தமிழில் சமகாலத்தில் பெண் மன உளவியலைப் பேசும் சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதிவருபவர் எழுத்தாளர் ரமேஷ் ரக்சன். பதின் பருவத்தில், உலகின் வேறு வேறு நிழல்கள் தன் மீது படிவதைக் கண்டுணரும் யுவன், யுவதிகளின் அன்றாடங்களில், புதிது புதிதாய் முளைவிடும் மாற்றங்களையும், மனச் சிக்கல்களையும், அதன் விடுபடல்களையும் பேசும் படைப்புகள் இவருடையவை. ’16’ மற்றும் ‘ரகசியம் இருப்பதாய்’ 16, ரகசியம் இருப்பதாய் சிறுகதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து தற்போது ‘பெர்ஃப்யூம்’ எனும் தன்னுடைய மூன்றாவது நூலினை யாவரும் பதிப்பகம் வழியாக வெளியிடும் எழுத்தாளர் ரமேஷ். சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். ரமேஷ் ரக்சன்.
நிலவன் :- இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டுள்ளவர் நீங்கள். உங்களின் குடும்பப் பின்னணி, கல்விப் பின்னணி என்பன பற்றிக் கூறுவீர்களா?
ரமேஷ் ரக்சன் – நன்கு அறியப்படுவேன் என்ற கூற்றை மறுக்கிறேன்.
குடும்பம்: அப்பா பெருமாள். அம்மா பொன்ராணி. தம்பி சரவண தினேஷ். மற்றும் நான் (ரமேஷ்.பெ) அப்பா விவசாயி & டெய்லர், அம்மா கொஞ்சகாலம் பீடி சுற்றினார், தற்போது இல்லத்தரசி, தம்பி MA வரலாறுபடித்துக்கொண்டிருக்கிறார். ரமேஷ்.பெ MBA
நிலவன் :- உங்களின் பெயர் எதைக் குறித்து நிற்கின்றது அது இயற்பெயரா அல்லது புணைபெயரா அது உருவாகியது பற்றி கூறுங்கள் ?
ரமேஷ் ரக்சன் – “ரக்சன்” என் பெயருக்குப்பின்னால் நான் சேர்த்துக் கொண்டது. எண்பதுகளில் பிறந்தவன் என்பதால் “ஷ்” என்றுமுடியும்படி பெயரிடும் மோகம் அதிகமுள்ள காலம் அது.அதிலும் என் ஊரில் மட்டும் “ரமேஷ்” இப்போதையநினைவின்படி ஏழு பேருக்கு என் பெயரே… ஆகவே ஒரு தற்செயல் முடிவாய் “ரமேஷ் ரக்சன்” என்று சேர்த்து இப்போது நிலைத்துவிட்டது. ரக்சன் அண்ணன் மகனின் பெயர் (உறவின்படி அத்தான்)
நிலவன் :- உங்களுக்கு இலக்கியத்தில் எவ்வாறு ஈடுபாடு ஏற்பட்டது?
ரமேஷ் ரக்சன் – ஈடுபாடு என்று சொல்வது சரியாக இருக்குமா என்றுத் தெரியவில்லை. ஒரு athlete player-க்கான குச்சியை கொண்டு வந்து சேர்த்துக்கொண்டிருப்பது போல கதைகள் என்னுள் சேர்ந்து கொண்டும், அவைகளே என்னோடுபோட்டிப்போட்டுக்கொண்டும் இருப்பதால், அந்தப்பழக்கத்தையே நீங்கள் ஈடுபாடு என்கிறீர்கள். அந்த சிறுகதைக்கான குச்சியைக் கொடுத்தது ஜீவகரிகாலன்.
நிலவன் :- நீங்கள் எழுத்துத்துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு உந்து சக்தியாக அமைந்த பிரதான காரணியென எதனைக் கருதுகிறீர்கள்?
