வேகும் உடலிற்கு வேசிப்பட்டம் கொடுப்பவர்களின் கவனத்திற்கு !
எதைக் கண்டீர்கள் எம்மிடத்தில்
எச்.ஐ.வி நோய்க்குப்பின்
ஆணின் சுவடிருப்பதை
ஏன் சுட்டெரித்து மறைக்கிறீர்கள்
ஐந்து ரூபாய் பணத்திற்கு
அங்கும் இங்கும் அலைகிறோம்
கிழிந்த ஆடை உடுத்திவிட்டு
நெளிந்து பசியால் வாடுறோம்
சொரிந்து இரத்தம் கொட்டுகையில்
வாடிப் போய்த் துடிக்கிறோம்
வீதியில் வீடமைத்து
மழையில் நனைகிறோம்
பாதியில் எமைக் கிழித்து
மீதியில் தவிக்கிறோம்
உயர்குலத்தார் பலர் கூட்டணியாய்
சாக்கடை நீரில் விட்டனர்
தேவைகள் முடிந்தவுடன்
கசக்கப்பட்ட ஆடைகளிற்குள்
மடிந்து கிடக்கும் மார்பில்
தாவப்பட்ட கரங்களோடு
இறைவனை வேண்டியே
வெண்மையாய் நடிப்பவர்களே
வெளுக்கப்பட்டு சாயம் போனபின்
யாக்கையை சக்கையைப் போல்
மிதித்துக் கடந்து விடுவீர்கள்
எங்கள் யாக்கைகள் மீது
காயத்தின் வடுக்களை
தடவிப் பார்க்கும் நீங்கள்
கீறிய நிகங்களை
மறைப்பதும் ஏனோ
போதையில் காம இச்சைகளை
தீர்த்திட பசியோடும் நாம் துடித்தால்
பணம் வேண்டும் பசியாற
என்பதை அறிந்தா பட்டம்
சூட்டி பாய் விரிக்கிறீர்கள்?
சட்டங்களைப் பிறப்பிக்கும்
ஆணிணமே மறைக்கப்பட்ட
நான்கு அறைகளிற்குள்
அவிழ்த்து விடப்பட்ட ஆசைகளை
மறைத்துவிட்டு விபச்சாரி
என்ற அபச்சார வார்த்தையால்
வறுத்தெடுத்தெமை வதைக்கிறீர்கள்
மேகங்கள் சிந்தும் மழைத்துளியில்
நனைந்திடும் பயிர்களைப் போல்
அவலக் குரல்களோடு
விழிநீர் சிந்தும் துளிகளில்
ஆயிரம் ஆசைகள் கறள் பிடித்து
அழிந்து போவதை நீங்கள்
அகத்தில் அறிவீர்களா?
நாளும் எமை நாவால்
வஞ்சித்து வார்த்தைகள்
விதைத்துவிட்டு விடையளிப்போரே
விலைமாதுவின் விழிகளிளாவது வலிகண்டதுண்டா?
மாளிகையில் பலரின்று
மகத்துவமாய்ப் பழகிவிட்டு
ஆசைகள் தீர்த்தவுடன்
பணம் கொடுத்து மறைத்துவிடும்
மங்கையர் உண்டு இவ்வுலகில்
போதைக்காய் குடித்துவிட்டு
குதூகலத்தில் களிகூர்ந்து
குத்தாட்டம் ஆடிவிட்டு
குடிமகன் குடிமகளாய் பலருண்டு
சமூகத்தில் இவைகளை
தெரியலையோ?
மாறிவிட ஆசை
எமக்கென்று ஒரு வாழ்க்கை
அளித்திடும் அரசு
எமக்குள்ளே வந்திடுமா ?
பல கேள்வி எமக்குள்ளும்
மலைபோல இருக்கிறது
விலைமாது விபச்சாரி
அபச்சார வழிகாட்டியென
மேடைகளில் உரைப்போரே
நாம் உருவான காரணத்தை
ஒருமுறை கூறுங்களேன்
வெட்கத்தில் தலைகுனிவீர்
அதிலொருவர் நீர் தானே
விழிமூடி வேகும் முன்னே
துயிலின்றி வரி தூவுகிறோம்
நல் வழியில் நாம் நடக்க
நாளும் வரம் தேடுகிறோம்
புரிந்திடுவீர் ஆணினமே
வேசிப்பட்டம் தரிக்கும் முன்னே
நாங்கள் விபச்சாரிகள் அல்ல
விபச்சாரி ஆக்கப்படுகிறோம்
அறிந்திடுவீர் உங்களையும்
மதித்திடுவீர் எங்களையும்
– வன்னியூர் கிறுக்கன்