வணக்கம் அனுசியா நீங்கள் புலம்பெயர்ந்து சென்றாலும் நிலம் மறவாது, தமிழ்விருட்சம் என்னும் அமைப்பை உருவாக்கி தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றீர்கள் உங்களிடம் சில கேள்விகள்,
வணக்கம் தம்பி கடலூரான் சுமனுக்கும்,மற்றும் முகநூல் உறவுகளுக்கும்.தொடர்ந்து நன்றி தம்பி கடலூரான் சுமன்,நமது செயற்பாடுகளை அவதானித்து இப்படியொரு பதிவுப்பக்கத்திற்கு என்னையுமொரு பங்காளராய் இணைத்ததற்கு.
முதலில் என்னை சுருக்கமாக அறிமுகப்படுத்திவிட்டு நமது அமைப்பான தமிழ்விருட்சம் பற்றிய கேள்விகளுக்கான பதில்களைத்தொடர்கிறேன் .பத்திரிகையியல் படித்து ஆனால் தொழில்முறையில் இலத்திரனியல் ஊடகவியலாளரான நான் 2000 ஆண்டிலிருந்து இலங்கையில் தென்றல் Fm வானொலி அறிவிப்பாளராக,ரூபவாஹினியில் நிகழ்ச்சித்தொகுப்பாளராக ஊடகப்பயணத்தை ஆரம்பித்து,பின் திருமணமாகி பிரான்ஸ் நாட்டிற்கு வந்து இங்கும் ஆரம்பத்தில் இயங்கிய ஐரோப்பிய தமிழ் தேசியத்தொலைக்காட்சியான TTN இல் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித்தொகுப்பாளராகவும் கடமையாற்றினேன் .நடனத்துறைக்கல்வியையும் நிறைவு செய்திருந்ததால் ttn தொலைக்காட்சி தனது சேவைகளை இடைநிறுத்திய பின்னர் ஒரு நடன ஆசிரியையாக முதலில் பிரான்ஸ் தமிழ்ச்சோலையொன்றில் பணியாற்றி பின்2011 இல் தனியாக தமிழ்விருட்சம் என்னும் அமைப்பை ஆரம்பித்து இப்போது வரை பணியைத்தொடர்ந்து வருகிறேன்.நான்கு பிள்ளைகளைக்கொண்ட பெரிய குடும்பம் எனது என்பதால் குடும்பத்திற்கான எனது கடமைகளுக்கு அதிக நேரம் தேவைப்படுவதால் ஊடகத்துறையிலிருந்து தொழில் முறையில் மட்டும் ஒதுங்கி மனதுக்குப்பிடித்திருந்தால்,நேரமும் அமைந்தால் மேடைநிகழ்வுகளைத்தொகுத்தும்,மனதைப்பாதிக்கும் விடயங்கள் பற்றி என்முகநூல் பக்கத்தில் எழுதியும் வருகிறேன்.இனி தமிழ்விருட்சம் பற்றிய கேள்விகளுக்குப்பதிலளிக்கின்றேன்.
கடலூரான் சுமன்- தமிழ்விருட்சம் அமைப்பின் உருவாக்கம் பற்றிச்சொல்லுங்கள்?
