1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூமாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும், இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.
அன்றைய காலப்பகுதியில் களச் சூழல்கள் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு.திரு.வே.பிரபாகரன் அவர்கள் தமிழகத்திலும், தமிழீழத்திலும் நிலைகொண்டிருந்த காலம். 1987ம் ஆண்டு சிங்களம் பெரும் எடுப்பில் தமிழ்மக்கள் மீது தாக்குதல்களை நடத்தியவாறு, தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிக்க முனைந்தது. சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளையும், தந்திரோபாயங்களையும் நன்கு அறிந்துகொண்ட தலைவர் அன்றைய காலத்தின் தேவை கருதி தமிழீழத்தில் நிலைகொண்டிருந்தார்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு.திரு.வே.பிரபாகரன் அவர்களுக்கும் தெரியப்படுத்தி எப்படியாவது அவரது ஒப்புதலையும் பெற்றுவிட வேண்டும் என்பதில் அன்றைய இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்கள் ஒரு மாபெரும் திட்டத்தை தீட்டியிருந்தார்.
அதன் படி அந்த ஒப்பந்தம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு.திரு.வே.பிரபாகரன் அவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்காக புதுடில்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இந்தியாவின் உதவிப் பொருட்களை தமிழீழத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு கொண்டு சென்றிருந்த ஹர்தீப் பூரி, கப்டன் குப்தா உள்ளிட்ட இந்திய தூதரக அதிகாரிகள் ஊடாக அதிகாரபூர்வமாக இந்த அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
தமிழர்களின் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு அவற்றுக்குத் தீர்வுகாணும் நோக்கில் இலங்கை, இந்தியா, அரசுகளுக்கு இடையில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும், தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்பதை’ இந்திய அரசும், இலங்கை அரசும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் இலங்கை, இந்திய, ஒப்பந்தம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவருடன் கலந்து ஆலோசிக்கப்பட்ட பின்னரே கைச்சாத்திட உள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் (போராளிகள்) ஊடாக தலைவருக்கு இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள்.
இந்திய அதிகாரிகளுடன் 19.07.1987 இல் இடம்பெற்ற சந்திப்பின் போது தமிழீழத்தை தவிர்ந்த, அல்லது அதனைக் கைவிடும் நோக்கில் முன்வைக்கப்படும் எந்த ஒரு தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் இலங்கை, இந்திய அரசுகளிடம் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்தும், இந்திய அதிகாரிகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவருக்கும் இடையிலாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தியாவின் நேரடித் தலையீடுகள் ஈழப் பிரச்சனையில் ஏற்பட்ட பின்னர், அதனை எப்படியாகிலும் எதிர்கொண்டே ஆக வேண்டிய கட்டாயம் விடுதலைப் புலிகளுக்கு இருந்தது.
அதன் காரணமாக தமது நிலைப்பாடுகளை இந்திய அதிகாரிகளுக்கு எடுத்துரைப்பதோடு, அதனை ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் சமநேரத்தில் தெரியப்படுத்தவும் விடுதலைப் புலிகள் விரும்பியதன் காரணமாக இந்தியப் பிரதமரின் அழைப்பை ஏற்று, இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்கு பயணமாக தலைவர் பிரபாகரன் அவர்கள் இறுதியில் தீர்மானித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு.திரு.வே.பிரபாகரன் அவர்களின் புதுடில்லி பயணமும், அங்கு நடந்த சம்பவங்களும் இந்தியா அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நீண்ட கால விரோதத்திற்கு வித்திட்ட ஒரு பயணமாக அமைந்தது. இந்தக்கருத்தை பல துறை சார்ந்த விமர்சகர்களால் அன்று பதிவுசெய்யப்பட்டது.
இருப்பினும் சம்மந்தப்பட்டவர்களால் அன்று அந்தக் கருத்து கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது பின்னாளில் விடுதலைப் புலிகளின் பெயரால் விசமத் தனமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட சில சம்பவங்கள் சுட்டிக்காட்டி நிற்கின்றன.
