சரியான மன நல நிபுணரைக் கண்டறிவது சற்றே சிரமமான வேலைதான். ஆனால், அதற்காக நேரம் செலவிடுகிறவர்கள் பின்னர் நிம்மதியாக வாழ்கிறார்கள்.
எழுதியவர்: டாக்டர் கரிமா ஶ்ரீவஸ்தவா
பெரும்பாலான மக்கள் அவ்வப்போது சோர்வாக உணர்கிறார்கள். ஆனால், சில நாள்களில் அவர்களே அதிலிருந்து மீண்டு இயல்பாகிவிடுகிறார்கள், இதற்கு, அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் சற்றே உதவினால் போதுமானது. ஆனால், சிலருடைய உணர்வுப்பிரச்னைகள் இப்படித் தானே தீர்ந்துவிடுவதில்லை. அவர்களுடைய சோர்வான உணர்வுகள், அவர்களது உணர்வு மற்றும் மன வளங்களைச் சுரண்டிவிடுகின்றன, இதுபோன்ற அழுத்தம் நிறைந்த சூழல்களைச் சிறப்பாகக் கையாளும் திறனை அழித்துவிடுகின்றன. மனநலம் தொடர்பான விஷயங்களுக்காக, ஒருவர் எப்போது மனநல நிபுணரை அணுகவேண்டும்?
ஒருவருக்கு மனநல நிபுணரின் உதவி தேவையா, இல்லையா என்பதைக் கண்டறிய ஓர் எளிய வழி, அந்தப் பிரச்னை (இது உணர்வுப்பிரச்னையாக இருக்கலாம், சோகம், மனோநிலை மாற்றங்கள், பதற்றம்/அலைபாயும் எண்ணங்கள் அல்லது பிறருடன் உறவுகளில் பிரச்னைகள், இப்படி எதுவாகவும் இருக்கலாம்) அவருடைய வேலையை, சமூக அல்லது தனிப்பட்ட வாழ்க்கையை எப்படிப் பாதித்துள்ளது, அது அவருக்கு எந்த அளவு மனத்துயரைத் தருகிறது என்பதைக் கவனிப்பது. இன்னொரு வழி, மனநல நிபுணரைச் சந்திக்கவேண்டுமா என்கிற எண்ணத்தில் இருப்பவர், இதுபற்றித் தன் அன்புக்குரிய ஒருவரிடம் பேசலாம், அல்லது, தன்னைத்தானே கேட்டுக்கொள்ளலாம்.
உதவிகோரலின் முதல்படி
பாதிக்கப்பட்ட ஒருவர் மனநல நிபுணரிடம் உதவிகோர விரும்பினால், அதற்கான முதல் மற்றும் முக்கியமான படிநிலை, தனக்கு உதவி தேவை என்று அவர் தன் மனத்தைச் சமாதானப்படுத்துவதுதான். ஆனால், அப்படிச் செய்ய இயலாதபடி அவருக்குப் பலவிதமான தயக்கங்கள், குழப்பங்கள் இருக்கும். பிறர் தன்னை எடைபோடுவார்களோ என்று அவர் தயங்கலாம், மற்றவர்கள் தன்னைப் பைத்தியம் என்று அழைத்துவிடுவார்களோ என்று அஞ்சலாம். இதுபற்றி அவர் பிறரிடம் பேசினால், குழப்பமான ஆலோசனைகள்தான் கிடைக்கும், “ஒரு சொடக்குப்போட்டா இதிலேர்ந்து வெளியே வந்துடலாம்” என்பார்கள் சிலர், “நீ நினைச்சாப் போதும், எல்லாம் சரியாகிடும்” என்பார்கள் சிலர்.