ரமேஷ் ரக்சன் – நண்பர்களுக்கும், அக்காக்களுக்கும் காதல் கடிதம் எழுதிக் கொடுத்தது. கவிதை எழுதிக் கொடுத்தது. உந்துசக்தி என்பது அன்றைய நாளில் அவர்கள் பாராட்டியது என்று சொல்லலாம்.
நிலவன் :- எழுதியே ஆக வேண்டுமென்ற எண்ணம் எப்போது தோன்றியது ?
ரமேஷ் ரக்சன் – ரகசியம் இருப்பதாய் தொகுப்பிற்கு எனக்கு வைக்கப்பட்ட சவால் மற்றும் deadline. (அதை நல்லபடியாக முடித்திருந்தாலும்) இன்றும் தொடரும் பசி,
நிலவன் :- தங்களுடைய ஆரம்பக்கால எழுத்திற்கும் இன்றைய எழுத்திற்கும் உள்ள வித்தியாங்கள் என்ன?
ரமேஷ் ரக்சன் – என்னளவில் ஒரு பயற்சி போலவே ஒவ்வொரு தொகுப்பிற்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறேன். வித்தியாசங்களை நான்தான் ஆராய்ந்து கூற வேண்டுமா?
நிலவன் :- கருத்துக்களை இலக்கியப் படைப்புகளில் கருப்பொருளாகக் கொள்ளும்போது, அப்படைப்புகளினூடாகச் சொல்ல வேண்டியவற்றைத் தெளிவாகச் சொல்லலாம் எனக் கருதுகிறீர்களா? தெளிவின் வரையறை என்ன?
ரமேஷ் ரக்சன் – கருத்து சொல்ல வேண்டுமென்றதிணித்தலோடு கதைகளை நான் எழுதத் தொடங்குவதில்லை.
நிலவன் :- எழுத்தாளனுக்கும், கவிஞனுக்கும், விமர்சகனுக்கும் என்ன வித்தியாசம்? இதில் தாங்கள் யார்?
ரமேஷ் ரக்சன் – ஒவ்வொரு கதையை எழுதத் தொடங்கும்முன் எனக்கு நானே கதையோடும், அதிலாடும் நபர்களோடும் விமர்சனம் செய்து கொள்பவனாக இருக்கிறேன். கையாளும் வழிமுறை வேறாக இருக்குமே தவிர வித்தியாசம் என்று வரையறுக்க மனம் விரும்பவில்லை.
நிலவன் :- உங்களின் நூல்கள் பற்றிய சுருக்கமான விபரங்களைக் கூறுங்கள்?
ரமேஷ் ரக்சன் – ’16’ முதல் தொகுப்பு
மிகவும் திட்டமிடப்பட்ட தனக்கேயான பாணி யொன்றில் பதினாறு கதைகளையும் சொல்லிச் செல்கிறார். ர.ர கதைகளின் தளம் அனேகமாக பதின்மவயதில் இருப்பவர்களின் வாழ்வியலைச் சொல்லுகிறது. குறுங்கதைகளான கேப்ஸ்யூல்கள் வீரியமானவை. அவை, எந்த தத்துவார்த்த, சித்தாந்த, அரசியல் சார்பு நிலையுமற்று யதார்த்த உலகில் நின்றபடி, அதிகம் சொல்லப்படாத நிலக்காட்சிகளுடனும், திணை அழகியலுடனும் கதைகளுக்குள் எழுதப்பட்டிருக்கின்றன.
ரகசியம் இருப்பதாய்
’16’ தொகுப்பில் பால்யத்தில் உலவியவர்கள் எல்லாம் இந்தத் தொகுப்பில் பதின்மத்தை கடந்துவிட்டார்கள். இதில் அநேகக் கதைகளில் கிராமங்களிலிருந்து நகர்ந்து நகரங்களுக்குக் குடிபெயர்ந்தவர்களின் மனவோட்டத்தை உணர்த்துகிறது. ஒரு கதை சொல்லியாகவே தன்னை நீட்டித்துக் கொண்டு, பெண்களின் ஆளுமையை அழுத்தமாகப் பதிவு செய்வதின் மூலம், கிராம, நகரத்திலிருக்கும் பாலியல் சிக்கல்கள் பற்றிச் சொல்லிடும் துணிச்சல் ரமேஷிற்கு இருப்பதை உணர முடிகிறது.