1987ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுதுமலை அம்மன் கோவில் முன்பாக உள்ள வயல்வெளியில் வந்திறங்கிய இந்திய அரசுக்கு சொந்தமான வானுர்தி ஒன்றில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு.திரு.வே.பிரபாகரன் அவர்கள் உள்ளிட்ட குழுவினர் புதுடில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
புதுடில்லி அழைத்துச் செல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு.திரு.வே.பிரபாகரன் அவர்களின் தலைமையிலான போராளிகள் குழுவினர், இந்தியாவின் தலைநகரில் ‘அஷோகா’ ஹோட்டலில், 518ம் இலக்க விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்.
தங்கவைக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறுவதை விட, ‘சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்’ என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு.திரு.வே.பிரபாகரன் உள்ளிட்ட போராளிகள் தங்கி இருந்த விடுதியின் வெளியே இந்தியாவின் ‘கறுப்புப் பூனைகள்’ பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டிருந்தார்கள். அறையில் இருந்த போராளிகள் வெளியே நடமாட இந்தக் ‘கறுப்புப் பூனை’ பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அனுமதி மறுத்திருந்தார்கள். புலிகளின் தலைவர் உள்ளிட்ட எவரையும் வெளியில் யாருடனும் தொடர்புகொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
விடுதியின் உள்ளே இருந்த தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. பேச்சுவார்தைக்கு என்று கூறி இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்களால் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட போராளிகள் குழு, ஒருவகையில் சிறைவைக்கப்பட்டது போன்றே நடத்தப்பட்டார்கள்.
இந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் நேர்மையில் புலிகளைச் சந்தேகம் கொள்ளவைத்த மற்றுமொரு சம்பவமாக இந்த ‘அஷோக்கா ஹோட்டல்’ சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது.
இந்தியா மீது விடுதலைப் புலிகளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சிதறடித்த ஒரு சம்பவமாக இந்த சிறைவைப்புச் சம்பவம் அமைந்த போதிலும் விடுதலைப் புலிகள் மிகவும் நிதானமாகவும், அவதானத்துடனுமே இந்தியாவின் உறவைப் பேணி வந்தனர்.
ஈழத்தமிழர்களின் ஏகப் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டு, இந்திய பிரதமரால் பேச்சுவார்த்தைக்கு என அழைக்கப்பட்டதை நம்பி டெல்லிக்கு வந்திருந்த தமிழர்களின் தலைவரை கைதுசெய்து சிறைவைத்தது போன்று நடந்துகொண்ட இந்தியாவின் நம்பிக்கைத் துரோகச் செயலே, இந்தியா பற்றிய ஒரு எதிர் நிலைப்பாட்டை புலிகள் பிற்காலத்தில் எடுப்பதற்கும் காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் பலர் சுட்டிக்காடியிருப்பினும், அவை ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகவே இன்றுவரை தமிழீழ விடுதலைப் புலிகளால் கருதப்படுகிறது.
இந்தியாவிற்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும், இந்தியாவின் முகத்தில் கரிபூசவேண்டும் என்று ஒவ்வொரு ஈழத்தமிழனையும் நினைக்கவைத்த ஒரு, இரு, சில சம்பவமாக இதனை பல இந்திய இராணுவ ஆய்வாளர்கள் அடையாளப்படுத்துகின்றார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு.திரு.வே.பிரபாகரன் அவர்களை அடைத்துவைத்து, பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒப்பந்தத்தை அவர் மீது திணித்ததும், விடுதலைப் புலிகளின் உயர்நிலைத் தளபதிகளான திலீபன், ஜொனி, புலேந்திரன், குமரப்பா, உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளின் வீரச்சாவும், இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட மோதல்களில் வீரச் சாவடைந்த போராளிகள், இந்திய துரோகத்தால் வங்கக் கடலில் காவியமான கிட்டு உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவும், பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் இந்தியச் சிறைகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களில் தொடர்பில் இந்திய அரசின் அடாவடித்தனத்தையும், எதேச்சதிகாரத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும், ஈழத் தமிழர்களால் இன்றுவரை மறக்கவும், மன்னிக்கவும், முடியாமல் இருக்கின்ற போதும், இந்தியாவால் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கான தீர்வு சாத்தியம் என்பதை ஏற்றுக்கொண்டு இன்றுவரை இந்தியாவின் ஆதரவை வேண்டி நிற்கின்றனர்.