மனநல நிபுணரின் உதவி தேவைப்படுகிற ஒருவர், அதை எண்ணி வெட்கப்படக்கூடாது. இதில் வெட்கப்பட எதுவுமே இல்லை என்பதை அவர் உணர்வது முக்கியம். பலர், தங்களுடைய அறிகுறிகளுக்காகத் தங்களையே குற்றம் சாட்டிக்கொள்கிறார்கள், அல்லது, தாங்கள் இப்படி நடந்துகொள்கிறோமே என்று குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள். ஒருவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற உடல்சார்ந்த நோய்களின் அறிகுறிகள் வரும்போது, அவர்கள் மருத்துவரிடம் உதவிபெறலாமா என்று யோசிப்பதில்லை, அதை எண்ணி வெட்கப்படுவதில்லை. மனநலப் பிரச்னைகள் வந்தால்மட்டும் நிபுணரை அணுக ஏன் தயக்கம்? அவர் தன்னிடம் வருபவர்களையோ அவர்களுடைய நடவடிக்கைகளையோ தவறாகக் கருதமாட்டார், அவர்களது பிரச்னைகளைத் தீர்க்கவே முனைவார். மனநலப் பிரச்னை கொண்ட ஒருவர் தனக்குச் செய்துகொள்ளக்கூடிய மிகப் பெரிய நன்மை, உரிய நிபுணரைச் சந்தித்து உதவி பெறுவதுதான். அவர்கள் குணமாக விரும்பினால், இதுவே அதற்கான முதல் படி. இன்னொரு விஷயம், மனநலப் பிரச்னை கொண்டவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அல்லது அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அவர்களது சிகிச்சையில் ஒரு மிக முக்கியமான பங்களிப்பை வழங்குகிறார்கள். குறிப்பாக, அவர்கள் அழுத்தத்தாலும் உளவியல் மனத்துயராலும் அழுத்தப்பட்டிருக்கும்போது, அதைப்பற்றிப் பேசவோ, உதவி கோரவோ அவர்களுக்கு நம்பிக்கையில்லாதபோது, குடும்ப உறுப்பினர் அல்லது கவனித்துக்கொள்பவருடைய உதவி மிக முக்கியமாகிறது.
பாதிக்கப்பட்டவருடைய தெரிவு முக்கியம்
பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கு உதவக்கூடிய மனநல நிபுணரைத் தேடும்போது, இந்த உண்மையை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்: பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் சரி, அவர் எந்தச் சவால்களைச் சந்தித்துக்கொண்டிருந்தாலும் சரி, மனநல நிபுணர்விஷயத்தில் சில விஷயங்களை எதிர்பார்க்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. அவை:
- அந்தரங்க உரிமை, ரகசியத்தன்மை, கண்ணியம் மற்றும் மரியாதை
- பாதிக்கப்பட்டவருடைய தேவைகள் மற்றும் கலாசாரப் பின்னணிசார்ந்த நுண்ணுணர்வு
- அவருக்கு என்ன பிரச்னை, அதனைத் தீர்க்க என்னென்ன சிகிச்சைமுறைகள் உள்ளன என்பதைப்பற்றிய புரிந்துகொள்ளக்கூடிய விளக்கம்
- ஒருவேளை, இந்தச் சிகிச்சையில் அவருக்குத் திருப்தியில்லாவிட்டால், அல்லது, அவர் விரும்பியபடி அது பலனளிக்கவில்லை என்று அவர் எண்ணினால், இன்னொரு நிபுணரிடம் செல்லும் சுதந்தரம்
பாதிக்கப்பட்டவர் மனநல நிபுணரை முதன்முறையாகச் சந்திப்பதற்குமுன்னால், தான் யாரிடம் மிகவும் சவுகர்யமாகப் பேசுவோம் என்று சிந்திக்கவேண்டும். இந்த நேரத்தில் கருத்தில் கொள்ளவேண்டிய சில காரணிகள்: நிபுணரின் பாலினம், வயது, மதம், மொழி மற்றும் கலாசாரப் பின்னணி. பாதிக்கப்பட்டவர் இந்த அடிப்படையில் சில மனநல நிபுணர்களைச் சந்திக்க விரும்பாவிட்டால், பரவாயில்லை. இந்த விஷயத்தில் அவருடைய சவுகர்யவுணர்வு முக்கியம். காரணம், இது ஒரு நீண்ட-நாள் உறவு.
