யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை சட்டத்திற்கு முரணாக கைது செய்து அந்நபரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஶ்ரீலங்கா இராணுவ கட்டளை தளபதி மற்றும் இராணுவ சிப்பாய் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்தும், ஒர் இராணுவ அதிகாரியை விடுதலை செய்தும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற குறித்த குற்றச் சம்பவத்தின் குற்றப்பத்திரம் மீதான வழக்கு விசாரணையானது கடந்த ஒன்பது ஆண்டுகளாக திருகோணமலை மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில் நேற்றைய தினம் காலை 11.15 மணிக்கு நீதிபதியால் மரணதண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் 09.09.1998 ஆம் ஆண்டு யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த அன்ரன் குணசேகரம் என்ற இளைஞர் ஶ்ரீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் இரண்டு நாட்களில் சடலமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் குறித்த நபரை கைது செய்து சென்ற இராணுவ அதிகாரிகள் முறையே 51ஆவது முகாம் தளபதி முதலாம் எதிரியாகவும், யாழ்.512ஆம் படைப்பிரிவின் கட்டளை தளபதி இரண்டாம் எதிரியாகவும், திருநெல்வேலி இராணுவ முகாம் இராணுவ அதிகாரி மூன்றாம் எதிரியாகவும் பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த நபரை தாம் கைது செய்து திருநெல்வேலி முகாமில் வைத்திருந்த போது இந் நபர் முகாமில் மேலிருந்து கீழே வீழ்ந்து இறந்ததாக இவ் எதிரிகளால் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிடப்பட்டதையடுத்தே இம் மூவருக்கும் எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் இவ் இராணுவ அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என குறிப்பிட்டு குறித்த வழக்கானது அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது. அங்கு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று குறித்த மூன்று இராணுவ அதிகாரிகளுக்கும் எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் கடந்த 2007ஆம் ஆண்டு கொலை குற்றச்சாட்டு பத்திரமானது சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
யாழ்.மேல் நீதிமன்றிலும் குறித்த இராணுவ அதிகாரிகளான எதிரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து இவ் வழக்கு விசாரணைகளானது திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒன்பது வருடங்களாக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்றது. இவ் வழக்கு விசாரணையினை திருகோணமலை மேல் நீதிமன்ற அரச சட்டவாதி சக்கரவர்த்தி ஜாதவன் நெறிப்படுத்தியதுடன் எதிரிகள் சார்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யூ.ஆர்.டி.சில்வா முன்னிலையாகியிருந்தார்.
குறித்த வழக்கில் இரண்டு இராணுவ உத்தியோகத்தர்கள் அரச தரப்பு சாட்சியாக சாட்சியமளித்திருந்தனர். ஒருவர் இராணுவ ஜீப் சாரதி மற்றும் இராணுவ உத்தியோகத்தராவார்.
குறிப்பாக குறித்த நபரை முதலாம் இரண்டாம் மூன்றாம் எதிரிகள் கைது செய்து திருநெல்வேலி முகாமில் தடுத்து வைத்திருந்ததாக இராணுவ ஜீப் வண்டி சாரதி சாட்சியமளித்திருந்தார்.
அதேபோன்று இவ் வழக்கில் மற்றுமொரு முக்கியமான சாட்சியம் சாட்சியமளித்திருந்தார். அதாவது யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் வைத்தியர் மயூரதன் சாட்சியமளித்திருந்தார். இவர் தனது சாட்சியத்தில்,
குறித்த நபரது உடலில் 21 காயங்கள் காணப்பட்டதாக சாட்சியத்தில் குறிப்பிட்டிருந்தார். உடலின் மார்ப்பு, நெஞ்சு, ஆணுறுப்பு, ஆணுறுப்பின் விதை பகுதி போன்றவற்றில் காயங்கள் காணப்பட்டதாகவும் உடலில் ஏற்பட்ட அதிக இரத்த போக்கே மரணம் நிகழ காரணம் எனவும் சாட்சியத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இவரின் உடலில் காணப்பட்ட 21 காயங்களில் பல கண்டல் காயங்களும், பல கிழிஞ்சல் காயங்களும் காணப்பட்டதாக சாட்சியமளித்திருந்தார்.
