அந்தக் குலைவுகளுடன் எதிரிகளின் எறிகணைகளின் சிதறல்களும் இணைந்துவிட பெரும் பூகம்பம் வந்து ஓய்ததேசம் போலக் காட்சிதந்தது முகமாலை. கிழறியெறியப்பட்ட அந்தக் களத்தில் பெய்த மழையால் எங்கு கால்வைத்தாலும் வழுக்கிக் கொண்டிருந்தது. அந்த வழுக்கலுக்குள்ளாலும் செங்கதிர் மிகவும் வேகமாக நடந்து கொண்டிருந்தான். ஒரு கால் எடுத்து வைத்துவிட்டு அடுத்த கால் எடுத்துவைப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் அந்தக் களத்தில் துப்பாக்கியுடன் இந்தப் போராளிகள் விரைவாக நடந்து செல்வது அவர்களின் பரீட்சையத்தை எங்களிற்குப் புலப்படுத்துவதாய் இருந்தது.
“இந்த வழுக்கலுக்குள்ளால இவ்வளவு வீச்சாய் நடக்கிறியள்” என்று செங்கதிரிடம் கேட்க “இது எங்களுக்குப் பழகிப்போச்சுது. ஒரு நாழுக்கு எத்தின தரம் இதால நடக்கிறநாங்கள்” என்றவன் தங்களுக்கு இது எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றது போலக் கதையை முடித்துக் கொண்டான்.
இப்படியே கதைத்துக்கொண்டு களமுனைப் போராளிகளிற்கு மருத்துவம் செய்கின்ற சிறிய முகாம் ஒன்றிற்குள் சென்றோம். அந்த முகாமிற்குள் சில போராளிகள் கூடியிருந்து கதைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எங்களைக் கண்டதும்“பிறகென்ன போர்முகம் முகமாலையில கலக்கப்போகுது” என்றபடி “வாங்கோ வணக்கம்” என்றார்கள். நாங்களும் “வணக்கம்” சொல்லியபடி அந்த மருத்துவ முகாமிற்குள் சென்றோம்.
மருத்துவ முகாமிற்குள் போராளி ஒருவன் காயமடைந்த போராளி ஒருவனுக்கு மருந்து கட்டிக்கொண்டிருந்தான். நாங்கள் உள்ளுக்குள் சென்றது அவர்களிற்குத் தெரியாமல் இருந்திருக்கவேண்டும். மருந்து கட்டுபவருக்கு காயமடைந்த போராளி “மச்சான் இறுக்கி உரஞ்சாமால் சும்மா நையிசாய்க் கட்டு” என்று சொல்லச் “சும்மா இரு மச்சான் சிதலை கொஞ்சம் அமத்தி எடுத்தால்த் தான் காயம் கெதியாய் மாறும்” என்றான் அந்தப் போராளி. “என்னடாப்பா காயத்துக்கு உரஞ்சுறத எண்டால் பயம் பிறகு கெதியாய் காயத்தை மாத்தி விடுங்கோ நாங்கள் லையினுக்குப் போகவேணும் எண்டு பெரியகதை கதைப்பியள்” என்று மருத்துவப் போராளி சொல்ல “லையினுக்குப் போறதுக்கும் காயத்துக்கு மருந்து கட்டுறதுக்கும் சம்மந்தம் இல்லையடாப்பா. அங்க என்ர பொயின்ருக்கு நான் போக வேணும். இப்ப எங்களுக்கு பொயின்ற் தானே வீடு.” என்று அவர்களின் உரையாடல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அவர்களின் வேலையை நாங்கள் குழப்பிக்கொள்ளவில்லை அதனால் அந்த அறையின் வாசலில் இருந்து வெளியே வந்துகொண்டோம். அங்கிருந்த போராளிகளில் அறங்கீரன் என்ற போராளி தலையில் ஒரு சிறிய கட்டுப்போட்டபடி வரிச்சீருடையுடன் இருந்தான். அந்தப்போராளியிடம் “என்ன தலக்கட்டோட இருக்கிறியள்” என்று கேட்க அவன் எழுந்து “இந்தச்சண்டையில தலையில ஒரு சின்னக்காயம் அதுதான் இஞ்ச கொண்டு வந்து விட்டுட்டாங்கள்”என்றான். “எனக்குச் சின்னக் காயம் தான் பட்டிருக்கிது. அதால இஞ்ச பின்னுக்கு மெடிக்ஸ்சில கொண்டு வந்து விட்டினம் நான் இப்ப லையினுக்குப் போகவேணும்.” என்றவன் மெதுவாகச் சினந்து கொண்டான். சிறு அமைதிக்குப் பிறகு “அங்க நிலமையள் என்னமாதிரியோ தெரியாது” என்று கூறியபடி அங்கலாய்த்துக் கொண்டான். “காயம் சின்னன் என்டாலும் தலைக்காயம் கொஞ்சம் ஆறிப் போங்கோவன்.”என்று அந்தப் போராளியைத் தேற்றிக் கொண்டோம்.
