விசா காலம் முடிந்த பின்னும், சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு, 3 மாதங்களுக்கு பொது மன்னிப்பு திட்டத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் மேற்கத்திய நாடுகள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவில் இருந்து மட்டும் 28 லட்சம் பேர் இங்கு பணியாற்றுகின்றனர். இதில் ஆயிரக்கணக்கானோர் விசா காலம் முடிந்தும் சட்ட விரோதமாக அங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர்.
அந்நாட்டு சட்டப்படி, இவர்கள் போலீஸிடம் சிக்கினால் பல லட்சம் ரூபாய் அபராதமும் சிறை தண்டனையும் அனுபவிக்க நேரிடும். அதன் பின்னர் அவர்கள் அந்த நாட்டுக்குள் நுழைய முடியாது.
இந்த நிலையில், சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த மூன்று மாதங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறினால் அவர்களுக்கு அபராதம் சிறை போன்ற தண்டனைகள் விதிக்கப்படாது.
மேலும், அந்த நாட்டிலேயே வேறு வேலை தேடிக் கொள்ள அவர்களுக்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமேரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் குடியேறிகள் சட்டத்தில் நெருக்கடியான மாற்றங்களையும் விசா பெறுபவர்களுக்கு அதிகப்படியான விதிமுறைகளையும் இயற்றி வரும் நிலையில் அமீரகத்தின் இத்தகைய முடிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.