மேலும் கொல்லப்பட்ட நபரின் மனைவி சாட்சியமளிக்கும் போது, எனது கணவரை ஜீப்பில் கொண்டு வந்து வீட்டினை சோதனை செய்ய வந்த போது, இராணுவத்தினரிடம் ‘ஏன் எனது கணவரை கைது செய்தீர்கள் ? என கேட்டதாகவும், ஆனால் அவர்கள் அதற்கு பதிலளிக்காமல் அவரை அழைத்து சென்றதாகவும் சாட்சியமளித்துள்ளார்.
அத்துடன் வாகனத்தை கலைத்துக்கொண்டு சென்ற போது வாகனம் குருநகர் இராணுவ முகாம் பக்கமாக சென்று மறைந்த்தாகவும் பின்னர் 48 மணி நேரத்தில் சடலாமகவே தனது கணவரை யாழ்.போதனா வைத்தியசாலையின் பிணவறையில் கண்டதாகவும் சாட்சியமளித்திருந்தார்.
இவ்வாறு பல சாட்சியங்களது சாட்சியங்களையும், எதிரிதரப்பு சட்டத்தரணியினது வாதங்களையும் பரிசீலித்த மன்றானது நேற்றைய தினம் இவ் வழக்கின் தீர்ப்புக்காக திகதியிட்டிருந்தது.
இதன்படி நேற்றைய தினம் காலை பதினொரு மணியளவில் நீதிபதி தனது தீர்ப்பினை திறந்த மன்றில் அறிவித்திருந்தார். அத்துடன் நீதிபதி தனது தீர்பில் இலங்கை உயர் நீதிமன்றம் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாகவும், சித்திரவதை தொடர்பான வழக்குகளிலும் வழங்கிய தீர்ப்புக்களையும், ஐ.நா.யுத்த குற்ற நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்களையும் மேற்கோள்காட்டி தனது தண்டனை தீர்ப்பை வழங்கியிருந்தார்.
இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை ஆராய்கின்ற போது, குறித்த இளைஞன் சட்ட முரணாக கைது செய்யப்பட்டமை, சட்ட முரணாக தடுத்து வைக்கப்பட்டமை, தடுப்புக் காவல் சித்திரவதை, நீதி விசாரணையற்ற படுகொலை என்பனவற்றிக்கு குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு 48 மணி நேரத்தில் 21 காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டமை சான்றாகவுள்ளது.
மேலும் இவ் வழக்கின் முதலாம் எதிரியான 51ஆவது படைத் தளபதி அச்சுவேலி முகாமை சேர்ந்தவர். அவர் குறித்த இளைஞனை கைது செய்தமை, தடுத்து வைத்தமை என்பனவற்றுடன் மாத்திரமே தொடர்புபட்டுள்ளதுடன் அவர் சித்திரவதை புரிந்தமை, கொலை செய்தமை என்பனவற்றுடன் தொடர்புபட்டார் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லை.
எனவே இவ் வழக்கிலிருந்து இவ் இராணுவ அதிகாரி விடுதலை செய்யப்படுகின்றார். அத்துடன் 512ஆவது கட்டளை தளபதியின் கட்டுப்பாட்டிலேயே இந்த திருநெல்வேலி முகாம் உள்ளது. மற்றும் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் ஆதாரங்களூடாக பார்க்கின்ற போது இரண்டாம் எதிரியான இராணுவ கட்டளை தளபதி, மற்றும் திருநெல்வேலி இராணுவ முகாம் அதிகாரி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டானது நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படுகின்றது.
எனவே குறித்த வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட 512ஆம் படை பிரிவின் கட்டளை தளபதி மற்றும் திருநெல்வேலி இராணுவ அதிகாரி ஆகிய இருவருக்கும் ஜனாதிபதி விரும்பும் நேரத்தில் விரும்பும் இடத்தில் கழுத்தில் சுருக்கு கயிறிட்டு உடலில் இருந்து உயிர் பிரியும் வரை துக்கிலிட்டு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு ஆணை பிறப்பித்தார்.
குறித்த மரண தண்டனை தீர்ப்பானது வாசிக்கப்படும் போது நீதிமன்றின் அனைத்து விளக்குகளும், அணைக்கப்பட்டு தீர்ப்பு எழுதப்பட்ட பேனா முறித்து எறியப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் சில நிமிடம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.