தத்துவஞானி பிளாட்டோ கிரேக்க மொழியில் எழுதி, சாகித்ய அகாடமி தமிழில் வெளியிட்டுள்ள, ‘குடியரசு’ நூலை அண்மையில் படித்தேன். ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை நூல் சொல்கிறது. நாட்டை வழி நடத்துபவன் ஒரு தத்துவஞானியாக இருக்க வேண்டும் என்பது, நூல் ஆசிரியரின் நோக்கமாக இருந்தாலும், அவனுடைய கருத்துக்கள் மக்களிடையே எதிர்மறை தாக்கத்தை உருவாக்கும் என்பதால், அரசுக்கு பின்னால் இருந்து இயக்கும் சக்தியாக, தத்துவஞானிகள் இருக்க வேண்டி உள்ளது என்கிறார்.அரசியல் என்ற பொதுவெளியில், அரசியல்வாதிக்கான தகுதியாக, பாடத் திட்டம் அடிப்படையிலான படிப்பை மட்டுமே முன்னிறுத்துகின்றனர். ஆனால், மக்களை படிப்பதில் இருப்பதே தலைவனின் தகுதி என, நூல் சொல்கிறது.
தன் கருத்துத்தையும், அதற்கான எதிர்க் கருத்தையும் பிரித்துப் பார்த்து உணர்வதே சரியானது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின், தானே நாடு என நினைத்து செயல்படுபவர்கள், கருத்தோடு எதிர்க்கருத்தை பிரித்துப் பார்க்க முடியாமல், ஜனநாயகத்துக்கு எதிரான திசையில் பயணிக்கின்றனர்.’குடியரசு’ நூல், அடிப்படையிலேயே இக்கருத்தை மறுக்கிறது. தன்னுடைய பட்டறிவால் மக்களையும், சமூகத்தையும் படித்து, தொடர்ந்து அது சார்ந்த செயல்களை மேற்கொள்ள, அரசியல்வாதிகளுக்கு பயிற்சி அவசியம் என்கிறது. சமூக அடிப்படையிலான அறிவு மட்டுமே, நாட்டையும், மக்களையும் வழிநடத்தும் என்கிறது. இன்றயை காலங்களில், இதற்கு நேர் எதிரான அரசியல் தலைவர்கள் தான் உருவாகின்றனர். அவர்கள் கருத்தே இறுதியானது. எதிர் கருத்துக்கு இடமில்லை என்ற போக்கே நிலவுகிறது. இப்போக்கு மாற, அரசியல்வாதிகளும், இளைஞர்களும், ‘குடியரசு’ நூலை படிப்பது, சமூகத்துக்கு மிக அவசியம்.
கவுதம சன்னா
எழுத்தாளர்