24ம் திகதி முதல் ‘அஷோகா’ ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரையும், போராளிகளையும் 28ம் திகதியே இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்கள் சந்தித்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெளித் தொடர்புகள் எதுவும் இன்றி அடைத்து வைக்கப்பட்டிருந்த கால நேரத்தைப் பயன்படுத்தி, ‘புலிகள் ஒப்பந்தத்திற்குச் சம்மதித்து விட்டார்கள்’ என்று உண்மைக்குப் புறம்பாக இந்திய அரசினால் இலங்கை அதிகாரிகளுக்கும், சர்வதேச நாடுகளுக்கும், ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் செய்தியை உறுதிப்படுத்தவும் அதனை மறுப்பதற்கும், தமிழர்களின் பிரதிநிதியாகவும் டெல்லி சென்ற தலைவருடனும், தலைவருடன் சென்ற பிரதிநிதிகளுடனும் எவருக்கும் தொடர்பு இல்லாத காரணத்தால் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களால் இந்தச் செய்தியை மறுப்பதற்கும் முடியாமல் போயிருந்தது.
சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில், தமிழர்களின் தலைவருக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு என அழைக்கப்பட்ட தமிழர்களின் பிரதிநிதிகளை மிரட்டி அடிபணிய வைக்க முனைந்து, பலவாறான நெருக்குதல்களையும், மிரட்டல்களையும் பிரயோகித்து விடுதலைப் புலிகளை (தமிழர்களின் பிரதி நிதிகளை) அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி பல அழுத்தங்களின் ஊடாக நிர்ப்பந்தித்தார் ராஜீவ் காந்தி.
கலந்துரையாடலுக்கு மட்டும் என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் தமிழர்களின் தலைமை பிரதிநிதியுமான மேதகு.வே.பிரபாகரன் உள்ளிட்ட குழுவினர் மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்த செயலானது, ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அதிகார வர்க்கம் செய்த மன்னிக்க முடியாத துரோகத்தை, ஈழத் தமிழருக்கு வெளிப்படுத்தியிருந்தது.
ராஜீவ் காந்தியை சந்திக்கவென சென்ற சந்தர்ப்பத்தில் தாம் எதிர்கொண்ட அழுத்தங்கள் தொடர்பாகவும் அந்த சந்தர்ப்பத்தில் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் மனநிலை தொடர்பாக, வை.கோபாலசாமி (வைகோ) அவர்கள் பின்வருமாறு நினைவு கூர்ந்திருந்தார்.
அஷோகா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் மீதான கடும் பாதுகாப்பு தளர்த்தப்பட்ட பின்னர், மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் தொலை பேசியில் தொடர்புகொண்டு என்னுடன் பேசியிருந்தார்.
அவரது குரல் இப்பொழுதும் எனது நினைவுகளில் பசுமையாக உள்ளது.
பிரபாகரன் என்னிடம் கூறினார்: நாங்கள் இந்திய அரசாங்கத்தினாலும், பிரதமர் ராஜீவ் காந்தியினாலும் ஏமாற்றப்பட்டு விட்டோம். எனது முதுகில் குத்தப்பட்டு விட்டது. என்னிடம் சயனைட் கழுத்தில் தொங்குகின்றது. தற்கொலை செய்துவிடலாமோ என்றுகூட நினைத்தேன். ஆனால், பல்லாயிரக்கணக்கான எனது சகோதர சகோதரிகளை நினைத்து என்னால் அந்த முடிவை எடுக்க முடியவில்லை. இவ்வாறு மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் தெரிவித்ததாக வைகோ நினைவு கூர்ந்திருந்தார்.
இந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் இந்த துரோக நடவடிக்கையே, பின்னாளில் இந்தியாவிற்கு எதிராக பல நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகளும்,தமிழீழ மக்களும் எடுக்கக் காரணமாக அமைந்திருந்தன.
(தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில், இந்தியத் தலைவருக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரசினால் திட்டமிட்ட நடத்தப்பட்ட துன்பியல் சம்பவம் இடம் பெறவும், இந்திய அரசின் இந்த நம்பிக்கைத் துரோகச் செயலே பிரதான காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் பலரும் தமிழ்மக்களும் குறிப்பிடுகின்றார்கள்.)
