“புலிகளின் பிடியிலிருந்து தமிழ்மக்களைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கம், அப்பாவித்தமிழ் மக்களைக் காப்பதற்காக எமது ராணுவத்தினர் தங்களது உயிர்களைத்தியாகம் செய்துள்ளனர்”, இப்படி தனது போர் வெற்றி உரையை நிகழ்த்தினார் அன்றைய இலங்கையின் ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான மகிந்த ராஜபக்சே. ராஜபக்சேவாக இருக்கட்டும், இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவாகட்டும் ராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றத்தில் இருந்தும் இனப்படுகொலைக்குற்றத்தில் இருந்தும் காப்பதில் ஓர் அணியில் நிற்கும் ஈரணி முகங்கள்.
தமிழர் வாழ் நிலங்களில் ஐந்து பேருக்கு ஒரு ராணுவச்சிப்பாய் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ராணுவச் சிப்பாய்களால் தமிழ் மக்கள் சூழப்பட்டுள்ளதைப் போல, தமிழர் நிலங்கள் ராணுவ முகாம்களின் வேலிகளில் அடைபட்டுள்ளன.
இலங்கையின் வடக்கு- கிழக்கில் மட்டும் குவிக்கப்பட்டுள்ள ராணுவம் அந்நிலத்தில் அமைதியைப் பாதுகாப்பதற்கானக் கருவி என்கின்றது இலங்கை அரசு. அப்படி ராணுவம் அமைதியை பாதுகாக்கும் இடத்தில் வாள்வெட்டு சம்பவங்கள், மர்ம நபர் தாக்குதல்கள், போதை மருந்து பயன்பாடுகள், பாலியல் வன்முறைகள் தொடர்ச்சியாக நிகழ்வது அரசின் கண்களுக்கு உறுத்தலாக இல்லை.
அரசு அதிகாரத்தின் துப்பாக்கிகள் ஓங்கியுள்ள வீதிகளில் வாள் வெட்டுக்கள், துப்பாக்கிச்சூடுகளின் ஆளுகை எத்தனை வேடிக்கையானது. ஒரு முறை இரு முறையல்ல இரண்டு ஆண்டுகளுக்குமேல் அது உச்சத்தைத் தொட்டுத் தொடர்கின்றது.
கடந்த ஆண்டு தீபாவளி தினம் அன்று யாழ்ப்பாணத்தில் மட்டும் வாள்வெட்டுக் குழுவினரின் தாக்குதலில் 29 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரே நாளில் இவ்வளவு பேர் வாள்வெட்டக்கு இலக்காகியது அம்மாவட்டத்தை கலங்கச் செய்தது. அதே நேரம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் தாயும் அவருடைய 12 வயது மகனும் கழுத்து அறுக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இது ஒரு எடுத்துக்காட்டுதான். இதுபோன்ற பல சம்பவங்கள் இன்று நிகழும் வன்முறைகளின் சான்றாக உள்ளது. அரச இனவாதத்தினால் போர் மூண்ட நிலத்தில், போரின் முடிவிற்குப் பின்னரும் தமிழ்மக்கள் மீண்டு வாழ முடியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த வன்முறைகளின் அச்சம் இளம் சமூகத்தை புலம்பெயர வைக்கின்றது. அப்படியான மண்ணில் இதுபோன்ற வன்முறைகள் நிகழ்வதை சட்ட-ஒழுங்கு பிரச்னையோடு மட்டும் ஒப்பிட்டு கடந்துவிட முடியாது.
கடந்த 30 அண்டுகளுக்கு மேலான நீண்ட, கடுமையான ரத்தம் தோய்ந்த யுத்த அனுபவம் கொண்ட ஒரு போலீஸாக இலங்கையின் போலீஸ் காணப்படுகின்றது. அத்தகைய போலீஸாரினுடைய பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பின் கீழ் வடமாகாணம் இருக்கிறது. இலங்கையின் ஏனைய மாகாணங்களில் உள்ள போலீஸாரினுடைய தொகையையும் அதனுடைய அமைப்பையும் விட, வடமாகாணத்திற்கான போலீஸ் பிரிவினுடைய பலம் அதிகமானது. எனவே வடக்கில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ், ராணுவம், கடற்படை இவற்றையெல்லாம் மீறித்தான் இந்த வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன.
இந்த ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு பணயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு ஒரு நிகழ்வில் உரையாற்றுகையில், இலங்கையிலேயே அதிகம் மதுபானம் விற்பனை செய்யப்படுகின்ற மாகாணமாக வடமாகானம் இருக்கிறது. அதிக போதப்பொள் பாவனை உள்ள மாகாணமாகவும் வடபகுதி உண்டு என தெரிவித்திருந்தார்.
