திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், வயதின் காரணமாக அவரின் உடல் உறுப்புகள் சீராக செயல்பட சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளதென்றும், அவர் 24 மணி நேர கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இதுவரை அவரது உடல்நிலை குறித்து, காவேரி மருத்துவமனை மூன்று அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இது நான்காவது அறிக்கையாகும்.
இந்நிலையில், 10வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை நேரில் பார்க்க அவரது மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தோற்று காரணமாக சிகிச்சை எடுத்துவரும் கருணாநிதியை தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.
கடந்த வாரம் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திராபாபு நாயுடு உள்ளிட்டவர்கள் கருணாநிதியின் உடல்நலன் குறித்து நலம் விசாரித்தனர்.
திமுக தலைவரின் உடல்நலன் பற்றிய மருத்துவ அறிக்கைகள் அவ்வப்போது வெளியாகி வந்தாலும், அவர் குணமாகி வீடு திரும்பும்வரை மருத்துவமனையைவிட்டுச் செல்லப்போவதில்லை என்ற முடிவில் திமுக தொண்டர்கள் சிலர் ஆழ்வார்பேட்டையில் காத்திருக்கின்றனர்.