2009ம் ஆண்டு சோன் 4 தடுப்பு முகாமில் ராணுவத்தின் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அங்கு பேய்கள் குழந்தைகளை கடத்திச் செல்கின்றன என்ற செய்திகள் முகாம் எங்கும் பரவின. முகாம்களுக்களுக்கு வருகைத் தந்த சர்வதேச நிறுவனங்கள் குழந்தைகள், கற்பினித்தாய்மார்கள், வயோதிகர்கள் மீது அதிக கவனம் செலுத்தியது. அப்படியான நிறுவனங்கள்கல்விச்செயற்பாடுகளையும் அரசாங்க கல்வித்திணைக்களத்தின் ஆதரவோடு நடத்தியது.
போரில் கடுமையாக உளப்பாதிப்புக்குள்ளான மாணவர்களை கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அந்தப்பாதிப்புக்களில் இருந்து அவர்களை மீட்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சிறுவர்களை அச்சுறுத்தும் வகையில் “பேய்கள் குழந்தைகளை கடத்துகிறது” என்ற புரளியை பரப்பிவிட்டதோடு, அங்கு பேய் ஓட்டும் நிகழ்வுகளும் நடக்க ஆரம்பித்தது.
பிள்ளைகள் கல்வி கற்கும் இடங்களில் பொம்மை, பூ, தேங்காய் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டு “இந்த பொம்மைதான் கத்தியது… இந்த பொம்மை தான் குழந்தைகளை துறத்தியது…அதோ மரத்தில் இருக்கு…இதோ இந்த மரத்துக்குப்பின்னால் இருக்கு”…என கதைகளை பரப்பி விட்டனர். ஆனால் இந்த தகவல்களை சொல்பவர்கள் யார் ? பேய் ஓட்ட வருபவர்கள் யார் ? என்று யாருக்கும் தெரியாது. அச்சத்தில் அவர்கள் சொல்வதை கேட்டு முழிப்போம். அங்கு வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டி ஒன்றில் ஒரு குழந்தை இறந்த நிலையில் கண்டு எடுக்கப்பட்ட சம்பவமும் நடந்தேறியது. இந்த சம்பவங்களினால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப பெற்றோர் பயந்தனர். சிறுவர்களோ என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தனர்.
இறுதிப்போர் முடிவுற்ற பகுதியில் இருந்து ராணுவத்திடம் இறுதியாக அதாவது மே 18ம் தேதிக்குப்பின் வந்தவர்களை ”புலி குடும்பங்கள்” என அடையாளப்படுத்தி இந்த சோன் 4முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இங்கு கடுமையான காவல் போடப்பட்டிருந்ததோடு அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 40.000 குடும்பங்களுக்கு அதே அளவு உள்ள ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
அவ்வாறான சூழலிலேயே இந்த பூ, பொம்மைகள் அங்கு பேய்களாக வந்து சேர்ந்தன. பொது மக்கள் அனுமதியில்லாமல் வெளியில் செல்லவோ, உள் நுழையவோ அனுமதியில்லை. ராணுவத்தின் முழுக்கண்காணிப்பின் கீழ் அவர்கள் கட்டுண்டு கிடந்தனர். எனவே இந்த பேய் பொம்மைகளை அழைத்து வந்தவர்கள் குறித்து சிந்திக்கவே தோன்றுகின்றது…
தமிழ் குழந்தைகளை கல்வியில் கவனம் செலுத்த விடாமல் தடுப்பதற்காக ராணுவத்தினரால் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு சதி செயலாகவே அன்று முகாமில் அடைப்பட்டிருந்த மக்கள் அச்சம்பவத்தை அணுகினர். இன்று அவ்வகையான அச்சுறுத்தல்கள் விதவிதமான வழிகளில் தமிழ்ச் சமூகத்தின் குழந்தைகளை குறிவைத்து நடத்தப்படுகின்றன.
வட மாகாணத்தின்முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், சட்டவிரோத போதைப்பொருட்களின் ஆபத்தை வடக்கில் உள்ள இளைஞர்களுக்கு விளக்குவதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக தெரிவித்த போதும் விழிப்புணர்வோடு கடுமையான சட்ட நடவடிக்கையும் அவசியம் என்கிறார்.
மேலும், “ மக்களில் பெரும் பகுதியினர் போரில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்துள்ளனர், 60,000க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போகியுள்ளனர். இந்த நிலையில், போருக்குப் பின் பெரும்பான்மையான மக்கள் சரியான வருமானம் இல்லாததால் பல குடும்ப பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். மது அருந்தியோ போதைப்பொருள் உட்கொண்டோ இப்பிரச்னைகளிலிருந்து மீண்டுவிடலாம் சிலர் எண்ணுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார் டாக்டர் சத்தியலிங்கம்.