கூட்டு உறவு நல்லது
பாதிக்கப்பட்டவருக்கும் மனநல நிபுணருக்கும் இடையே ஏற்படும் உறவு, ஒரு கூட்டணியைப்போன்றது. இவர்கள் இருவரும் இணைந்து, பாதிக்கப்பட்டவர் நலம் பெறுவதற்கான ஒரு சிகிச்சைத் திட்டத்தைக் கண்டறிவார்கள். மனநல நிபுணரைச் சந்திக்கிறவர்கள், தங்களுடைய பிரச்னையைப்பற்றிப் பிறருக்குத் தெரியவந்துவிடுமோ என்று எண்ணவேண்டியதில்லை. மனநல நிபுணர்கள் எல்லாரும் இந்தவிஷயத்தில் ஓர் ஒழுக்கத்துக்குக் கட்டுப்பட்டவர்கள், தங்களிடம் சிகிச்சைக்கு வருகிறவர்களுடைய பிரச்னையை, சிகிச்சையின்போது அவர்கள் சொல்லும் விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பார்கள். ஒரு நல்ல சிகிச்சை உறவு என்பது, மருத்துவருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே ஏற்படும் நல்ல பழக்கம், அனுதாபவுணர்வு மற்றும் நிபந்தனையற்ற நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிறது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். அத்தகைய ஓர் உறவைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவர்கள் இருவருமே முனையவேண்டும்.
மனநலப் பிரச்னையுள்ள ஒருவர், அதற்காக ஒரு நிபுணரைச் சந்திக்கவிரும்புகிறார், ஆனால், அவர் எந்தவகை நிபுணரைச் சந்திக்கவேண்டும்?
பொதுவாக, மனநலப் பிரச்னைகளுக்கு இரண்டு வகையான சிகிச்சைகள் உள்ளன: உளவியல் மற்றும் மனநலவியல். சில பிரச்னைகள் முற்றிலும் உணர்வு, உளவியல்தன்மை கொண்டவையாக இருக்கும். உதாரணமாக, மிதமான அல்லது நடுத்தர அளவு மனச்சோர்வு, பதற்றம், அழுத்தம் போன்றவை. இந்தப் பிரச்னைகளைக் கொண்டவர்கள் ஓர் உளவியலாளர்/ சைக்கோதெரபிஸ்டைச் சந்திப்பது நல்லது. ஒருவேளை அவர்களுக்குத் தீவிர மனச்சோர்வு அல்லது தீவிர செயல்பாட்டுக் குறைபாடு இருந்தால், அவர்கள் தங்களது அறிகுறிகளைக் கையாள்வதற்கு மருந்துகளோடு, உளவியல் ஆலோசனை போன்ற தெரபிகளும் அவர்களுக்குத் தேவைப்படலாம். சார்ந்திருக்கும் ஸ்கிஜோஃப்ரெனியா போன்ற தீவிர உளவியல் குறைபாடுகளுக்கு, ஆரம்பத்தில் மனநல மருந்துகள்மட்டுமே தேவைப்படலாம், அவற்றைக்கொண்டு பாதிக்கப்பட்டவருடைய மாயத்தோற்றங்கள் அல்லது பிரமைகளைக் குறைக்கவேண்டியிருக்கலாம்.
பொதுவாக, ஒருவருக்கு வந்திருக்கும் அறிகுறிகளின் தீவிரத்தன்மை, அவருடைய பிரச்னையைக் கண்டறிதலில் இருக்கும் சிக்கல்தன்மை போன்றவற்றைப்பொறுத்து, அவர்கள் தங்களுடைய பிரச்னையைக் குணப்படுத்தும் திறனைக்கொண்ட மனநல நிபுணரைச் சந்திக்கவேண்டும்.
ஒருவர் தன்னுடைய குறைபாட்டுக்குக் காரணம் உணர்வு அல்லது உளவியல் பிரச்னைதான் என்று அடையாளம் கண்டால், நேரடியாக ஓர் உளவியலாளர் அல்லது மனநல ஆலோசகரை அணுகலாம்.
