வணக்கம் தேவி சேலம் நீங்கள் நாம் தமிழர் கடசியின் உறுப்பினர், கடந்த 2016ம் ஆண்டு நாம்தமிழர்கட்சி சார்பில் போட்டியிட்டும் இருந்தீர்கள், “எங்களுக்கு தாயாகும் தன்மையை கடவுள் கொடுக்கவில்லை ஆனால் மனிதர்களை நேசிக்கும் தன்மையை கடவுள் நிறையவே கொடுத்துள்ளார்” என நீங்கள் கூறுயதைப்போல தாய்மடி என்னும் அறக்கட்டளை அமைப்பை உருவாக்கி பலருக்கு தாயக உள்ளீர்கள் உங்களிடம் சில கேள்விகள்,
கடலூரான் சுமன் – தாய்மடி அறக்கட்டளை அமைப்பை உருவாக்க காரணம் என்ன?
தேவி சேலம் – நான் ஒரு வயது குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்தேன்…. மிகுந்த வறுமையின் காரணமாக ஒருவேளை உணவும் கிடைக்காத நிலை…. மனித கடவுளாக பிறந்த ஐயா காமராசரின் மதிய உணவு திட்டத்தால் .. பள்ளிக்கு சென்றாலாவது தன் பிள்ளைக்கு உணவு கிடைக்குமே என்று எனது தாய் என்னை உணவுக்காகவே என்னை பள்ளிக்கு அனுப்பினார்…. காலையில் நீராகார உணவு எடுக்கும் எனக்கு மதியம் ஆக ஆக மிகுந்த பசி எடுக்கும்…. அப்போதிருந்தே எனக்கு ஒரு பெரிய கனவு ….நாம் வளர்ந்து விட்டால் இப்படி நம்மை போன்றே பசியால் இருப்போருக்கு நிறைய சாப்பாடு போட வேண்டும்…. யாரும் பசி காரணமாக தவிக்க கூடாது என்ற எண்ணம் என்னுள் வளர்ந்தது…. அதே போல நானும் வளர்ந்தேன்…. பள்ளி படிப்பு முடித்தவுடனே எனது 16வயதில் அறுவை செய்து கொண்டு பெண்ணாக மாறினேன் பிறகு திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனத்தில் பணியாற்றினேன் இயன்றவரை எனது ஊதியத்தில் மதிய உணவு வாங்கி கொண்டு தெருதெருவாக ஆதரவற்ற நிலையில் உள்ள மனநிலை தவறியோருக்கு உணவளித்து வந்தேன்…. தேடி தேடி உணவளித்தேன்…. பிறகு காலப்போக்கில் ஆதரவற்றோர்களுக்கு எனது சொந்த உழைப்பால் நிலம் வாங்கி தாய்மடி காப்பகம் அமைத்தேன்…. இப்போது இங்குள்ள ஆதரவற்றோரையும் காப்பாற்றி ….படிக்கும் நிலையில் உள்ள தாய் தகப்பன் இல்லா ஏழை குழந்தைகள் குடும்பமாக பார்த்து உணவுக்கு அரிசி மற்றும் உடைகள் கல்வி உதவித்தொகை என கிட்டத்தட்ட 250குடும்பங்களை காப்பாற்றி வருகிறேன்…. எனது இளம் வயது வறுமையே ஆதரவற்றோரை காப்பாற்ற தாய்மடி அறக்கட்டளை ஆரம்பிக்க காரணம்….
கடலூரான் சுமன் – அண்மையில் தாய்மடி அறக்கட்டளைக்கு வரவேண்டிய உதவிகளை அரசியல் காரணம் காட்டி தரமறுத்ததாக சமூகவலைத்தளங்கள் ஊடாக அறியமுடிந்தது, அதைப்பற்றிக் கூறுங்கள்?
