அஸ்ஸாமில் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவுப்பதிப்பு கடந்த திங்கள்கிழமை வெளியானது.
அஸ்ஸாமில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் வங்கதேசக் குடியேறிகளை, சட்டபூர்வமான இந்தியக் குடிமக்களில் இருந்து பிரித்தறிவதற்காக இந்த பதிவேடு உருவாக்கப்படுகிறது.
எனவே, அஸ்ஸாமில் உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்தப் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
மொத்தம் 3.29 கோடி பேர் இந்தப் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பித்திருந்தனர். ஆனால், திங்கள்கிழமை வெளியான வரைவுப் பதிவேட்டில் 2.89 கோடி பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. மீதம், சுமார் 40 லட்சம் விண்ணப்பதாரர்களின் பெயர்கள் இந்தப் பதிவேட்டில் இடம் பெறவில்லை.
இந்தப் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பிப்பவர்கள் 1971-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே இந்தியாவில் குடியிருப்பதற்கான ஆவணங்களை அல்லது அதற்கு முன்பிருந்தே இங்கே குடியிருப்பவர்களின் வாரிசு என்பதை நிரூபிக்கும் ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.
வங்கதேசக் குடியேறிகளைக் கண்டறிந்து அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான மத்திய அரசின் முயற்சியே இது என்று மனித உரிமையாளர்கள் ஒரு புறம் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், மத்திய அரசோ, இந்தப் பட்டியலில் இடம் பெறாதவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது என்று குறிப்பிடுகிறது.
இதற்கிடையில், வங்கதேசக் குடியேறிகளை அடையாளம் காண்பதற்காக கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்காணா, போன்ற இந்திய மாநிலங்களைப் பூர்வீகமாக கொண்ட அஸ்ஸாம்வாசிகள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கும் வழி தெரியாது சிக்கிக்கொண்டுள்ளனர்.
அவர்களில் பலரது பெயர்கள் திங்கள்கிழமை வெளியான வரைவு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறவில்லை.
இது குறித்து குவஹாத்தி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பாண்டித்துரை,
“தமிழ்நாட்டைச் சேர்ந்த நான் 1986ல் இருந்து அசாமில் இருக்கிறேன். 1994ல் இருந்து என் குடும்பத்தினரும் இங்கே வந்துவிட்டனர். தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பத்தில் ஏராளமான விவரம் கேட்டிருந்தனர். எனக்கு ஆவணங்கள் உள்ளன. என் மனைவிக்கு ஆவணங்கள் இல்லை. ஆனாலும், விண்ணப்பத்தை ஏற்கமாட்டார்கள் என்று கருதி நானும் விண்ணப்பிக்கவில்லை. என் மனைவியும் விண்ணப்பிக்கவில்லை.
இங்குள்ள பல தமிழ் அதிகாரிகளும் விண்ணப்பிக்கவில்லை. குவஹாத்தி மாநகராட்சி துப்புரவு ஊழியர்களில் பெரும்பாலோர் ஆந்திரா, தெலங்காணா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இப்படி தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து இங்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள் பலருக்கு தங்கள் சொந்த ஊரில் சொத்துகளோ, ஆவணங்களோ இல்லாமல் இருக்கிறது. அவர்கள் எப்படி தங்கள் குடியுரிமையை நிரூபிப்பது என்று தெரியவில்லை,” என்றார்.