‘சிறுதெய்வம்’ என்ற பெயரை மக்கள் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. ஆய்வாளர்களும் எழுத்தாளர்களுமே பயன்படுத்தி வந்தனர்/வருகின்றனர். சிறுதெய்வம் என்கிற சொல்லில் உள்ள ‘சிறு’ என்கிற முன்னொட்டு எந்தப் பொருளில் தொனிக்கிறது, அதை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் அரசியல் முற்றிலும் மாறிவிடுகிறது. தமிழின் முக்கியமான ஆய்வாளர்களான தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன், அ.கா.பெருமாள் போன்றவர்கள் ‘சிறுதெய்வம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்றே குறிப்பிடுகிறார்கள்.
‘நாட்டார் தெய்வம்’, ‘மக்கள் தெய்வம்’, ‘கிராமிய தெய்வம்’, மண்ணின் தெய்வம்/சாமி’ போன்ற பல மாற்று சொற்கள் இன்று வழங்கப்பட்டுவருகின்றன.
சிறுதெய்வம் x பெருந்தெய்வம் என்பதற்கு மாற்றாக
நாட்டர் தெய்வம் x வைதீகக் கடவுள் என்பதாக முன்வைக்கலாம்.
கோயில் உருவாக்கம், வழிபாட்டு முறை, படையல் உணவு, சடங்குகள், அக்கோயிலை ஒட்டி நிகழ்த்தப்படும் கலைகள் என இரண்டும் முற்றிலும் எதிர்க்குணம் கொண்டவை. பெண்களுக்கான வெளி என்பது நாட்டார் தெய்வ வழிபாட்டில் மிகுந்த முக்கியத்துவம்கொண்டது. மக்களில் ஒருவரே தெய்வத்தைத் தொட்டு படையல் கொடுப்பது, தெய்வத்துடன் நேரடியாக உரையாடி தங்கள் கொடுத்த ஊட்டு ஏற்கப்பட்டதா என அறிந்துகொள்வது, வறட்சி, நோய்மை சார்ந்த கோபங்களை நேரடியாக தெய்வத்திடம் வசைச்சொற்களோடு முன்வைப்பது எனப் பழங்குடித்தன்மையின் வெகுளித்தனமும் உக்கிரமும் கொண்டது நாட்டார் வழிபாடு. இது ஒட்டுமொத்த வைதீக வழிபாட்டுப் பாசாங்குகளுக்கு எதிரான தன்மைகொண்டது. ஊட்டு ஏற்கப்படவில்லை என்று கோபப்படும் சாமியாடியிடம், “என்ன மயித்துக்கு ஏக்க முடியாது… மழையுமில்ல மண்ணுமில்ல… அதையும் இதையும் அடகுவச்சு கொடை குடுத்தா, ஏக்க முடியாதாம்ல” என்று சாமியிடம் சண்டைக்குப் போகும் ஜனநாயகம் கொண்டது இந்த வழிபாட்டு முறை.
குறிப்பிட்ட சாதிகளுக்கான தெய்வங்கள் என்கிற ஒரு பிரச்னை நாட்டார் வழிபாட்டில் உண்டு என்றாலும் எந்த தெய்வத்தையும் தங்கள் தெய்வமாக வரிந்துகொண்டு வழிபட அவர்களுக்கான உரிமையை அது கொண்டிருக்கிறது. குறிப்பாக இசக்கி, சுடலைமாடன், பன்றி மாடன், கொம்பு மாடன் போன்ற பல தெய்வங்களைப் பல சாதிகளும் வழிபடுகிறார்கள். சாஸ்தா வழிபாட்டிலும்கூட இந்த சாதிய பாகுபாடற்ற தன்மை உண்டு.
இன்று இந்துத்துவ மேலாதிக்கவாதிகள் நாட்டார் தெய்வக் கோயில்களில் வழிபாட்டு முறைகளில் வைதீக அம்சங்களை நுழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கோயில்களுக்கு குடமுழுக்கு, தெய்வங்களை உயர்நிலைக்குக் கொண்டுசெல்கிற யாகபூஜைகள் என அநியாங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். கோயில் சார்ந்த முக்கியக் கலைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேலையையும் செய்துவருகிறார்கள். எளிய மக்களும் ‘நம் தெய்வமும் கொஞ்சம் உயர்ந்து வசதியாக உரிய மரியாதை பெறட்டுமே’ என்று தங்கள் பிள்ளைகளைப் பற்றிச் சிந்திப்பதுபோல மனம் கொண்டிருக்கிறார்கள்.
நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் கொலையால், பலியால், தியாகத்தால் உருவானவர்கள் என்கிற கருத்தை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் முன்வைக்கிற இரண்டு தரப்புகள் தமிழ் அறிவுச்சூழலில் உண்டு. இந்தப் பார்வையும் முக்கியமானதுதான் ஆயினும் நமது மண்ணின் பண்பாட்டின் மீது தொடுகப்படும் உளவியல் யுத்தத்தை அம்பலப்படுத்துவதான் நம் முதல் பொறுப்பாக இருக்க முடியும்.
எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் மிகக் கவனமாக இயங்க வேண்டிய சூழல் இது. கவனம்கொள்வோம்.
கண்மணி குணசேகரனின் இந்தப் படம் எனக்கு மிகப் பிடித்த ஒன்று. தெய்வமும் மனிதனும் ரத்தமும் சதையுமாக ஓரிடம்பெறும் மக்கள் வழிபாட்டைக் காட்டும் மகத்தான படம்.
Kirisanth Sivasubramaniyam