எச்.பீர்முஹம்மது எழுதிய, ‘கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்’ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அறிவு ஜீவிகளும், சிந்தனையாளர்களும் மேற்கு உலகில் தான் உள்ளனர். அவர்கள் தான், இந்த சமூகத்துக்கு போற்றுதலுக்குரிய கருத்துகளை அளித்துள்ளனர் என்ற கருத்து உருவாக்கப்பட்டு, அதுவே நம்ப வைக்கப்படுகிறது. இதனால், நமது கீழ் திசை நாடுகளில், அவர்களைப் போன்ற சிந்தனையாளர்களே இல்லை என்ற கருத்தியலும் உருவாக்கப்படுகிறது. இது உண்மை அல்ல. மேற்கு உலகத்தினரை காட்டிலும், அனைத்துத் தளத்திலும் பல்வேறு உயரிய கருத்துகளை சொன்னோர், கீழ் திசை நாடுகளிலும் உள்ளனர் என்பதை, நாம் எடுத்துரைக்க வேண்டி உள்ளது. ஆனால், இதற்கான தரவுகள் நம் மொழிகளில் மிக அரிதாகவே வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் சில முயற்சிகள் இதற்காக நடந்திருந்தாலும், தமிழில் இதுபோன்ற வெளியீடுகள் மிக சொற்பமாகவே உள்ளன. இந்த நிலையில், ‘கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்’ என்ற நூல் தமிழில் வந்துள்ளது, மிக முக்கியமானது. இதில், கீழ் திசை நாடுகளைச் சேர்ந்த, தாரிக் அலி, அமீர் அமீன், மாக்சிம் ரோடின்சன், இக்பால் அகமது, ஹிசாம் சுரபி, தாஹா உசேன், எட்வர்ட் செய்த், மன்சூர் ஹிக்மத், லென்னி பிரன்னர் போன்றோர் குறித்து, நூலாசிரியர் விவரித்துள்ளார்.
இவர்களின் வாழ்க்கை முறை, இவர்கள் சொல்லும் கருத்துகள், மேற்கு உலக சிந்தனையாளர்களை விட எவ்வளவு உயர்ந்தது, இந்த சமூகத்தில் அவற்றின் தாக்கங்கள் என்ன என்பதை அறிய முடிகிறது. இதுவரை, நாம் நம்பிக் கொண்டிருந்த மேற்கு உலக நாகரிகம், வாழ்வியல், சித்தாத்தங்கள் எல்லாம் எப்படி நம்மை ஆட்கொண்டு உள்ளன என்பதை அறிய முடிகிறது.நம் நாகரிகம், வாழ்வியல் முறைகள் எவ்வளவு சிறந்தவை என்றும், எதற்கும் நாம் பிறரிடம் கையேந்தி, நம் சிந்தனைகளை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும், இந்த நூல் உணர்த்துகிறது. கீழைச் சிந்தனையாளர்கள் பற்றிய இத்தொகுப்பு நம் சந்ததிகள் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. நம் சமூகத்தின் வளத்தையும், மதிப்பையும் அறிவதற்கும், இறக்குமதியான கருத்து மாயைகளில் இருந்து விடுபடவும் உதவும்.
சல்மா, கவிஞர்