தனது காயம் மாறுவதற்கிடையில் களத்திற்கு மீண்டும் போக வேணும் என்று அங்கலாய்க்கும் அறங்கீரனிடம் “சண்டையில நீங்கள் எந்தப்பக்கம் நிண்ட நீங்கள்” என்று உரையாடலை ஆரம்பித்தோம். மெதுவாக வாயை அசைத்த அந்தப் போராளி “நாங்கள் தான் கண்டல் சயிற்றில நிண்ட நாங்கள்” என்றான். “அப்ப உங்கண்ட பக்கம் தானே சண்டை முதல் தொடங்கினதாம்.” என்று கூற ஒரு முறை சிரித்துக்கொண்டான். இளமையான முகத்தின் சிரிப்பு அந்தப் போர் வீரனின் துணிவின் வெளிப்பாடாய்த் தெரிந்தது. அவன் தொடர்ந்தான். “எங்கண்ட பொயின்;ருக்கு நேரதான் அவன் முதல் முட்டிச் சண்டையைத் தொடக்கினவன்” என்றான். “ஓ.. அப்ப பேந்தென்ன நீங்கள் தான் நாங்கள் தேடி வந்த ஆழ் இஞ்ச இருக்கிறியள் பறவாயில்லை” என்று கூற “காயப்பட்டுப் பின்னுக்கு நிண்டு இப்பத்தான் இஞ்ச வந்தநான்” என்றான். “சரி சண்டை எப்பிடி முதல் தொடங்கினது எண்டுறதப்பற்றிச் சொல்லுங்கோவன்” என்று சண்டைக் கதையை ஆரம்பித்தோம். அறங்கீரன் மீண்டும் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டுச் சண்டை ஆரம்பித்த கதையைத் தொடங்கினான். “ஏழாம் திகதி விடிய நேரத்துக்கு வழமைய மாதிரியே நாங்கள் எழும்பி எல்லாம் அலேட்டில நிண்ட நாங்கள்.
அவன்ர நடமாட்டம் எல்லாத்தையும் நல்ல வடிவாய்ப் பாத்திட்டம் ஆனால் அவன்ர நடவடிக்கை ஒண்டையும் காணவே இல்லை. இருந்தாலும் நாங்கள் சென்றீல எல்லாரும் இருந்தம்” என்றான். “இப்பிடியே இருக்க நேரமும் ஐஞ்சு இருவது ஆகிக் கொண்டிருந்திது. இப்ப சாடையான பனிக்காலம் தானே அதால பனியும் சாடையாய் பெய்யத்தொடங்கீட்டுது. அப்ப அண்டைக்குக் குளிரும் கொஞ்சம் கூடவாய் இருந்திது.” என்றவன் “பல்லும் பல்லும் அடிபடத் தொடங்கீட்டுது. அப்ப பிளேன்ரி ஒண்டு குடிச்சால் குளிருக்கு அந்த மாதிரி இருக்கும் எண்டுற மாதிரி இருந்திது. அப்ப அதுக்கு செற்றப் செய்வம் எண்டு வெளியால வந்திட்டன். பிறகும் கொஞ்ச நேரம் செல்லட்டும் பிளேன்ரிய வைப்பம் எண்டு நினைச்சுப் போட்டு அப்பிடியே வந்து அவன்ர பக்கம் ஏதும் நடமாட்டம் இருக்கிதோ எண்டு வடிவாய் அவதானிச்சன். ஒண்டையும் காணேல்ல. அப்பிடியே எங்கன்ட பொயிசனுக்குள்ள வந்திட்டன். அப்ப கொஞ்ச நேரத்தால திடீரெண்டு மயின்ஸ் வெடிச்ச சத்தம் கேட்டுது”என்று கதையைச் சொல்லிக் கொண்டிருக்க எதிரியின் எறிகணை ஒன்று எங்களை நோக்கி வருவதற்கான சத்தம் கேட்டது.