ஒருவர் உளவியலாளரை அணுகவேண்டும் என்று தீர்மானித்தபிறகு, தான் எதிர்பார்க்கும் தெரபி/ சிகிச்சை வகை என்ன என்று தன் மனத்தைக் கேட்டுக்கொள்ளவேண்டியது அவசியம். பெரும்பாலான மனநல நிபுணர்கள் பலவிதமான பிரச்னைகளுக்குச் சிகிச்சையளிப்பவர்களாக இருப்பார்கள். அதேசமயம், சில குறிப்பிட்ட பிரச்னைகளைத் தீர்ப்பதில் சிறப்புப் பயிற்சி, அனுபவம் பெற்ற நிபுணர்களும் இருப்பார்கள். அந்தப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களை அணுகினால், விரைவான, சிறந்த பலன் கிடைக்கும். உதாரணமாக, ஒருவருக்கு உண்ணுதல் குறைபாடு இருக்கிறது. ஆகவே, அவர் உண்ணுதல் குறைபாட்டைச் சரிசெய்யக்கூடிய ஓர் உளவியலாளரைச் சந்திக்கவேண்டும். இன்னொருவருக்குத் திருமணம் சார்ந்த உறவுச் சிக்கல் இருக்கிறது, ஆகவே, அவருக்கு ஒரு திருமண & குடும்ப தெரபிஸ்ட் உதவலாம். ஒரு குழந்தைக்குத் தேர்வு தொடர்பான பதற்றம் இருக்கிறது, ஆகவே, அந்தக் குழந்தையைப் பள்ளி ஆலோசகரிடம் அழைத்துச்செல்வது நல்லது. இன்னொரு விஷயம், தாங்கள் ஒரு தெரபிஸ்டிடம் குறிப்பாக என்ன எதிர்பார்க்கிறோம் என்பது பலருக்குத் தெரியும். உதாரணமாக, தான் சொல்வதைக் கேட்கக்கூடிய, தான் இலக்குகளை அமைக்க உதவக்கூடிய, தான் சமாளிக்கும் திறன்களைக் கற்றுக்கொள்ள உதவக்கூடிய ஒரு தெரபிஸ்டைச் சந்திக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஒருவர் எண்ணலாம்.
ஒருவருடைய மனநலப் பிரச்னை தீவிர அறிகுறிகளுடன் அவரைப் பலமாக்கிக்கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உதாரணமாக, அவருக்குத் தீவிர மனச்சோர்வு, அதனால் தற்கொலையைப்பற்றிச் சிந்திக்கிறார், அவருக்குத் தலைவலி அதிகமாக வருகிறது, மனம் துவண்டிருக்கிறார், தனக்கு எந்த மதிப்பும் இல்லை என உணர்கிறார், அவருக்குப் பசிப்பதில்லை, தூக்கம் வருவதில்லை… இதுபோன்ற சூழ்நிலையில் அவர் ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெறவேண்டும், அந்த மருத்துவர் அவருக்கு ஆன்டி-டிப்ரசன்ட்களைத் தந்து இந்த அறிகுறிகளில் சிலவற்றைச் சரிசெய்வார். அத்துடன், அவர் ஓர் உளவியலாளரையும் சந்திக்கலாம், இந்த உளவியலாளர் அறிவாற்றல் நடவடிக்கைச் சிகிச்சையின்மூலம் அவரது செயலற்ற எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைக் கட்டமைப்பார், அவர் தனக்குப் பிடித்த வேலைகளை மீண்டும் தொடங்குவதற்கு உதவுவார்.
முந்தைய மருத்துவ வரலாறைப் பகிர்ந்துகொள்ளுதல்
மருத்துவரைச் சந்திக்கிற ஒருவர் தனது மருத்துவ வரலாறைப்பற்றி வெளிப்படையாகப் பேசுவது நல்லது. ஒருவேளை அவருக்குத் தலைவலி அல்லது வயிற்றுவலி போன்றவை அடிக்கடி வருகின்றன என்றால், அதைப்பற்றிச் சொல்லவேண்டும், மது அருந்துதல், புகைபிடித்தல், தவறான போதைமருந்துகளைப் பயன்படுத்துதல், அல்லது, தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ளுதல் (வெட்டிக்கொள்ளுதல்) போன்ற பழக்கங்களைப்பற்றிச் சொல்லவேண்டும். இதற்குமுன் அவர் ஏதாவது ஓர் உளவியலாளர், சமூக ஊழியர் அல்லது மனநல மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெற்றிருந்தால், அதைப்பற்றியும் மருத்துவரிடம் சொல்லவேண்டும், அந்தச் சிகிச்சை தனக்கு எப்படி உதவியது என்பதை விவரிக்கவேண்டும்.