இப்படியெல்லாம் இந்தியாவால் நெருக்கடிக்குள்ளான நிலையில் அந்த ஒப்பந்தத்தை ஏற்றதாகக் கூறி 02.08.1987 அன்று யாழ்ப்பாணம் திரும்பிய புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் 04.08.1987 அன்று சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் ஒரு உரையை நிகழ்த்தினார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழப் மக்கள் முன்னிலையில் நிகழ்த்திய முதலாவது வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை என்று அந்த உரை என அனைவராலும் கருதப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும், தமிழீழ தேசியத் தலைவருமான மேதகு.வே.பிரபாகரன் அவர்களது அந்த உரை சுதுமலைப் பிரகடனம் என்றே வரலாற்றில் பதிவாகியுள்ளது. ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’, ‘திம்புக் கோட்பாடு’, என்பது போன்று சுதுமலையில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் ஆற்றிய உரை ‘சுதுமலைப் பிரகடனம்’ என்றே அழைக்கப்படுகின்றது.
இந்தியாவால் ஏமாற்றப்பட்டு, முதுகில் குத்தப்பட்ட நிலையில், இந்தியாவால் புலிகள் நிராயுதபாணிகள் ஆக்கப்படுவது உறுதி செய்யப்பட்ட நிலையில், விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவுத் திகதிகள் தீர்மானிக்கப்பட்ட நிலையில், இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் இந்தியப்படைகளுக்கு எதிராகப் போராடுவது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தீர்மானம் எடுத்துவிட்ட பின்னர்தான், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும், தமிழீழ தேசியத் தலைவருமான மேதகு.வே.பிரபாகரன் அவர்களுடைய !சுதுமலைப் பிரகடனம்! மேற்கொள்ளப்பட்டிருந்தது.
சுதுமலைப் பிரகடனத்தின் தலைப்பு !
‘நாங்கள் இந்தியாவை நேசிக்கின்றோம்” -இதுதான் விடுதலைப் புலிகளின் சுதுமலைப் பிரகடனத்தின் தலைப்பு.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட சுதுமலைப் பிரகடனத்தின் சில வாக்கியங்களை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்:
எமது அரசியல் தலைவிதியை இந்தியா என்கின்ற எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும் நிலையில் எம்மால் என்ன செய்ய முடியும்?
இந்தியப் பிரதமர் எனக்கு சில உறுதிப்பாடுகளை வழங்கினார். எமது மக்களின் பாதுகாப்பிற்குரிய உறுதியினையும் அவர் வழங்கினார்.
இந்தியப் பிரதமரின் ஒளிவுமறைவற்ற நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவரளித்த உறுதியிலும் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. பேரினவாத சிங்கள அரசாங்கம் மீண்டும் தமிழின ஒழிப்பைத் தொடங்குவதற்கு இந்தியா அனுமதியமளிக்க மாட்டாது என்று நாம் நம்புகின்றோம்.
இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்திய அமைதிப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளோம்.
ஆயுதங்களை நாங்கள் ஒப்படைக்கவில்லையானால் நாம் இந்தியப்படைகளுடன் மோதுகின்ற சூழ்நிலை உருவாகும். இது எமக்குத் தேவையில்லை.
நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். இந்தியப் படைகளுக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் கேள்விக்கே இடமில்லை.
எமது எதிரிகளிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பினை இந்தியப்படைகள் ஏற்கின்றன.
எமது ஆயுதங்களை நாம் இந்தியப் படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் முழுப் பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குவோம்.
மேலே குறிப்பிடப்பட்ட வாக்கியங்கள் அனைத்துமே இந்தியாவை நேசிக்கின்றோம் என்ற தலைப்பில் 04.08.1987 அன்று சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் மேற்கொண்ட சுதுமலைப் பிரகடத்தில் உள்ளடக்கப்பட்ட வாக்கியங்கள்.
மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் இந்தச் சுதுமலைப் பிரகடனம் மேற்கொள்ளும் முன்னதாக மற்றொரு கசப்பான சம்பவத்தையும் அவர் இந்தியாவினால் எதிர்கொண்டிருந்தார்.
1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம்,16ம்,17ம் திகதிகளில் பெங்களுரில் நடைபெற இருந்த தெற்காசிய பிராந்திய ஒத்துளைப்பு (சார்க்) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தியா வருவதாக இருந்தது.
