இந்தோனீஷியாவில் உள்ள லோம்போக் தீவை ஞாயிற்றுக்கிழமையன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியதில் குறைந்தது 91 பேர் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
6.9 என்ற அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் மிக தீவிரமாக இல்லை. பூமியின் மேல் பரப்புக்குக் கீழே சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மட்டுமே இது ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
லோம்போக் தீவில் உள்ள முக்கிய நகரமான மடராமில் பெரும்பாலான கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக இந்தோனேஷியாவின் பேரிடர் தடுப்பு முகமையை சேர்ந்த பேச்சளார் ஒருவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த பெரும்பாலான கட்டடங்கள் தரம்குறைந்த மற்றும் வலுவில்லாத கட்டுமான பொருட்களால் கட்டப்பட்டவை என்று கூறப்படுகிறது.