மருந்துகளைச் சாப்பிடுதல்
பாதிக்கப்பட்டவருக்கு மருந்துகளைச் சாப்பிடுவதுபற்றி ஏதேனும் கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால், அவற்றால் என்ன பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்று குழப்பம் ஏற்பட்டால், மருத்துவரிடம் அதைக் கேட்டுத் தெளிவுபெறவேண்டும்.
பலவகை மருத்துவ நிபுணர்கள்
-
முதன்மைப் பராமரிப்பு மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவர் (MBBS அல்லது MD): முதலில், பாதிக்கப்பட்டவருடைய குடும்ப உறுப்பினர் அவரை முழுமையாகப் பரிசோதிப்பார், அவருக்கு வந்திருக்கும் அறிகுறிகளுக்குக் காரணம் என்ன, வேறு ஏதாவது பிரச்னையால் இந்த அறிகுறிகள் வந்திருக்கலாமா எனக் கண்டறிவார். அதன்பிறகு, பாதிக்கப்பட்டவரைத் தொந்தரவுசெய்கிற/ உணர்வுப்பிரச்னைகள் எவையேனும் உள்ளனவா என்று அவர்கள் விசாரிக்கலாம், அதன் அடிப்படையில் அவருக்கு வந்திருக்கும் பிரச்னை மனநலம் தொடர்பானது என்று அடையாளம் காணலாம், அப்போது, அவர்கள் அவரை ஒரு மனநல நிபுணர் அல்லது உளவியலாளரிடம் செல்லுமாறு சிபாரிசு செய்யலாம்.
-
மனநல மருத்துவர் (MD): இவர் மனநலம் தொடர்பான பிரச்னைகளைக் குணப்படுத்துவதில் விசேஷப் பயிற்சி பெற்ற மருத்துவர் ஆவார். இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளைச் சிபாரிசு செய்வார்கள். பல நேரங்களில், பாதிக்கப்பட்டவருடைய குடும்ப மருத்துவரே அவருக்கு வந்திருக்கக்கூடிய மனநலப் பிரச்னையைக் கண்டறிந்து, அதற்கு மருந்துகளையும் சிபாரிசு செய்யக்கூடும். மற்ற மனநல நிபுணர்கள் பொதுவாக மருந்துகளைச் சிபாரிசு செய்யமாட்டார்கள். இதனை எல்லாரும் அறிந்திருக்கவேண்டும்.
-
உளவியலாளர் (MPhil, PhD): மனநலப் பிரச்னைகள் மற்றும் பிற நடவடிக்கை சார்ந்த பிரச்னைகளை உளவியல்ரீதியில் கையாள்வதற்காகத் தீவிரப் பயிற்சி பெற்றவர் இவர். ஒருவர் பிரச்னையைச் சமாளிக்கும் திறன்களைக் கற்றுக்கொள்வதற்கு, பல்வேறு விஷயங்களை அணுகும் முறையை மாற்றுவதற்கு இவர்களால் உதவ இயலும். ஓர் உளவியலாளர் பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் பயிற்சி பெற்றிருக்கலாம்: சைக்கோடைனமிக், அறிவாற்றல் நடவடிக்கைச் சிகிச்சை (CBT), அறிவார்ந்த உணர்வுநிலை நடவடிக்கைச் சிகிச்சை (REBT), பாதிக்கப்பட்டவரை மையமாகக் கொண்ட சிகிச்சை (ஒருவகையான பேச்சுச் சிகிச்சை), அல்லது ஒரு பன்முகச் சிகிச்சை (பாதிக்கப்பட்டவரின் தேவைகளுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட அணுகுமுறை).
-
உளவியல் சமூக ஊழியர் (சமூகப் பணியில் முதுகலை, MSW): இவர்கள் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள், அவர்களது உணர்வு மற்றும் சமூகத் தேவைகளை மதிப்பிட்டு, குணப்படுத்தும் திட்டங்களை உருவாக்குகிறார்கள். இவர்கள் சிகிச்சையைக் கண்காணிக்கலாம், நெருக்கடி நேரத் தலையீட்டில் உதவலாம், வள விவரங்களை வழங்கலாம், அல்லது, ஆலோசனை வழங்கலாம்.
