வணக்கம் வருண் கருத்தாடல் நீங்கள் ஒரு முன்னாள்ப்போராளி,
தற்போது புலம்பெயர்து வாழ்கின்றீர்கள் உங்கள் முகநூல் முழுவதும் அரசியல்சார் கருத்துக்களைக் கொண்ட பதிவுகளால் நிறைந்துபோய் உள்ளது,அந்த வகையில் உங்களிடம் சில கேள்விகள்,
வணக்கம் கடலூரான் சுமன் அவர்களே!
தங்களது கேள்விகளுக்கான பதிலுக்கு முன்னர் நான் ஓர் விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும். அதாவது என்னுடைய இந்த முகநூல் நட்புக்குள் அதிகமாக படைப்பாளிகளை உள்வாங்கி அவர்களை ஊக்குவித்து, அவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலே நீண்ட நாட்கள் கருத்தாடல்களை செய்து வந்து கொண்டிருந்தேன். என்னுடைய அரசியல் சார் கருத்தாடல்களை அரசியல் சம்பந்தமான பதிவாளர்களுடன் குறிப்பாக நட்புவட்டத்துக்கு வெளியிலும் செய்துவந்தேன். இவ்வாறான வேளையிலேயே அரசியல் எமக்கு வேண்டாம் எனவும், அது ஒரு சாக்கடை என்ற கருத்தை கொண்டிருப்போர் சிலரும் தவறான அரசியலை அனுசரித்து வருகின்ற போக்கையும், நாம் அரசியலில் ஈடுபாடற்றவர்கள் எனும் வகையில் நுட்பமான அரசிலை செய்து வந்ததை அதிகமாக அவதானிக்க முடிந்தது. (குறிப்பாக சமூகத்தின் சில பிரச்சனைகளை கவிதைகளாக வடிப்போர் அந்த பிரச்சனைகளை தட்டி கேட்கின்ற தூரத்தில் இருக்ககூடிய அரசிலுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் இருப்பது, இன்னும் சிலர் தமது படைப்புகளை ஆதரித்து நிற்கும் ஒருவர் என்பதற்காக அவரின் தவறான அரசியலை ஆதரித்து ஊக்கப்படுத்து போக்கும் காணப்பட்டது. அடுத்து அரசியல் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை அல்லது ஈடுபாடு இல்லை என சொல்லும் படைப்பாளிகள் சிலர் தமது புத்தக வெளியீட்டில் அரசியல் வாதிகளை சிறப்பு விருந்தினராக அழைப்பதும், இன்னும் தேடி போய் தங்கள் ஆக்கங்களை கொடுத்து அவர்களுடனான தங்களின் படங்களை வலத்தளத்தில் பதிவேற்றுகின்றனர். இதுவெல்லாம் ஒருவகை அரசியலே ஆகும்.)
மேலும் அரசியல் தொடர்பான கருத்தியலை எதிர்க்கிறோம் என்கிற பெயரில் சில அநாகரிகமான வாதங்களை முன்வைப்பதும், சில தனிநபர் செயற்பாடுகளை விமர்சமாக்கி ஒரு ஆரோக்கியற்ற எதிர்ப்புணர்வை கட்டியெழுப்பும் பாங்கும் காணப்பட்டது இதனை அடுத்தே நேரடியாக நான் எனது பக்கத்தில் அரசியலை முதன்மைபடுத்தி பேச வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்படி நான் பேச ஆரம்பித்ததன் பின்னர் எனது கருத்துக்களை பலரும் ஆதரித்தனரோ, இல்லையோ தவறானவர்களை ஆதரித்து நடக்கும் போக்கை மாற்றிவருகின்றனர் அந்த வகையில் எனது பக்கத்தில் அரசியல் கருத்தாடல்கள் செய்வதில் திருப்தியே கொள்கிறேன்.