வடக்கு கிழக்கில் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து வருவது கல்வி, கலாசாரம், வளர்ச்சி ஆகியவற்றை சிதைப்பதற்காகவும் தமிழ் சமூகத்தை ஒழிப்பதற்கும் நன்கு திட்டமிட்டு நடத்தப்படுவதாக தெரிகின்றது’ என வேம்படி மகளிர் கல்லூரியில் நிகழ்த்திய உரையில் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருக்கிறார். ராணுவத்தின் துணையுடன் போதைப் பொருள் மற்றும் மது பரப்பப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
இலங்கை காவல் துறையின் கணக்குகள் அடிப்படையில், 2009 ஆம் ஆண்டு 7 லட்சம் லீட்டர்கள் பீர் விற்பனையாகியுள்ளன. அதுவே 2013 ஆம் ஆண்டு ஐந்து மடங்காக உயர்ந்து 40 லட்சம் லீட்டர்களை அடைந்துள்ளன.
அதே நேரம் யாழில் நடக்கும் சமூக விரோத செயல்களுக்குத் தடையற்ற மது, போதைப் பொருள் பயன்பாடே முழுக்க முழுக்க காரணமாகும். 2009 மே-18ம் தேதிக்கு முன் பின் என்று வகைப்படுத்திப் பார்த்தால் இதன் சூட்சுமத்தினை அறிந்து கொள்ள முடியும்” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வடமாகாணத்தின் மகளிர்விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்,
”விடுதலைப் புலிகளின் காலத்தில் சாராயம் ,கள் போன்றவற்றின் விற்பனை மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. போதைப் பயன்பாடு என்பது முற்றிலும் இல்லாத சூழல் காணப்பட்டது. இந்த நிலை இன்று இல்லை. மது,போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் நிலை திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் உள்ள காவல்துறையினரின் செயற்பாடு இக்குற்றங்களைத் தடுக்கும் வகையில் இல்லாது ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. தேச விடுதலைக்காக உயிர்நீத்த உறவுகளுக்கு விளக்கேற்றி வணக்கம் செலுத்துவோரையும் தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டங்களில் முன்நிலை வகிப்பவர்களையும் தேடித் தேடி கைது செய்யும் இலங்கை ராணுவம் மற்றும் புலனாய்வுத் துறை, சட்டவிரோத போதைப்பொருள் வரத்துக்களை கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. அதாவது, தமிழர்களை சீரழிக்கும் எதுவாகிலும் அதை கண்டுகொள்ளாது விடுவது அல்லது ஊக்குவிப்பது என்ற நிலைப்பாட்டின் கீழ் இலங்கை ராணுவ தரப்பும் காவல்துறையும் செய்றபடுகின்றது” என்றார்.
2009ம் ஆண்டு மக்களைத் தடுத்து வைத்திருந்த முகாம்களில் ஆரம்பிக்கப்பட்ட “பேய்கள் குழந்தைகளைக் கடத்துகின்றன” என்ற அச்சுறுத்தல் முதல் கிரீஸ் பூதம், ஆவா குழு,வாள்வெட்டு, தற்போது துப்பாக்கிச் சூடு,போதைப்பொருள் விநியோகம் என வன்முறைகளும் சமூக விரோத செயற்பாடுகளும் பல வடிவங்களைப்பெற்றுள்ளது. இந்த வகையிலான சம்பவங்கள் முப்பது ஆண்டுகால போர் வாழ்வை கண்ட அந்நிலம் சந்தித்திராத புதிய பாணியிலானத் தாக்குதல் என்றே கூற வேண்டும். சத்தங்கள் அற்று தமிழர்களை சீர்குலைக்கச்செய்யும் இந்த வன்முறைகளுக்கு திட்டம் தீட்டியது 2005ம் ஆண்டு முதல் 2014 வரை பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷேவே என சந்தேகங்கள் உள்ளன. அவரே ஆவா குழுவை உருவாக்கி வழிநடத்தியதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ‘நல்லாட்சி’ வேடம் போடும் இன்றைய அரசாங்கம் போருக்கு பின்னரான வன்முறைகள் குறித்து எவ்வித விசாரணைகளையும்மேற்கொள்ளவில்லை. இதற்கு பின்னால், ராணுவ புலனாய்வு கரங்கள் உள்ளன என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஆழமாக உள்ளது.
தொடரும்….