சிகிச்சை எத்தனை நாள் நடக்கும்?
பொதுவாக சைக்கோதெரபி நிகழ்வானது 45 முதல் 60 நிமிடங்களுக்கு நடைபெறும். முதல் நிகழ்வின்போது, பாதிக்கப்பட்டவர்தான் அதிகநேரம் பேசுவார். பாதிக்கப்பட்டவர் நிபுணரிடம் தனக்கு ஏன் உதவி தேவை என்று சொல்லவேண்டும், இந்தச் சிகிச்சையிலிருந்து தான் எதிர்பார்ப்பது என்ன என்பதைச் சொல்லவேண்டும். இதைக் கேட்டபிறகு, தன்னால் அவருக்கு எப்படி உதவ இயலும் என்று நிபுணர் சொல்வார், இருவரும் இணைந்து பணியாற்றி இலக்குகளை அமைப்பார்கள், ஒரு சிகிச்சைத் திட்டத்தை உருவாக்குவார்கள். அதன்பிறகு, அவர்கள் ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும், இலக்கு அறிகுறிகள் அடிக்கடி வருகின்றனவா, அல்லது, அவை வருகிற நேர இடைவெளி அதிகரித்திருக்கிறதா, அவற்றின் தீவிரத்தன்மையும், அவை வருகிற கால அளவும் அதிகரித்திருக்கிறதா, குறைந்திருக்கிறதா என்பதை மதிப்பிடுவது முக்கியம். இதன்மூலம், அவரும் மருத்துவரும் முயன்றுகொண்டிருக்கிற தலையீடுகள் பாதிக்கப்பட்டவர் குணமாக உதவுகின்றனவா, இல்லையா என்பது தெரியவரும்.
மனநல நிபுணர்களை எங்கே சந்திப்பது?
- பாதிக்கப்பட்டவர் இதுபற்றித் தனது குடும்ப மருத்துவரைக் கேட்கலாம், அவர் ஒரு சிறந்த மனநல நிபுணரைச் சிபாரிசு செய்வார்.
- அவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள், சமூக உறுப்பினர்களைக் கேட்கலாம், சில நேரங்களில் ஒரு நண்பர் அல்லது உறவினரின் மருத்துவர் ஒரு சிறந்த மனநல நிபுணரைச் சிபாரிசு செய்யலாம்.
- தொலைபேசிப்புத்தகத்தில் சமூக சேவை, ஆலோசகர்கள், மருத்துவர்கள், உளவியலாளர்கள், மனநல மருத்துவர்கள் அல்லது சமூக சேவை அமைப்புகள் ஆகிய பிரிவுகளின்கீழ் உள்ள பெயர்களைக் கவனிக்கலாம்.
- ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நிபுணர்களின் பெயர்களைப் பட்டியலிடுகிற லாபநோக்கற்ற அரசு அல்லது மனநல அமைப்புகளின் இணையத்தளங்களைக் காணலாம்.
- தொழில்வல்லுநர் அமைப்புகள் மற்றும் சில நிறுவனங்கள் பணியிட ஊழியர் உதவித் திட்டங்களை (EAP) வழங்குகின்றன. பாதிக்கப்பட்டவர் தன்னுடைய பிரச்னை வெளியே தெரிந்துவிடுமோ என்று கவலைப்பட்டால், முதலில் இந்தத் திட்டத்தின் நம்பகத்தன்மையைப்பற்றிக் கண்டறியவேண்டும், இந்தச் சேவை சட்டப்பூர்வமானதா, இதில் பங்கேற்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுமா என்று பரிசோதிக்கவேண்டும்.
- உள்ளூர் மருத்துவமனைகள் அல்லது மருத்துவக்கல்லூரிகளில் உள்ள உளவியல் அல்லது மனவியல் துறைகளைக் காணலாம்.
