வணக்கம் வன்னியூர் கிறுக்கன் நீங்கள் முகநூலில் தொடர்ந்து பலவிதமான கவிதைகள் கட்டுரைகளை எழுதிவருகின்றீர்கள்.
அத்தோடு சில பாடல்களும் உங்கள் வரிகளில் வெளிவந்துள்ளன, உங்கள் படைப்புக்களுக்காக விருதுகளையும் பெற்றுள்ளீர்கள்,
உங்களிடம் சில கேள்விகள்,
வன்னியூர் கிறுக்கன்- குறிப்புடன் சில நிமிடங்கள் சிறு வயதில் இருந்து ரசனை என்பதை நான் கற்றுக் கொண்ட ஒருவித காதலாகவே உணர்ந்தேன்
அந்தக் காதல் தான் என்னை கிறுக்க வைத்தது என்பது உண்மை இதுவரை என்னால் ஒரு கவிதைகூட முழுமையாக. முற்றுப் பெற்றதாக. எழுதவில்லை என்பதையே நான் கிறுக்கும் நேரம் அனைத்திலும் நினைப்பதுண்டு.
காரணம் என்னவெனில் நான் இன்று கற்றுக் கொள்ளும் மாணவன் நிச்சயமாக ஒருநாள் நல்ல படைப்புகளை இந்த சமூகம் ஏற்கும் வண்ணம் படைப்பேன் என்ற நம்பிக்கையில் கிறுக்கி வருகிறேன்
நான் விருதுகள் இன்னும் பெறவில்லை அவை என் முயற்சிக்கு கிடைத்த சான்றாகவே கருதுகிறேன் நான் கிறுக்குவதை வைத்து கவிஞர் என்று பட்டம் சூட்ட வேண்டாம் கவிஞர் எனும் வார்த்தை கனமானது நான் வன்னியூர் கிறுக்கன். என்றே என் படைப்புகளை கிறுக்கி வருகிறேன்.
கடலூரான் சுமன்- நீங்கள் உங்கள் படைப்பின்மூலம் சொல்ல நினைக்கும் செய்தி என்ன?
வன்னியூர் கிறுக்கன்- என்னுடைய படைப்பின் மூலம் ஏதாவது ஒரு கருத்தினை கூறவே முன் வருகிறேன் அதாவது தாயைப் பற்றி எழுதும் போது பெண்மையின் மேன்மையை தந்தையைப் பற்றி எழுதும் போது அப்பாவின் வியர்வையின் வீரியத்தையும் எழுதுகிறேன் காரணம் இன்று தாய் தந்தை அற்ற பிள்ளைகள் ஏராளமானோர் உள்ளனர்
அவைகளுக்கு ஒரு அப்பா ஒரு அம்மா இறைவன் தருவாறா என ஏங்கும் நொடிகளை சற்று உணர வேண்டும் . எம் முன்னோர்கள் கூறிய கூற்றின் படி தாயில் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
இப்படியாக ஒவ்வொரு படைப்புகளிலும் ஒவ்வொரு செய்தியை கூற வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதுகிறேன் இன்று சிலர் படித்து விட்டு கடந்தாலும் நின்று சில நேரம் யோசித்தால் மாற்றம் வரும் என்றும் நம்புகிறேன்
கடலூரான் சுமன்- இன்று முகநூலில் ஈழம்சார் படைப்புக்கள் பலவற்றைக்காணக்கிடைக்கின்றது, இது மக்கள்மனதில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும்?