பெர்ஃப்யூம்
உடலுக்கு உடல் வேறுபடும் வாசனை, சொல்லிமாளாத் தனிமை மீது, ஓசையின்றி படர்வதை இச்சையென வகை பிரித்துவிடுவது வாசிக்கும் மனத்தைப் பொறுத்தவரைகூட ஒரு தனிமனித அபத்தம் தான். அடர்ந்த மௌனத்தைத் துளைப்பது மட்டுமே எழுதுபவன் வேலையல்ல. யாருக்கு இவற்றைச் சொல்லுகிறோம்? ஏன் சொல்லுகிறோம்? என்பது அதைவிட முக்கியம். இவன் கதைகளின் வழியே பதினைந்து ஆண்டுகள் கழித்து வளர்ந்து நிற்கப் போகிற இளையவர்களின் விரல் பற்றிக்கொள்கிறான். அவர்கள் இப்போது நம் வீடுகளில் குழந்தைகளாக நம் கண் முன்னே விளையாடித் திரிந்துகொண்டும் நம்மைக் கவனித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
நிலவன் :- உங்களுக்கு முகவரி தந்த படைப்பு, எப்படிஉருவானது? அது முற்றிலும் புனைவா? அல்லது உங்கள் வாழ்வனுபவத்திலிருந்து உருவானதா?
ரமேஷ் ரக்சன் – என் அனுபவங்களில் இருந்து இன்னும் எழுதத் தொடங்கவில்லை. நான் நிறைவற்றவன். எது முகவரி என்றமுடிவுக்கு வர இயலும் என்று நம்பிக்கையில்லை.
நிலவன் :- உங்களுடைய கதைக்கரு எப்படி உருவாகிறது? கிடைத்த கருவை எப்படிக்கதையாக்குகிறீர்கள்?
ரமேஷ் ரக்சன் – உதாரணத்திற்கு ஒரு கதையின் கரு சொல்கிறேன்.
தாம்பரத்திலிருந்து பைக்கில் வடபழனி நோக்கி வரும் வழியில் ஒரு சிக்னலில் நின்று கொண்டிருக்கையில், என் எதிர் சிக்னலில் நின்ற காரின் உள்ளே இளம் பெண்ணொருத்தி,சிறுவனை அவன் கன்னத்தைக் கடிக்கையில் கண்ணாடிவழியே அவள் முகத்தில் தெரிந்த அல்லது நான் பார்த்த முக பாவனையே “பதினேழு இரவுகள்” சிறுகதை. பெர்ஃப்யூம் தொகுப்பில் உள்ளது.
நிலவன் :- உங்கள் கதைகளில் ஒரு உளவியல் நிலம்சார் விழிப்புணர்வு காணப்படுகிறது அது பற்றி கூறுங்கள் ?
ரமேஷ் ரக்சன் – விழிப்புணர்வு என்பது வாசிப்பவரின் பார்வை சார்ந்தது.மேற்படி நான் வேடிக்கைப் பார்ப்பவனாகவும் காதுகொடுப்பவனாகவும் இருக்கிறேன். அதுவே இன்றுவரை என்னை நகர்த்தியிருக்கக் கூடும் என்று நம்புகிறேன்.
நிலவன் :- கதைகள் காட்டி நிற்கும் பருவ மாற்றங்கள் உடல் உள மாற்றங்கள் அல்லது அதன் வளர்ச்சி என்பனவற்றை எவ்வாறு கதைகளாக படைக்க முடிகிறது ?
ரமேஷ் ரக்சன் – நான் காண்பவைகளின் மூலமும், கேட்பவைகள் மூலமும்,அதற்கான பின்புலத்தை ஆராய்ந்து அதன் மூலம் எனக்கெனஒரு தத்துவத்தை வகுத்து, அவற்றையே கதைகள் ஆக்குகிறேன். எல்லா சம்பவங்களும் உரையாடலின் நிமித்தம் கதைகளாகவே ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கடத்தப்படுகிறது. அந்த வகையில் கதைகளாக சொல்வது எனக்குக் கடினமாகத் தெரியவில்லை.
