதாந்த பங்களிப்பை முதன்மை படுத்துகிறோம்.
ஒவ்வொருவரும் தமது வசதிக்கேற்ப தமது பங்களிப்பினை வழங்கும்படி கேட்கிறோம். மாதாந்த பங்களிப்பு செய்ய முற்றிலும் இயலாதவர்களையும் தனிப்பட்ட உரையாடலின் பின் அங்கத்தவர்களாக ஏற்றுக்கொள்வோம். ஆனால், பொதுவாக மாதாந்த பங்களிப்பு செய்யாதவர்கள் உறுப்பினர்களாக பதியப்படுவதில்லை.
ஒடுக்கப்படும் மக்களுக்கான தளம் , வாராவாரம் பல கலந்துரையாடல்கள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்கிறது.
உறுப்பினர்களின் பணிசுமைக்கு மத்தியிலும் , நேரங்களை ஒதுக்கி பங்குபற்ற வேண்டும் என்கிற புரிதல் இருப்பதை அறிவோம்.
கடலூரான் சுமன்– மக்களுக்கான அரசியல் தெளிவூட்டல்களில் நீங்கள் ஈடுபடும்போது அரசியல் தெளிவற்ற பாமரன் ஒருவர் வரும் மாகாணசபைத் தேர்தலில் நான் யாருக்கு வாக்குப்போடவேண்டும் எனக் கேட்டால் நீங்கள் எந்தக் கட்சியை அவருக்கு அடையாளப்படுத்துவீர்கள்?
யோகேஸ் யோ – மாகாண சபை தேர்தல் – 2009 யுத்தம் மௌனிக்கப்பட்டதின் பின்பாக இடம்பெறும் இரண்டாவது தேர்தல், போருக்கு பின்னரான வலிகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், ஒரு பாமர அல்லது சாதாரண குடிமகனுக்கு இன்றுவரை தெரிவுகள் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றே கூற வேண்டும் . வலிகளில் இருந்து வலிமை பெறும் இதய சுத்தியுடன் கூடிய ஒரு சுயாதீன போராட்ட இளையோர் சக்தி எமது எதிர்பார்ப்பு, அப்படி ஒரு வருகை இருக்குமாக இருந்தால் எமது அரசியல் தெளிவூட்டல்களில் நிச்சயம் ஆதரவு கொடுப்போம்.
ஏனெனில், மக்கள் விரோத கொள்கை உள்ள (வலதுசாரிய) கட்சிகள் பின்னால் திரள்வதால் எமது பலத்தை நாம் கட்டி விட முடியாது. மக்களின் கோரிக்கைக்களை முதன்மைப்படுத்தும் – மக்களின் நலன்களை முதன்மையாக வைத்து இயங்கும் – சனநாயக அமைப்பு ஒன்று அவசியம். அத்தகைய அமைப்பாக மக்கள் திரளாமல் எமது பலத்தை நாம் நிறுவிக் காட்ட முடியாது.
அதனால் அத்தகைய அமைப்பு ஒன்றை உருவாகுவது நோக்கி மக்களின் அரசியர் திரட்சி வேண்டும் என கோருகிறோம்.
கடலூரான் சுமன்– காணாமல் போனரைத் தேடும் போராட்டங்களில் பங்கேற்பவர் என்ற வகையில் காணமல்ப்போனர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு நீங்கள் எடுத்துள்ள முயற்சிகள் என்ன?
யோகேஸ் யோ – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடயங்களை அறிதல் தொடர்பில் 500 நாட்களை கடந்தும் இடம்பெற்று வருகின்ற போராட்டங்களில் ,நாமும் ஒரு போராட்ட சக்தி என்கிற வகையில் அந்த போராட்டத்தின் வலுவினை கூட்டும் வகையில் ஈடுபடுகிறோம். இந்த போராட்டம் பன்முகத்தன்மை பெற வேண்டும், சரியான தரவுகள் சேகரிக்கப்பட்ட வேண்டும், அன்று கையளிக்கப்பட்ட, கொண்டுசெல்லப்பட்ட உறவுகளுக்கு பாதுகாப்பு அமைச்சே தீர்வு சொல்ல வேண்டும் என்கிற நிலைப்பாடு உண்டு. அதை விட, மக்கள் வாக்குகளை பெற்று இன்று அரசுடன் இருக்கும் தமிழ் கட்சிகள் முறையாக இந்த போராட்டத்தை முன் எடுக்காத காரணத்தினால் , மக்கள் மற்றும் அமைப்புகள் முன்னெடுகின்றனர். அதனால், இந்த போராட்டம் ஒரு மாற்றத்தை எதிர் காலத்தில் ஏற்படுத்துவதற்கான தளமாக அமையும் என்பதை சிந்திக்கிறோம்.
கடலூரான் சுமன்- தொடர்ந்து சிறப்பாக செயல்ப்பட வாழ்த்துக்களைக் கூறுவதோடு உங்கள் நேரத்தை ஒதுக்கி பதில்களை தந்தமைக்கு மிக மிக நன்றி
- கடலூரான் சுமன்