வன்னியூர் கிறுக்கன்- மிகவும் முக்கியமான கேள்வி இதுவென்று கருதுகிறேன். முகநூலில் இன்று ஆயிரக்கணக்கான கவிப் படைப்பாளிகள் சிறப்போடும் சிந்தனை மிகுந்த கவி ஆளுமைகளோடும் துளிர் விட்டு உருவாகிறார்கள்
உருவாகி இருக்கிறார்கள் என்பதில் அகம் நிறைவு ஆனாலும் இன்றும் சிலர் போராட்டம் தமிழீழம் மறுபடியும் விடுதலைப் புலிகள் உருவாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட கேள்விக்கு பதில் கூறினால் என்னையும் துரோகி என்று முத்திரை குத்தும் சமூகம் இச் சமூகம் அதி மேதகு தமிழ்த் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அண்ணன் காட்டிய வழிகளும் ஊட்டிய வீரமும் பேசிய வார்த்தையும் வீசிய காதலும் சமாதானத்தை எடுத்து நின்ற ஒவ்வொரு படிகள் ஆகும் என்பதை நான் கற்றுக் கொண்டேன்
அவர் சமாதானத்தைத் தான் விரும்பினார் ஆனாலும் அதற்கான களத்தை அமைக்க மறுத்து விட்டார்கள் அறிவிலிகள்
இப்பொழுது பலர் எழுதிவருகிறார்கள் குறிப்பாக புலத்தில் இருக்கும் பலரும் எழுதுகிறார்கள்
ஈழம் விடியும் தமிழீழம் மலரும் தலைவர் வருவார் என்று தங்கள் உணர்ச்சிகளை எழுதுகிறார்கள் ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் உணர்வுகள் உண்டு அதை மறுத்து விட முடியாது
எனவே இது மக்கள் மனங்களில் மீண்டும் ஒரு அவலத்தை கண் முன் காட்டுவதாகவே உணர்கிறேன்
#அப்படி_எழுதுவோர்களுக்கு
எங்களிடம் போராட கைகள் இல்லை எழுந்து ஓட கால்கள் இல்லை படை சேர உறவு இல்லை இருக்கும் உடல் காக்க இடமில்லை இருப்பது என்னவோ உணர்வற்ற உடல்கள் மாத்திரம் தான்
எங்களுக்கு இன்று தேவை
நிம்மதியாக வாழ வீடு
சமவுரிமை கொண்ட நாடு
ஒற்றுமை மேலோங்கும் உறவு சுதந்திரமான வாழ்வு
இதற்காக எழுதுங்கள் இதுதான் எமக்கான தேவை என்பதை உணருங்கள் என்பதை கூற விரும்புகிறேன்
கடலூரான் சுமன்- நீங்கள் போராட்டசூழ்நிலைக்குள் வாழ்ந்தவர் என்கின்ற முறையில் நீங்கள் எதிர்பாக்கும் தமிழ்மக்களுக்கான தீர்வு என்ன?
வன்னியூர் கிறுக்கன்- இரண்டாவது கேள்விக்கு கூறியது போன்றே போராட்ட சூழ்நிலை என்பது இலகுவாக கூறி கடந்திட முடியவில்லை இரத்தம் சிந்தி சிவந்திட்ட மண்ணும் குண்டு கொட்டி குடியழித்த விண்ணும்
பிணம் மீது பாலம் செய்து கடந்த நடையும் உறவினை இழந்து துடித்திட்ட வலியும் எளிதில் மறந்து விட முடியாதவை அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து கடந்து வந்த மக்களின் வாழ்வியலில் இன்னும் சோகங்களும் பாடுகளும் தொடரப்பட செய்கின்றன
வலியோடு காயப்பட்டு வந்தவனை சொறிந்து பாக்கிறது இலங்கை அரசு அரசியல் மாற்றம் வர வேண்டும் மக்கள் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் அவர்கள் சுதந்திரமாக வாழ களங்களை அமைக்கா விடினும் வழிகளை விட்டு அகன்று நிற்க வேண்டும்
மற்றும் புலத்தில் வாழும் எம் தேசத்து உறவுகள் எமக்கான நீதி கோரிக்கை விடுவது மாத்திரம் அன்றி அதற்கான தீர்வு வரும் வரை நிலைத்திருக்க வேண்டும்
இன்று எம் மக்கள் போராட்டச் சூழ்நிலையை கடந்தாலும் அதன் தாக்கத்தை விட்டு சற்றும் மாறவும் இல்லை அந்த வடுக்கள் மறையவும் இல்லை எனவேதான் தூண்டுதல்
மற்றும் உணர்வினை பகிர்கிறோம் என்றும் போராட்டம் செய்கிறோம் என்றும் தமிழீழம் பிடிப்போம் என்று கூறும் கதைகளை சற்று நிறுத்தி இனிமேல் மக்களின் மனங்களை புரிந்து அனைவரும் செயற்பட வேண்டும்