நிலவன் :- தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
ரமேஷ் ரக்சன் – சில இடங்களில் காது கொடுக்கிறேன். சிலரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
நிலவன் :- இணையத்தள வலை அமைப்புகளினூடாக இன்று வெளியிடப்படும் படைப்புகள் வெகுசன மட்டத்தில் சென்றடையக்கூடிய வாய்ப்புகளை எவ்வாறு ஏற்படுத்தலாம்?
ரமேஷ் ரக்சன் – அவரவர் சாமர்த்தியம் சார்ந்தது
நிலவன் :- வாசிப்பு – எழுத்தாற்றலின் உந்தலுக்கு உள்ள உறவை எப்படிப்பார்க்கிறீர்கள்?
ரமேஷ் ரக்சன் – உறவா என்றால் பதில்லை. சொற்களின் பாலம் என்று சொல்வேன்.
நிலவன் :- உங்களுடைய எழுத்துப்பயணம் உங்களுக்கு நிறைவைத்தந்திருக்கிறதா?
ரமேஷ் ரக்சன் – நிறைவின்மையே எழுத்து.
நிலவன் :- ஒரு எழுத்தாளன் பிறக்கிறனா? உருவாக்கபடுகின்றானா?
ரமேஷ் ரக்சன் – உருவாக்கப்படுவதன் மூலம் ஒவ்வொருமுறையும் பிறக்கிறான்.
நிலவன் :- விமர்சனங்கள், அல்லது எதிர்மறை கருத்துக்களை எப்படி பார்க்கிறீர்கள் ?
ரமேஷ் ரக்சன் – அவர்கள் நிலைப்பாடு என்ற அளவில் நிறுத்திக்கொள்கிறேன்.
நிலவன் :- இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல வருப்புகின்றீர்கள் ?
ரமேஷ் ரக்சன் – நான் இன்னும் இளம் எழுத்தாளர் பட்டியலில் இருப்பதாய் நம்புகிறேன்.
நிலவன் :- அடுத்து உங்களின் திட்டங்கள் ?
ரமேஷ் ரக்சன் – “நாக்குட்டி”நாவால் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த வருடம் 2018ஜூலை மாதம் கொண்டு வரும் திட்டமிருக்கிறது.
களம்: முதல் பார்வையில் வரும் காதலில் இருந்து லிவிங் டுகெதர் நோக்கி நகரும் ஒரு பெண்ணின் சாதுர்யமும், அவளின் madness-ம் நவம்பரில் மீண்டுமொரு குறுநாவல் வெளியிடும் திட்டமும்இருக்கிறது.
களம்: அடுத்தவர் ரகசியங்களை வலுக்கட்டாயமாக அறியத்தொடங்கி அதை விருந்து வைத்து, அதில் குளிர் காயத் தொடங்கியிருக்கும் இன்றையச் சூழலில் (இதில் Scandal வராது) ஒவ்வொருவரையும் எப்படி தனிமனிதனாக்கி, தனிஉலகமாக்கி அது என்னவாகப் போய் நிற்கும் என்பதை யூகித்தும், அப்படிப் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து அதுவே அறமென, தவறில்லையென, பேசத் தொடங்கியவர்களின் நிலைப்பாடு பற்றியும், சுயமோகம்பற்றியும் இரண்டு பெண் கதாப்பாத்திரங்கள் கொண்டுபேசுகிறேன்.
நிலவன் :- நிறைவாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
ரமேஷ் ரக்சன் – ஒவ்வொருவருக்குள்ளும் ஒத்துக்கொள்ள மறுக்கிற ஓர் ‘ஆமாம்’ இருக்கிறது.
நூல்களை பெற்றுக் கொள்ள இங்கே அழுத்துங்கள்
http://www.discoverybookpalace.com/
https://www.commonfolks.in/books/ramesh-rackson