கடலூரான் சுமன் – புலம்பெயர்தேசத்திலிருந்து ஈழ அரசியல் நகர்வுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
வருண் கருத்தாடல்- புலம் பெயர் தேசத்தில் இருந்தாலும் ஈழ அரசியலை ஈழத்தில் இருப்பவனாக நிலத்திலேயுள்ள மக்களின் வாழ்வியல் நடப்போடு சம்பத்தப்பட்டவனாக இருந்தே அவ் அரசியலை நோக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
ஈழவிடுதலை போராட்டமானது நீண்டு, நிலைத்து அது ஒரு பல்பரிமாண நிலையை எட்டியிருந்த போதும் சர்வதேச அரசியலை எதிர்கொள்ள தக்கவகையில் தனக்கான கட்டமையப்பெற்ற அரசில் ஒன்றை தாம் நடாத்திய போருக்கு சமாந்தரமாக ஏற்படுத்தியிருக்கவில்லை. இதற்கான முதன்மையான காரணம் ஆயுதப் போருக்கு முன்னரே தமிழர் தரப்பு நடாத்திய பல அரசியல் ரீதியான போராட்டங்கள் தோல்வியில் முடிந்தமையே ஆகும்.
ஜனநாயக முறையிலான கோரிக்கைகள் மீதான நிராகரிப்பில் இருந்து பிறப்பெடுத்ததே ஆயுதபோராட்டமாகும். ஆனால் உலக ஒழுங்கு மாறி வந்த நிலையில் இதற்கான தேவையை விடுதலைப்புலிகள் உணர்ந்தமையின் விழைவாகவே த.தே.கூ உருவாக்கம் இடம்பெற்றது. இதிலிருந்து தான் நாம் போரை தொடர்ந்து நடாத்துவதற்காகவும், எமது கட்டுப்பாட்டுபகுதிக்குள் இருந்த மக்களுக்குமானதுமான அரசியல் என்பதற்கு அப்பாலான அரசியல் உருவாக்கம் பெற்றது. போரின் முடிவுக்கு பின்னர் இவர்களே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்கிற இயல்பான ஸ்தானத்தையும் பெற்றுகொண்டனர்.
இப்போது இங்கே குறிப்பிடப்படுகின்ற ஈழ அரசியலின் மையமாக அதே த.தே.கூ அமைப்பினரே இருக்கின்றனர். (அவர்களின் அரசியல் முன்னெடுப்புக்களில் உள்ள சரி பிழைகள் அடுத்தது)
எனவே இவர்களின் அரசியல் என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த கோரிக்கையான தமிழீழம் என்கிற தீர்வை நோக்கியதாக இல்லாவிட்டாலும் அதற்கு நெருக்கமாக இருக்கவேண்டும். தற்போது ஈழத்தில் வாழுகின்ற மக்களின் அபிலாசைகளையும், உரிமையையும் நிலைநாட்டும் வகையிலானதாக இருக்க வேண்டும்.
கடலூரான் சுமன் – ஈழத்தில் இப்போது உள்ள பிளவுகள் அரசியல் பின்னடைவுகளுக்கு புலம்பெயர்தேசத்திலிருக்கும் அமைப்புக்களின் பிளவுகளும் பிளவுகளின் பின்னரான செயல்ப்பாடுகளுமே காரணமென தற்பெது ஒரு குற்றச்சாட்டொன்று சிலரால் முன் வைக்கப்படுகின்றது, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
வருண் கருத்தாடல்- புலத்தில் உள்ள அமைப்புகளின் பிளவினால் ஏற்பட்ட தாக்கம் எத்தகையது என்பதை நாம் சரியாக அறியமுடியவில்லை.
ஆனால் அவ்வாறான தலையீடு இருந்திருப்பின் அது மக்கள் நலனை முன்னெடுக்க உதவுமா இல்லையா என்பதை ஆராய்ந்து முடிவெடுத்திருக்க வேண்டியது நிலத்திலே அரசியலை முன்னெடுப்பவர்களே. அதைவிடுத்து அவர்கள் தமது சுயநலன்களை தொடர்ந்து பேணி பாதுகாக்க தக்க தமக்கு இசைவானவர்களின் ஆலோசனைப்படி நடந்துவிட்டு இவ்வாறு தப்பிக்க முயன்றால் அது தவறே.