மக்களுக்கான நல் திட்டத்தில் அனைவரின் சிந்தனைகள் இருக்கும் என்றால் நிச்சயமாக ஒருநாள் நாம் எதிர் பார்க்கும் நல் வாழ்வு மலரும் இதுதான் புரட்சி
கடலூரான் சுமன்- சீமான் அவவர்களின் ஈழம்தொடர்பான கருத்துக்கள்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
வன்னியூர் கிறுக்கன்- நிச்சயமாக நான் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கிறேன். தமிழீழ வரலாற்றை சிலர் திருப்பிப் பார்க்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இன்று சீமான் தான் சீமானைப் பற்றி ஏராளமான விமர்சனங்கள் எழுகின்றன உண்மை தான் காரணம் எவன் ஒருவன் உண்மையாக உணர்வோடு போராடுகிறானோ அவனையே பிரச்சினைகள் சூழும் இது தொடர்ந்து வரும் நிலைப்பாடு
எத்தனையோ தலைவர்கள் பிற மொழியை நாடி எடுப்பாக பேசும் போது தமிழ் மொழியே என் மரபு மொழியெனக் துடுப்புப் போட்டு காட்டியவன் சீமான் தான் இதை மறுக்க முடியாத ஒன்று
மேடையில் தமிழின் பாரம்பரியத்தையும் அதன் வரலாற்றுச் சொற்பொழிவையும் சிறப்போடும் வீரியத்தோடும் வீரத்தோடும் எடுத்துரைக்கும் தமிழன்
செந்தமிழன் சீமானின் சீற்றம்
________________________________
வேங்கைகள் குருதி
மண்ணில் பாய்ந்தோட
வெந்தணல்த் தீயில்
யாக்கைகள் கிழித்தெறிய
சந்தனப் பேளைகள்
வீரம் கொண்டொடிய
சரித்திரம் தொட்ட நிலம்
சகதிக்குள் புதைந்தழிய
சாதிக்கத் துடித்தவனை
கண்ணிகள் களவாட
சாகரம் தாண்டியே
அலைகளும் வலிபாட
ஏறிய விண்ணையே
எறிகணை தாக்கிட
குடிகளை குண்டுகள்
குழிகளில் விழ்த்திட
மறைந்திட்டோம் எனவே
எதிரிகள் நினைத்திட
அக்கினிச் சிறகெடுத்து
அடிமை விலக்குடைத்து
எழுந்தவன் எமக்காய்
செந்தமிழன் சீமானின் .
சிலருக்கு செருக்காய்த்
தெரிவதும் வியப்பே
எரிந்தது கொடியென
எழுந்தவன் நகைத்திட
மலர்ந்தது புலிக் கொடி
இதுவே சீமானின் உயர்படி
புரியடா தமிழா மறுபடி
எழடா நீயே தமிழன்
நடடா நாளைய தலைவன்
மேடையில் பாரடா
வீரியமூட்டிடும் பேச்சு
பாடையில் கிடந்தாலும்
விடுமடா இவன் தமிழ் மூச்சு
சங்கே விளங்கிடு
இவன் தமழ் உலகு
எங்கும் முழங்கிடும்
இவன் தமிழ் அழகு
தமிழுக்குக் கிடைத்திட்ட
தன்மானச் சிரசு
தமிழீழம் மலர்ந்திடும்
இவன் படையொரு முரசு
வன்னியூர் கிறுக்கன்
கடலூரான் சுமன்- உங்கள் பிரதேசங்களில் அபிவிருத்தி அரசியல் நகர்வுகள் எவ்வாறு உள்ளது?
வன்னியூர் கிறுக்கன் – இன்றைய காலத்தில் அபிவிருத்தி அரசியல் மாற்றங்கள் எதுவுமே நடப்பதாக தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் பல மேடைகளிலும் பிரச்சாரங்களிலும் நடக்கின்றன ஒரு கட்சியைப் பற்றி மற்ற கட்சி குறைகூறுவது குறை கூறுவதை விட்டு நிறை மறதோடு ஈடுபட்டால் இன்று வீதி வீதியாக மகனை காணவில்லை மனைவியை காணவில்லை அம்மா எங்கே அப்பா எங்கே என்று காத்திருக்கும் பிள்ளைகள் கவலை கொள்ளத் தேவையில்லை.
அரசியல் சாக்கடை என்று சொல்லும் பலரும் உண்டு சாக்கடை தான் அரசியல் என்றால் முதலில் நீ தான் அரசியலில் இறங்க வேண்டும் காரணம் உன்னால் தான் முடியும் சாக்கடையை சுத்தப்படுத்த
இனிமேலாவது அபிவிருத்தி நகர்வுகள் நடைபெற வேண்டும் என்றால் அரசியல் பிளவுகள் பற்றிய கூட்டங்களையும் குறைகூறும் கூற்றுகளையும் விட்டு அவர் அவர் பணிகள் மேல் பற்றாக இருந்தால் மட்டுமே முடியும் என்பது என் தனிப்பட்ட கருத்தாக அமைகின்றது.