தேவி சேலம் – நான் 2016 ஆம் ஆண்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சென்னை இராதாகிருஷ்ணன் நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை எதிர்த்து போட்டியிட்டதால் ஊடகங்கள் மூலம் வெளியுலகுக்கு தெரிந்தது அதனால் ஒரு கட்சி சார்ந்த நபர் என்பதால் தொடர் உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது…. ஆனால் மிகுந்த நெருக்கடிக்கு இடையில் வெற்றிகரமாக இயன்றவரை ஆதரவற்றோர்களை காப்பாற்றி வருகிறேன்…. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி நடத்திய மகளிர் தின மாநாட்டில் நடிகர் கமலஹாசன் அவர்களால் சிறந்த சமூக சேவைக்காக தமிழ்நாட்டில் மூன்று சேவை அமைப்புகளில. ஒன்றாக தாய்மடி அறக்கட்டளையும் தேர்வு செய்யப்பட்டது…. மேடையிலயே ஒவ்வொரு அமைப்புக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது அதில் மற்ற அமைப்புகளுக்கு உதவி வழங்கிய நிலையில் ..நான் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் என்பதாலும் .. அதன் வேட்பாளர் என்பதாலும் உதவி வழங்க மறுத்து விட்டனர்…. கட்சியில் இருப்பது எனது தனிப்பட்ட விருப்பம் அதற்காக சேவை செய்ய கூடாது என்று சட்டம் ஏதுமில்லை…. கமல் அவர்கள் அரசியலுக்கு வருவதும் கட்சி ஆரம்பித்ததும் எதற்காக மக்களுக்கு சேவை செய்யத்தானே ….நானும் தாய்மடி அறக்கட்டளை மூலமாக சேவைகள் தானே செய்கிறேன் ….பிறகு ஏன் உதவி மறுக்கப்பட்டது….நான் யாரென்றே தெரியாமல் என்னை தேர்வு செய்து மேடையேற்றி அறிவிப்பு கொடுத்து விட்டு பிறகு நான் நாம் தமிழர் கட்சி என்பதால் உதவி வழங்க மறுப்பதை எப்படி ஏற்பது….மேலும் இது எதுவும் விபரம் தெரியாமல் ஒரு முக்கிய கட்சி தலைவர் இப்படி செய்தால்…. இவரது கவனகுறைவை எப்படி ஏற்பது…. இப்படிப்பட்டவர் எப்படி மக்களுக்கு நல்லாட்சி தருவார்….
கடலூரான் சுமன் – தாய்மடி அறக்கட்டளை அமைப்பின் செயல்ப்பாடுகளை வெளிக்கொண்டுவருவதில் தமிழ்நாட்டு ஊடகங்களின் பங்களிப்பு என்பது எவ்வாறு உள்ளது?
தேவி சேலம் – “நியூஸ் 18” மட்டும் தான் தாய்மடி அறக்கட்டளையின் சேவைகளை 5 நிமிட செய்தியாக வெளியிட்டது…. தாய்மடி அறக்கட்டளை இன்னமும் ஏழ்மையில் உள்ள குடும்பங்களை தேர்வு செய்து உணவுக்கு அரிசி வழங்கும் …. தாய்மடியின் அமுதசுரபி என்ற அரிசி வழங்கும் சேவையை வெளியிட்டு பெரிய அளவில் உலகம் முழுவதும் தாய்மடி சேவைகளை கொண்டு சேர்த்தது….
இதற்கு முன்பே “நியூஸ் 7” என்ற செய்தி சேனல் எனது தேர்தல் சமயத்தில் தாய்மடி சேவையை பற்றி செய்தி வெளியிட்டது தற்போது தொடர்ந்தும் வெளியிட்டு வருகிறது…. ஊடகங்கள் மட்டும் தாய்மடி சேவைகளை வெளியிட்டு இருந்திருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டில் ஓரளவு வறுமை குறைய தாய்மடி நிறைய சேவைகளை செய்ய பொருளாதார உதவி கிடைத்திருக்கும்…. எனக்கு இயற்கையில் தாயாகும் பாக்கியம் இல்லை ஆனால் இந்த தமிழ் நாட்டுக்கு ஒரு நல்ல தாயாக இயன்றவரை சுயநலமின்றி ஏழ்மையை அகற்றி இருப்பேன்…. ஊடக வெளிச்சம் இல்லாமல் போனதே தாய்மடி ஒரு குறுகிய வட்டத்துக்குள் சேவை செய்யும் அமைப்பாக மாறிபோனதுக்கு காரணம் ஆகும்….
கடலூரான் சுமன் – தமிழ் நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்க நீங்கள் “நாம் தமிழர்” கட்சியில் இணைய விசேட காரணம் என்ன?