“உள்ளுக்கு வாங்கோ போய் இருப்பம் இது சத்தம் வித்தியாசமாய் இருக்குது” என்றான் அறங்கீரன். நாங்கள் எல்லோரும் பதுங்கு குழிக்குள் சென்று சில மணித்துளிகளில் எங்கள் காதைக் கிழித்துக் கொண்டு எங்களிற்குச் சற்றுப் பின்னுக்குச் சென்று வீழ்ந்து வெடித்தது அந்த எறிகணை. எறிகணை விழுந்து வெடித்தவுடன் “அண்ண சண்டையில தப்பி செல்லில ஏன் சாவான் எதையும் சாதிச்சுக்காட்ட வேணும்” என்றான். அப்படியே பதுங்கு குழிக்குள் இருந்த படியே அறங்கீரனுடன் சண்டை அனுபத்தைப் பகிரத் தொடங்கினோம். அறங்கீரன் கதையைத் தொடர்ந்தான்.
“மூண்;டு மயின்ஸ் தான் அண்ண வெடிச்சது. அந்தளவும் தான். நாங்கள் அலேட்டாகீட்டம். வெடிச்சத்தத்தோட ஆமிக்காறங்கள் றவுண்ஸ் அடிக்கத் தொடங்கீட்டாங்கள். நாங்கள் எல்லாரும் ஆக்களுக்கு ஒரு இடத்தில நிலை எடுத்து அவதானிச்சுக் கொண்டிருந்தம். காலமை விடியிற நேரம் அது. பனிப்படலங்கள் அதோட சாதுவான இருள் இப்பிடியிருக்க அவன்ர நகர்வுகள் எங்களுக்கு வடிவாய்த் தெரியேல்ல. இதுக்கிடையில அவன்ர செல்லுகள் எல்லாம்”என்றவன் “சும்மா எல்லாம் அதிர்ந்து கொண்டிருந்திது” என்றான். “இப்பிடி இருக்க ஆமிக்காறங்கள் வாறது எங்களுக்கு மெதுவாய் தெரிஞ்சுது. அவன் என்ன படைபடையாய் வந்து கொண்டிருந்தான்.
நாங்களும் எங்கண்ட பொயின்ரில இருந்து எங்கள நோக்கி வாற அமிக்காறருக்கு எதிர்ப்பைக்காட்டிக் கொண்டிருந்தம். குறிப்பிட்ட ரவுண்ஸ் அடிச்சம். அந்தளவு தான் விழுறவன் விழ மற்றவங்கள் வந்து கொண்டேயிருந்தாங்கள். அப்ப எங்களுக்கு விளங்கீட்டுது இது வழமையாய் அவன் வந்து அடிச்சிட்டு ஓடுறமாதிரி நடவடிக்கை இல்லை. திட்டமிட்டு முன்னேறுற ஒரு நடவடிக்கை எண்டுறது. அதுக்கு ஏற்ற மாதிரி நாங்களும் சண்டையப் பிடிச்சம்.”என்றாவனின் முகத்தில் ஒருவித வேகம் தெரிந்தது.
“அவன்ர நடவடிக்கையும் மூர்க்கமானதாய் இருந்திது. எங்கண்ட பொயின்ற்றில இருந்து இருபத்தைஞ்சு மீற்றரில ஆமிக்காறங்கள் வந்திட்டாங்கள்.