த.தே.கூ இன் தலைவராக திரு சம்பந்தன் அவர்களை நியமித்தது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களே. போரின் முடிவுவரை சர்வதேசத்திலோ, ஈழத்திலேயோ வேறு எவரையும் தமது தரப்பாக இனம்காட்டாத நிலையில் தொடர்ந்து இந்த அரசியலை மிகவும் வீரியமாக முன்னெடுத்திருக்க வேண்டியது திரு சம்பந்தன் அவர்களே. அவருக்கு அதற்கான போதுமையும், ஆளுமையும் இருந்தது, இருக்கிறது. இங்கே இவருக்கு புத்தி சொல்ல தக்கவகையில் யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை. சிங்கள அரசாங்கங்களால் காலாகாலமாக தமிழர் தரப்பு எப்படி ஏமாற்றப்படுகிறது என்பதற்கான அனுபவ நீட்சி அவருக்கே உண்டு.
அந்த வகையில் அவரால் தீர்க்கமாக முடிவெடுக்க முடியாத இக்கட்டான நிலமை ஏற்பட்டிருந்தால் அவர் மிகச்சிறப்பான அணுகுமுறையை கடைப்பிடித்திருக்கலாம். அதாவது ஆயுத போராட்டத்தின் வேராக, அதன் பங்காளர்களாக இருந்து வலி சுமந்த மக்கள் அங்கே தான் உள்ளர். அவர்களின் கருத்துக்கும், உணர்வுக்கும் தக்கவகையில் திரு சம்பந்தன் அவர்கள் தமது நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம், எடுக்கவேண்டும்.
எனவே
புலம்பெயர் தரப்பின் தலையீட்டால் த.தே.கூ அமைப்பு திசைமாறியது எனும் கருத்து புறக்கணிக்கதக்கதே
கடலூரான் சுமன் – ஈழத்தில் உள்ள மாவீரர்குடும்பங்கள் போராளிகளுக்கான உதவிகளை, புலம்பெயர் அமைப்புக்களிடம் கேட்டபோது முடியாது அண்ண வரும்போது கணக்குக் காட்ட வேண்டும் என்று மறுத்துவிட்டதாகவும் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது
இது பற்றி உங்கள் கருத்து என்ன?
வருண் கருத்தாடல்- தலைவர் வந்தபின் தருவோம் என்பதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை. தலைவர் தனக்காக எதனையும் மட்டுமல்ல தன் குடும்பத்தில் கூட தனக்காக எவரையும் சேமிக்காதவர்.
ஈழ உணர்வற்றவர்களின் கைகளுக்கு பெரும் பண முதல்கள் சென்றுவிட்டதே பெரும் கவலைக்குரிய விடயம். நேற்றைக்கு கூட இங்கே இலண்டனில் ஒருவருடன் பேசும்போது 2008 இலே ஒரு குறித்த நபரிடம் பெரும் தொகை பணத்தை கொடுத்திருக்கிறார், அவர் அறிய இன்னும் பலர் கொடுத்துமுள்ளனர். அந்த பணத்தை பெற்ற நபர் தற்போது பெரும் வசதி வாய்ப்புக்களுடன் சுகபோகமாக வாழ்ந்து வருகின்றாராம். இவர் அண்மையில் தற்செயலாக அவரை நேரிட்டபோது பேச முற்பட்டிருக்கிறார் தன்னை தெரியாது என்றே சொல்லிவிட்டாராம்.
உண்மையில் ஈழ உணர்வுள்ளவர்களாகவோ, பாதிக்கபட்ட மக்களில் கரிசனை கொண்டவர்களாக இருந்தாலோ அவர்கள் தலைவர் வருகிற போது வாற பிரச்சனையை பார்ப்போம் என பணத்தை தூக்கி கொடுத்து விடுவார்கள்.
