வட தமிழீழம் ,முல்லைத்தீவு கேப்பாபுலவு சிறிலங்கா இராணுவ முகாம் முன்பாக சிறிய எரிபொருள் விற்பனை நிலையத்தினை நடத்தி வந்த கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த ஒருவரின் கடையை குறித்த இடத்தில் நடத்த முடியாது என தெரிவித்து முள்ளியவளை பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவது,
முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் அண்மையில் மீள்குடியேற்றப்பட்டு தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு சிறு எண்ணெய் கடை ஒன்றினை வைத்து நடத்தி வந்த குடும்பத்தினை கடையினை மூடுமாறு முள்ளிவயை சிறிலங்கா காவல்துறையினர் அறிவித்துள்ளதாக கடையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கேப்பாபுலவில் சிறிலங்கா படைத்தலைமையம் அமைந்துள்ள இடத்திற்கு முன்னால் அண்மையில் இராவத்தால் விடுவிக்கப்பட்ட தமது நிலத்தில் மீள்குடியேறிய குடும்பம் ஒன்று சிறு பெட்டிக்கடையாக எண்ணெய் கடை ஒன்றினை வைத்து நடத்தி வந்துள்ளார்கள்.
இன்னிலையில் சிறிலங்கா படையினரின் முகாமிற்கு இது பாதுகாப்பு இல்லை எனவும் இந்த கடை இந்தப்பகுதியில் இருப்பதால் இராணுவத்துக்கு இது ஆபத்தாக அமையும் என தெரிவித்து முள்ளியவளை சிறிலங்கா காவல்துறையினர் குறித்த கடையை மூடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சிறிலங்கா இராணுவம் தமக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இராணுவத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தினாலேயே குறித்த கடையை நடத்த வேண்டாம் என தாம் உத்தரவிடுவதாக முள்ளியவளை பொலிஸார் தமக்கு தெரிவித்ததாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.
தமது காணிகளை அத்துமீறி பிடித்துவைத்துள்ள இராணுவம் அந்த நிலங்களில் உள்ள தமது வாழ்வாதாரங்களை வருமானங்களை தம்மை பெற விடாது தாமே அனுபவித்துவரும் நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்ட தமக்குரிய நிலத்தில் கடன்களை பெற்று சிறியமுதலீட்டை செய்த்து இந்த வியாபார நிலையத்தினை நடாத்திவரும் நிலையில் சிறிலங்கா இராணுவத்தின் ஏவலில் சிறிலங்கா காவல்துறையினர் தமது நடவடிக்கைக்கு தடைபோட்டிருப்பது வேதனை அளிப்பதாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.
சிறிலங்கா இராணுவம் தமது நிலங்களை விடுவித்து விட்டதாக கூறிக்கொண்டு விடுவித்த எமது நிலங்களில் நாம் சுதந்திரமாக தொழில்செய்ய தடைவிதிப்பதாக கடையின் உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.