அந்த நேரம் எங்கண்ட பொயிற்ரில நான் செழியன் மதி மூண்டு பேரும் தான் இருந்த நாங்கள். என்றவனிடம் “இப்ப அவன் உங்களுக்கு நல்லாக்கிட்ட வந்திட்டான்” என்று கூறத் தலையை ஆட்டியவன் தொடர்ந்தான். “இப்பிடி இருக்க மதி சொன்னான் மச்சான் அவன் உடைக்கப்போறான் நாங்கள் விடக்கூடாது. உயிர் போனாலும் விட்டுடாதேங்கோடா அவனை இதில இருந்து ஒரு அடி கூட முன்னுக்கு கால் வைக்க விடாமல் அடியுங்கோடா” என்று சொல்ல “நாங்கள் எங்கண்ட எதிர்பபைத் திடீரெண்டு கூட்டி அடிக்கத் தொடங்கீட்டம். எங்கண்ட எதிர்ப்புக் கூடின தோட அவன் பயந்து போயிருக்க வேணும். எல்லாரும் கொஞ்சம் பின்னுக்குப் போட்டாங்கள்.
அவன் போய்க் கொஞ்ச நேரத்தில எங்கண்ட பொயின்ருக்கு ஆர்.;பி.ஜி அடி அளவு கணக்கில்லாமல் வரத்தொடங்கீட்டுது.”என்றவனிடம் “ஏன் உங்கண்ட எதிர்ப்புக் கூடினதோட அவன் கூடுதலாய் அடிக்கத் தொடங்கீட்டான் போல” என்றோம். “ஓம்… ஓம்…” என்றவன் தொடர்ந்தான். “எங்கண்ட எதிர்ப்புக் கூடுதலாய் இருக்க அவனால எங்கண்ட பொயிசனைப் பிடிக்கேலாமல் போட்டுது. அதால பி.கே, ஆ.ர்.;பி.ஜி எல்லாத்தையும் ஒருங்கிணைச்சுப் போட்டு எங்கண்ட பொயிசனுக்கு அடிக்கத் தொடங்கீட்டான். சண்டை தொடங்கிப் பதினைஞ்சு நிமிசத்துக்குள்ளயே அவன் எங்களுக்குக் கிட்ட வந்திட்டான்.
இப்பிடியே அவனுக்கு நாங்கள் மூண்டு பேரும் அடிச்சுக் கொண்டிருந்திட்டு திடீரெண்டு எங்கண்ட எதிர்ப்பை நிப்பாட்டிப்போட்டு பொயிசனுக்குள்ள நானும் பொயிசனுக்குப் பக்கத்தில இருந்த ‘ஐ’ பங்கறுக்குள்ள மதியும் செழியனும் நிண்டு அடிக்கிறது எண்டு திட்டம்போட்டுட்டு கணப்பொழுதிலயே அதச் செயற்படுத்தினம்.” என்றவனிடம் “அதை என்ன மாதிரிச் செய்யிறியள்” என்று கேட்டோம். “அவன்ர பவர் கூடின வெப்பன் அடிவர நாங்கள் அடிக்கிறத நிப்பாட்ட அவர் கிட்ட ஓடி வருவார்.
அந்தக் கணப்பொழுதில நாங்கள் குண்ட அடிச்சுப்போட்டு அவனுக்கு எங்கண்ட எதிர்ப்பக் காட்டுவம் எண்டு மதி சொன்னான். அப்ப மதியின்ர திட்டப்படி எங்களின்ர் எதிர்ப்பை நிப்பாட்டிப்போட்டு நாங்கள் எல்லாரும் குறிக்கப்பட்ட இடங்களுக்குப் போட்டம். மதி சொன்ன மாதிரியே இப்ப ஆமி வர வெளிக்கிட்டான். எல்லாரும் சேந்து முதல் குண்டுகள அடிச்சுக்கொண்டு எங்கண்ட எதிர்ப்பக்காட்டத் தொடங்கினம். மதியும் செழியனும் பக்கத்தில இருக்கிற ‘ஐ’யுக்குள்ள போய் கத்திக் கொண்டு குண்ட அடிச்சு றைபிளாலையும் குடுக்கத் தொடங்கினாங்கள்.
தொடரும்…..
தாரகம் இணையம்