புலம்பெயர் தேசங்களில் பணத்தை கட்டி வைத்து விட்டு இருக்கமுடியாது அதை ஏதோவோர் விடயத்தில் முதலீடு செய்தே ஆகவேண்டும் அப்படி ஈட்டகூடிய வருமானங்களும் பெரிதாக இருக்கும் ஆனால் அப்படி செய்யாமல் குறித்த பணங்களில் தமக்கான, தமது பிள்ளைகளுக்கான நிரந்தர சொத்துகளை வாங்கிகொண்டேரே அதிகமெனவும் அறியமுடிகிறது
கடலூரான் சுமன் – புலம்பெயர் தேசத்தில் உள்ள பல மக்கள் ஈழத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள் ஆனால் புலம்பெயர் அமைப்புக்கள் ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலத்த்தில் சேகரித்த பணத்தை ஈழத்தில் உள்ளவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்காக கொடுப்பதற்கு மறுத்து வருகிறார்கள் அவார்கள் மறுப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
வருண் கருத்தாடல்- சேவை நோக்கமற்ற, இன உணர்வற்ற சுயநலவாதிகளின் கைகளுக்கு இந்தபணம் சென்றிருப்பது மட்டுமே. விடுதலை போராட்ட காலத்தில் தாம் கேள்விக்கு உட்படுத்தப்படுவோம் என்கிற அச்சத்தின் காரணமாக இவர்கள் நேர்மையாக செயற்பட்டிருக்கலாம். அதுவும் முழுமையான நேர்மை இருந்திருக்க முடியாது
கடலூரான் சுமன் – 2009ம் ஆண்டுக்குமுன் புலம்பெயர் அமைப்புக்களில் செயல்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கும்
ஆயுதம் ஏந்தி களமுனைகளில் போராளிகளாய் நின்று 2009ம் ஆண்டுக்குப் பின் புலம்பெயர்தேசம் சென்ற போராளிகளுக்குமான உறவு நிலை எவ்வாறு உள்ளது?
வருண் கருத்தாடல்- ஏலவே இருந்த புலம்பெயர் அமைப்புக்களுக்கும் 2009 ற்கு பின்னே புலம்பெயர் தேசத்தை வந்தடைந்தவர்களுக்குமான உறவு என்பது அத்தனை தூரம் ஆரோக்கியமாக இருக்கும் என சொல்வதற்கில்லை.
களத்திலே போராடியவர்களை இறந்தால் தான் கொண்டாடுவோம் என்கிற எம் சமூகத்தின் பார்வை தவறானது. போராளியாகி ஒரு மாதத்தில் இறந்து விட்டாலும் மாவீரன் என்கிற உயரிய மதிப்பை கொடுக்கிறோம். அதே நேரம் இறக்கவில்லை என்கிற காரணம் மட்டும் ஒருவனுடைய தியாகங்களை பூச்சியமாக்கிவிடுமா என்கிற பெரும் கேள்வி ஒன்று உண்டல்லவா?
இத்தனை மாவீரர்களை உண்மையாக மதிப்பவர்களாக, அவர்களை இழந்ததிற்காக, ஏன் காணமல் போனவர்க்காக கவலைப்படுகினற சமூகமாக எம் சமூகம் இருந்திருந்நால் இன்று மூத்த போராளிகளாக இருந்த காக்கா அண்ணா, ரூபண்ணா, பதுமண்ணா போன்றவர்க்கு என்ன அந்தஸ்த்தை, மரியாதையை கொடுத்துள்ளார்கள் எனும் பெரும் கேள்வி எம்முன்னே எழுகிறதல்லவா?