- தங்களுடைய காப்பீட்டு வலைப்பின்னலைக் காணலாம். ஒருவர் மருத்துவ/ நலக்காப்பீடு எடுத்திருந்தால், அவருடைய காப்பீட்டு நிறுவனம் தனக்கென்று ஒரு வலைப்பின்னலை வைத்திருக்கும், அதில் நிபுணர்களின் பட்டியல் இருக்கலாம். தங்களுடைய வலைப்பின்னலில் இல்லாத நிபுணர்களைச் சந்தித்து ஆலோசனை பெறுவதுபற்றி அவர்கள் சில விதிமுறைகளையும் வைத்திருக்கலாம்.
நிபுணரிடமிருந்து ஒருவர் பெறவேண்டிய விவரங்கள் என்னென்ன?
ஒரு நிபுணரிடம் சிகிச்சைபெறச் செல்பவர், அவரைப்பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். இது, பாதிக்கப்பட்டவருடைய தனிப்பட்ட தேவைகள் மற்றும் கவலைகளைப்பொறுத்து அமையும்.
உதாரணமாக, சில கேள்விகள்:
- அந்த நிபுணர் எந்தவகைப் பயிற்சி மற்றும் அனுபவத்தைப் பெற்றுள்ளார்?
- அவரது சிகிச்சைத் தத்துவம், முறை என்ன? அது பாதிக்கப்பட்டவருடைய பாணி மற்றும் தேவைகளுக்குப் பொருந்துகிறதா?
- எத்தனை நாளைக்கு ஒருமுறை அவரைச் சந்திக்கவேண்டியிருக்கும்? ஒவ்வொரு சந்திப்பும் எவ்வளவு நேரம் நீடிக்கும்?
- அவருக்குப் பணம் செலுத்துவது எப்படி?
- நெருக்கடிநேரத்தில் அவரைத் தொடர்புகொள்வது எப்படி?
- அவர்கள் சில குறிப்பிட்ட குறைபாடுகளில் கவனம் செலுத்துகிறார்களா, அல்லது, சில குறிப்பிட்ட வயதினரைச் சிறப்பாகக் கவனிக்கிறார்களா? உதாரணமாக, சிலர் வளர் இளம் பருவத்தினருடன்மட்டும் பணிபுரியலாம். வேறு சிலர், மனச்சோர்வு, உண்ணுதல் குறைபாடுகள் அல்லது போதைப்பொருள் பயன்பாடு போன்ற பிரச்னைகளில் விசேஷக் கவனம் செலுத்தலாம்.
சரியான மனநல நிபுணரைக் கண்டறிவது கடினமான ஒன்றுதான், அதற்குப் பலரை முயன்று பார்க்கவேண்டியிருக்கலாம். ஆனால், அதன்மூலம் பாதிக்கப்பட்டவருக்கு நன்மைதான் விளையும். உதாரணமாக:
- அவர்களுடைய குறுகிய-கால உணர்வு மற்றும் உள-சமூகப் பிரச்னைகளான, குறிப்பிட்ட சூழல்கள் அல்லது நிகழ்வுகளால் ஏற்பட்ட அழுத்தம் அல்லது முரண்களைச் சரிசெய்யலாம்.
- நீண்டநாளாகத் தொடரும் தனிநபர் பிரச்னைகளைச் சரிசெய்யலாம்
- பாதிக்கக்கூடிய அல்லது கவலை தரக்கூடிய அறிகுறிகளைத் தணிக்கலாம்
- தனிப்பட்ட சவால்களை வெல்லலாம்
- பிறருடனான உறவுகளை மேம்படுத்தலாம்
- சுருக்கமாகச் சொன்னால், அவர்கள் தங்கள் வாழ்க்கையை இன்னும் நன்கு அனுபவிக்கலாம்
சான்றுகள்:
http://www.apa.org/helpcenter/choose-therapist.aspx
மனநலக் குறைபாடுகளைக் கண்டறிதல் மற்றும் புள்ளிவிவரக் கையேடு (DSM) அமெரிக்க மனநல மருத்துவர் அமைப்பு. (2000). மனநலக் குறைபாடுகளைக் கண்டறிதல் மற்றும் புள்ளிவிவரக் கையேடு (4ம் பதிப்பு உரை மாற்றம்.). வாஷிங்டன், DC: எழுதியவர்.