அவரது இந்திய விஜயத்தின் போது புலிகள் மற்றும் தமிழ் நாட்டில் தங்கியிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழ் போராட்ட இயக்கங்கள் தரப்பில் இருந்து ஜே.ஆருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படக்கூடும் என்று இந்தியாவின் புலனாய்வுத் துறை இந்தியப் பிரதமரை எச்சரிக்கை செய்திருந்தது.
அப்பொழுது ஈழப் போராட்ட அமைப்புக்களுக்கு எதிராக இந்தியா தனது நகர்வை ஆரம்பித்திருந்த காலம். ஆகவே, சார்க் மாநாட்டை அடிப்படையாக வைத்து புலிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க ராஜீவ் காந்தி எண்ணினார்.
1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி அதிகாலை தமிழ் நாட்டிலிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்கள் ஒன்றுவிடாமல் முற்றுகையிடப்பட்டு அவர்களது ஆயுதங்கள் தமிழ் நாட்டுப் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன. சுமார் 40 கோடி ரூபாய் பெறுமதியான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதத் தொகுதியினுள், SAM-7 (Surface to Air Missile) விமான எதிர்ப்பு ஏவுகணைகளும், சக்திவாயந்த தொலைத்தொடர்பு கருவிகளும் அடங்கி இருந்ததாக அப்பொழுது செய்திகள் வெளியாகி இருந்தன.
விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களையும் தமிழ் நாடு பொலிஸார் கைது செய்தார்கள். பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட தலைவரை தமிழ் நாடு பொலிஸார் புகைப்படம் எடுத்ததுடன், அவரை அங்கு அவமானப்படுத்தும் விதத்திலும் நடந்துகொண்டார்கள்.
இந்தியாவின் பேச்சை மீறினால் இப்படியான இன்னல்களையெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை விடுதலைப் புலிகளுக்கு உணர்த்தவே இந்தியா இந்த நகர்வை எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் இருந்த புலிகளது அலுவலகத்தில் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இந்தியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பனவற்றை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கும்படி தமிழ் நாடு முதலமைச்சர் திரு.எம்.ஜீ.ஆர். அவர்கள் காவல்த் துறையினருக்கு உத்தரவு வழங்கியதைத் தொடர்ந்து அனைத்தும் கையளிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் முதற் தடவையாக ஒரு சாத்வீகப் போராட்டத்தை நடாத்தும்படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்த இந்தச் சம்பவமே, இந்தியா மீது புலிகளை பகைகொள்ள வைத்த முதலாவது சம்பவம் என்று அரசியல் ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றர்கள்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்துதான் இந்தியா மீது முற்றாக நம்பிக்கை இழந்த நிலையில் விடுதலைப் புலிகளின் புலிகளின் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் 1987ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் இருந்து தமிழீழம் திரும்பினார்.
திடுதிப்பென்று இந்தியப் படைகள் வந்திறங்கிவிட்டன. வந்ததும் வராததுமாக புலிகளிடம் ஒரு ஆயுதக்களைவை இந்தியப்படைகள் செய்ய இருந்தன. ஈழத்தமிழர்களும் இந்தியாவை தமது காவல்தெய்வங்களாக நினைத்து கிட்டத்தட்ட பூசை செய்யும் நிலையில் நின்றுகொண்டிருந்தார்கள். தமிழ் நாட்டு தமிழர்களும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றவே இந்தியா அங்கு சென்றுள்ளதாக நம்பிக்கொண்டிருந்தார்கள்.
தமிழ் மக்களின் மனங்களில் இந்தியாவின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டவேண்டிய தேவை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இருந்தது.
திலீபன் தலைமையிலான அரசியல் பிரிவினர் அந்தக் காரியத்தைச் செய்துகொண்டிருக்க, மறுபக்கம் இந்தியப் படையினருடன் மோதுவதற்குத் தேவையான ஆயுதங்களை குமரப்பா, புலேந்திரன் தலைமையிலான குழுவினர் பல்வேறு மார்க்கங்களில் சேகரிக்க, தமிழ் நாட்டில் இருந்த புலிகளின் பல தளங்களை கிட்டு தலைமையிலான குழுவினர் வேறு இடங்களுக்கு மாற்ற, மாத்தையா தலைமையில் வன்னிக் காடுகளில் பாரிய இரகசியத் தளம் அமைக்கப்பட, அதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் பணியைத்தான் தலைவர் பிரபாகரன் அவர்களின் சுதுமலைப் பிரகடனம் செய்திருந்தது.