புலத்திலும் இதேதான் அண்மையில் இங்கே வந்தடைந்த முன்னாள் போராளிகள் (விலை போனவர்களையோ, திசைமாறியவர்கள் தவிர) வேட்கையோடும், வேதனையோடும் இருப்பவர்களாகவும் இன உணர்வுக்கு நெருக்கமாகவும், பொருளாதார சுமையிலும் உள்ளனர் அவர்களே இங்கிருந்து நிலத்திலே உள்ள தமது நெருக்கமான உறவினர், நண்பர்களுக்கு முடிந்ததை செய்தும் வருகின்றர்.
கடலூரான் சுமன் – ஒரு முன்னாள்ப்போராளியாய் வைகோ சீமான் மீது வைத்த விமர்சனத்தை எவ்வாறு பாக்கின்றீர்கள்?
வருண் கருத்தாடல்- திரு வைகோ அவர்களின் விமர்சனம் மிக மிக தவறானது என்றே சொல்வேன்.
திரு சீமான் அவர்கள் வைகோ உட்பட்ட பல ஈழ உணர்வாளர்கள் முன்னே கைகட்டி, பணிந்து நின்ற ஒரு சிறியவர்.
ஈழ உணர்வாளர்கள் மத்தியில் நீண்டகாலமாக ஒரு சிறந்த ஈழ உணர்வாளராக, அபிமானியாக நோக்கப்பட்டவரே திரு வைகோ அவர்கள். அவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்கிற ஓர் கட்சியின் தலைவருமாவார். அவர் தனது கட்சியை ஒரு கொள்கை நிலைப்பாட்டுடன் ஈழ மக்களை விட்டு, தமிழக மக்களுக்காகவேனும் நேரிய முறையில் வழிநடாத்தி சென்றிருந்தால் இன்று அவருக்கு இந்த கையாலாகாத நிலை ஏற்பட்டிருக்காது.
இன்று திமுக தலைவர் திரு கருணாநிதி அவர்கள் முடக்கமான நிலையில் திரு ஸ்ராலின் அவர்கள் செயல் தலைவராக உள்ளார். இவ்வேளையில் தனது கட்சிரீதியாக எந்தவித உடன்பாடுகளையும் திமுக வினருடன் எட்டாது தனிநபரை போன்று திரு ஸ்ராலின் அவர்களுக்கு சேவகம் செய்ய புறப்பட்டுள்ளார்.
இங்கே ஸ்ராலின் அவர்களின் முதல்வர் கனவுக்கு சவாலாக நிற்பது நாம்தமிழர் கட்சி.அவர் தாங்கி நிற்கும் முதன்மையான விடயம் ஈழம். எனவே ஒரு ஈழ அபிமானியை வைத்து இன்னொரு ஈழ ஆதரவு தரப்பை விழுத்தலாம் என திமுக வினர் நினைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் தொட்ட நபர் ஏற்கனவே தமிழகத்தில் தனது பெறுமானத்தை இழந்துவிட்டவர். இந்த வைகோ அவர்களின் திமுக உடனான கூட்டே சில வேளை பல ஆயிரம் வாக்குகளை அவர்களுக்கு குறைத்துவிடும் வாய்ப்பும் உண்டு.
இந்த நிலையில் அவர் சீமான் அவர்களை சரியான கருத்தியலவழி எதிர்கொள்ள முடியாமல் கைலெடுத்த விடயமும் மிகவும் சிறுபிள்ளை தனமானது. பெரியார் வழி, பெரியார் வழி.. பகுத்தறிவு வாதம் என்றெல்லாம் கூப்பாடு போடும் இவர்களின் இச்செயற்பாடு அர்த்தமற்றதே
கடலூரான் சுமன்- உங்கள் நேரத்தை ஒதுக்கி காத்திரமான பதில்களைத் தந்தமைக்கு மிக மிக நன்றி
வருண் கருத்தாடல்- தோழமை சுமன் அவர்களே முறைப்படியான சில கேள்விகளை தந்து பதில்களை பகிர உதவியமைக்கு மிகவும் நன்றிகள். தங்கள் இப்பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்.