இந்த சம்பவங்கள் குறித்து வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் குறிப்பிடுகையில், “நீண்டகாலமாக உரிமை கோரி போராடி வரும் தமிழினத்தின் உத்வேகத்தை சீர்குலைக்கும் நோக்கிலேயே திட்டமிட்டு இந்நிலை உருவாக்கப்பட்டு வருகிறது.
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த எமது விடுதலை போராட்டத்தை பார்த்தோமானால் எமது இளைஞர் யுவதிகளின் பங்களிப்பே பிரதானமாக இருந்தது. இன்றும் உரிமைக்கான அரசியல் போராட்டங்களை முன்னின்று நடாத்திவருபவர்களாகவும் இளைஞர், யுவதிகளே இருக்கின்றார்கள்.
அவர்களை மது, போதைப் பொருட்களின் பின்னால் அடிமைகளாக்கி விடுவதன் மூலம் தமிழர்களின் போராட்ட வெளியை பலவீனப்படுத்தி விடலாம் என்று திட்டமிட்டே இவ்வாறான செயற்பாடுகள் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் கடந்த ஆண்டு மாணவர்கள் விடுதிகளிலிருந்து போதைப்பொருள் மீட்கப்படுவதாகவும் அவர்கள் மது போதையில் பாடசாலைகளுக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இன்றும் இவ்வாறான செய்திகள் அவ்வப்போது வெளிவருவதை அவதானிக்கலாம். பாடசாலைகளின் அருகாமையில் இராணுவத்தின் காவல் அரண்கள் இருக்கின்றன. அப்படியிருப்பினும் பாடசாலை வளாகங்களில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுகின்றது. மாணவர்களுக்கு ஆபாச காணொலிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை தடுத்து மாணவர்களின் கல்விக்கு உதவுமாறு அரசிடம் கோரிக்கைகளை முன் வைத்து இடம்பெறும் போராட்டங்களும் தொடர்கின்றது.
ஆனாலும் அதற்கு இதுவரையில் தீர்வு கிடைக்கப்பதாக இல்லை. அதை ஒரு பெரிய பிரச்னையாக அரசு கருதுவதாகவும் இல்லை. தினம் ஒருவரோ அல்லது இருவரோ போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுகின்றனர். ஆனால் அவர்கள் உடனே பிணையில் செல்வதும் இங்கு வாடிக்கையாகி விட்டது. இவ்வாறு கைது செய்யப்படுபவர்களிடம் இருந்து பெறப்படும் பெருமளவிலான கஞ்சா போன்ற போதைப்பொருள்கள், இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருந்து தான் கடத்தி வரப்படுவதாக இலங்கை செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.
தினம் “கேளா கஞ்சாவுடன் இருவர் கைது“ என்ற தலைப்பில் செய்திகளைப் பார்க்க முடிகின்றது. தமது கடல் எல்லைக்குள் அரை கடல் மயில் பகுதிக்குள் தமிழக மீனவர்கள் நுழைந்தாலே ஆவேசம் கொண்டு கைது செய்தும், சுட்டும், துரத்தி அடிக்கும் இலங்கை கடற்படையால் ஏன் இந்த போதைப்பொருட்கள் கேரளாவில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்படுவதை தடுக்க முடியவில்லை? பயணிகள் விமான தளமான கட்டுநாயக்காவில் போதைப்பொருட்களை கடத்தி வரும் வெளிநாட்டு பிரஜைகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டுகின்றனர்.
இராணுவத்தின் துணையுடன் தான் இந்த போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கடல் வழியாக கொண்டு வரப்படுவதாக பல தரப்பாலும் குற்றம் சுமத்தப்படுகின்றது. இதற்கு சான்றாக கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி யாழ்ப்பாணம் அரியாலைப்பகுதியில் 25வயதுடைய டொன் போஸ்கோ ரிஸ்மன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். போதைப்பொருள் விற்பனையில் கடற் படையினருடன் ஏற்பட்ட முரண்பாடே இந்தக்கொலைக்கு காரணம் என கூறப்பட்டது. முன்னதாக இனம் தெரியாதோராலேயே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்பட்ட போதும், பின்னர், போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில்,கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, போதைப்பொருள் வர்த்தகத்தின் முக்கிய புள்ளிகள் நான்கு பேர் வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதை வைத்துப்பார்க்கும் போது இலங்கை அரசால் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை கட்டுக்குள் கொண்டு வருவது சற்று கடினம் தான்.
‘போதைப்பொருள் ஆயுதங்களை காட்டிலும் பெரும் தீங்கை விளைவிக்கும்’ என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வடக்கின் போதைப்பொருள் பயன்பாடு பற்றி தெரிவித்திருக்கிறார். போருக்கு பின்னரான ‘மறுவாழ்வு’ பற்றி ஐ.நா.விலும் சர்வதேச நாடுகளிடமும் முழங்கி பெரும் நிதியை பெறும் இலங்கை அரசு, மறுவாழ்வினை உறுதிசெய்ய தவறியதன் விளைவாகவே இத்தீங்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
– தொடரும்…