தேவி சேலம் – நான் பிறந்த இனம் உலக்குக்கே நாகரீகம் கற்றுக் கொடுத்த தமிழினம் ஆகும்.. இந்த இனம் ஈழத்தில் கொத்து கொத்தாக அழிக்கப்பட்டும்.. என் இனத்தின் சகோதரிகளின் வன்புணர்வும் என்னால் இன்றளவும் மனதில் கொதித்து கொண்டு இருக்கும் ஆறாத ரணங்கள் ஆகும்…. எனது இனத்துக்கு என்று ஒரு சொந்தமான நாடு வேண்டும்…. உலகமே வியந்த தமிழன் அகதி வாழ்வு வாழ கூடாது.. மாண்பும் பண்பும்.. பாரம்பரிய கலை கலாச்சாரமும் கொண்ட எமது இனத்தில் சாதி என்ற குறுக்கீடு எப்போதும் இருந்ததில்லை.. ஆரியருக்கு பின்பு எங்களது இனம் சிதறுண்டு சாதி என்ற வெளியில் ஊறிப்போக வைத்து சிதைத்து விட்டது ஆரியம்.. அதில் இருந்து மீண்டு எங்கள் இனம் மீண்டு மானதமிழராக ஒருங்கிணைய வேண்டும்…. இராசராசன் போன்ற உலகை ஆண்ட இனமாக எங்கள் இனம் தமிழ்நாட்டை ஆள வேண்டும்…. இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சி ஒன்றை தவிர வேறு எந்த கட்சியாலும் முடியாது ….அதனால் தான் நாம் தமிழர் கட்சியை தேர்ந்தெடுத்து பயணிக்கிறேன்..
எனது சேவை இனம் மொழி மதம் சாதி.. இவை அனைத்துக்கும் அப்பாற்பட்டு பொதுவான சேவை ஆகும்…. ஆனால் எனது தமிழ் நாட்டை ஆள எனது மண்ணின் மைந்தர்களுக்கே தலைமை உரிமை வேண்டும்…. இது நான் பிறந்த இனத்துக்கான உரிமை…. சேவை என்பது கடமை.. இரண்டும் எனது இரு கண்கள்….
கடலூரான் சுமன் – ஒரு திருநங்கையாக அரசியலிலும் சமூக சேவையிலும் நீங்கள் ஈடுபடும்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள்பற்றிக் கூறுங்கள்?
தேவி சேலம் – சமூக சேவை.. அரசியல் .. இரண்டிலும் பயணிப்பதால் ..தாய்மடி அறக்கட்டளைக்கு உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு…. அரசியலில் இருப்பதால் தாய்மடியின் தன்னலமற்ற சேவைகளுக்கு மதிப்பு குறைவாக உள்ளது…. ஆம் நான் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக சேவை செய்வதாக குற்றச்சாட்டு…. ஆக எனது தன்னலமற்ற சேவையை களங்கபடுத்துகிறார்கள் எளிதாக…. ஆனால் இதையெல்லாம் தாண்டி நிச்சயமாக தாய்மடி ஆதரவற்ற மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும்…. இப்போது கூட .. “தாய்மடி பசுமை கிராமம்” என்ற சமத்துவ கிராமத்தை உருவாக்கி அதில் இயற்கை விவசாயம் மற்றும் .. காற்று மாசுபடுவதை தடுத்தல்.. நாட்டு ஆடுமாடு வளர்ப்பு.. நிலத்தடி நீர் பாதுகாப்பு .. ஏரி குளம் போன்றவற்றை உருவாக்குதல்…. மழைநீர் சேகரிப்பு .. போன்ற மனித வாழ்வை மீட்கும் வகையில் ஒரு கிராமத்தை உருவாக்கும் முயற்சியை முன்னெடுத்து வருகிறது தாய்மடி அறக்கட்டளை…. ஊழல் அரசியல்வாதிகளால் தான் ஒரு இயற்கையான கிராமத்தை உருவாக்கி இயற்கையை காப்பாற்ற முயற்சி எடுக்க முடியாது.. காரணம் அவனுக்கு தேவை ஊழல் பணம்…. ஆனால் எனக்கு என் தமிழ்நாடு தான் தாய்மடி ..அதில் உள்ள தமிழினம்தான் எனது குழந்தைகள் .. நான் என் தமிழ் மண்ணையும் மக்களையும் நேசிக்கவில்லை மாறாக சுவாசிக்கிறேன் அதனால் என்னால் நிச்சயமாக ஒரு கிராமம் எப்படி இருக்க வேண்டும் என்று உருவாக்கி .. ஊழல் அரசியல்வாதிகளுக்கு பதிலடியாக குற்ற உணர்ச்சி ஏற்படும் வகையில் என் மண்ணை மீட்பேன் …. அதனால் ..என் மண்ணில் மாற்றம் ஏற்படும் வரை எத்தனை இடையூறுகள் வந்தாலும் அதை தவிடுபொடியாக்கி என் தமிழினத்தை தலை நிமிர செய்வேன்…. நான் கோழை ஆரிய திராவிட பிறப்பல்ல…. வீரத்துக்கும் மானத்துக்கும் புகழ்பெற்ற உலக போற்றும் தமிழினத்தின் வீரதமிழச்சி பிறப்பு ஆவேன் ….நான் சத்தியத்தின் வழியிலயே பயணிக்கிறேன் நிச்சயமாக வென்றே தீருவேன்….