அனுசியா – “தமிழ்விருட்சம்” 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும்.கலை கலாச்சாரம்,இந்த நாட்டில் வாழும் பல்லினமக்களுடனும் ஆரோக்கியமான தொடர்பாடல்,சமூகசேவைகள் இவையே நமது யாப்பு விதிகள்.புலம்பெயர் நாட்டில் தமிழ்மொழி, மற்றும் நமது கலை கலாச்சாரத்தை நம் அடுத்த சந்ததிக்குக்கொண்டு செல்லலும் அதற்காக வழங்கப்படும் வகுப்புகளின் மூலம் பெறும் பணத்தில் சமூக சேவைகளை மேற்கொள்ளுதலும்,இங்குள்ள மக்களோடு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து நமது தனித்துவங்களை அவர்களறியச்செய்தலும்,அவர்களிடமுள்ள நல்ல விடயங்களை நாம் அறிந்து பயன்படுத்துதலுமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.தமிழ்விருட்சத்தின் தலைவராக திரு ஆனந்தரூபன் பிரான்ஸ் நாட்டுச்செயற்பாடுகளைக்கவனித்து வருகின்றார்.அதன் அமைப்பாளராகவும் தமிழ், நடன மற்றும் ஆங்கில வகுப்பு ஆசிரியையாகவும்,தாயக நடவடிக்கைகளைக்கவனிப்பது நானாகவும் ,செயலாளராக திருமதி குமுதா வடிவாசனும் நமது அமைப்பின் செயற்பாடுகளைக்கவனித்து வருகின்றோம்.ஆரம்பத்தில் வருமானங்கள் இந்த நாட்டிலேயே படிக்கும் மாணவர்களுக்கே அவர்களின் கற்றல் மற்றும் கலைவிழாக்கள் என்று செலவழிக்கப்பட்டது.ஆனால் உள்மனதில் பணத்தின் சேவைக்கான இடம் இதுவல்ல என்ற நெருடல் இருந்தே வந்தது.ஏனென்றால் இங்குள்ளவர்கள் அனைவரும் தன்னிறைவுப்பொருளாதாரம் என்னும் நிறைவு நிலையிலிருப்பவர்களே.ஆனாலும் நமது மொழி,கலை இங்குள்ள பிள்ளைகளுக்குச்சென்றடையவும்,அதை ஊக்குவிக்கவும் வேண்டும் என்ற எண்ணம் மனதிலிருந்ததால் இரண்டு வருடங்கள் அவ்வாறே தொடர்ந்தோம்.அதேசமயம் தாயகத்தில் புனர்வாழ்வில் இருந்து மீண்டு மெல்ல மெல்ல நமது மக்கள் வெளியுலக வாழ்விற்குத்திரும்பி தமது வாழ்வியலுக்கான ஆதாரமின்றி மிகத்துன்பியல் வாழ்வைத்தொடர்கின்றவர்களாக இருந்தார்கள்.ஊடகங்கள் மூலம் அவர்களின் துன்பியல் வாழ்வு பற்றி நாளுக்குநாள் வரும் செய்திகள்,நெருடலுடன் இருந்த என் மனதுக்கு,நம் சேவை தேவைப்படும் இடம் எது என்ற தெளிவைத்தந்தது.அப்போதும் எங்கே எப்படி யார் மூலம் சரியாய் அடையாளம் கண்டு செய்வது என்று தெரியாமல் 2013 ஆம் ஆண்டு கடைசிப்பகுதியில் அங்கே சேவைகளை மேற்கொண்டுவந்த அன்னைதெரெஸா அமைப்பினர் மூலம் முதன்முதல் நமது அமைப்பின் நிதிமூலம் சில முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கினோம்.அப்படியே வெளிச்சம் போன்ற வேறு அமைப்புகள் மூலமும் தனிப்பட உதவிகோருபவர்களுக்குமான உதவிகளை செய்யத்தொடங்கி,அதனால் பெற்ற அனுபவங்கள் மூலம் நேரடியாக நமது அமைப்பின் மூலமே 2015 இலிருந்து நம் தாயகத்துக்கான சேவை நடவடிக்கைகளைச் செயற்படுத்தத்தொடங்கி 2017 தை மாதத்தில் இலிருந்து நிலையான திட்டமான “தமிழ்விருட்சம் கல்வித்திட்டத்தினை” ஆரம்பித்து இரண்டாவது ஆண்டாக வெற்றிகரமாகத்தொடர்ந்து வருகின்றோம்.புலத்திலும் நிலத்திலும் ஆக்கபூர்வமாய் சேவைகள் தொடர்வது மனதிற்கு நிறைவாயுள்ளது.
கடலூரான் சுமன் – தாயகத்தில் தமிழ்விருட்சம் என இரண்டு அமைப்புக்கள் உள்ளன ஒரே பெயரில் இரண்டு உள்ளது உங்கள் செயற்பாடுகளுக்குத்தடையாக இல்லையா?
அனுசியா- ஆம் தாயகத்தில் அப்படியொரு அமைப்பு இருப்பதையறிந்தேன்.ஆனால் நாம் 2011 ஆம் ஆண்டும்,அவர்கள்2013 ஆம் ஆண்டும் ஆரம்பித்துள்ளோம்.நமது அமைப்பு பிரான்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.அவர்களது இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இங்கே ஒரே பெயர் என்பது ஒரு எழுமாற்று நிகழ்வே.இருவர் ஒரே சிந்தனையைச்சிந்திப்பது போல இங்கே இருவர் ஒரே பெயரைச்சிந்தித்திருக்கின்றோம் அனால் இரண்டும் அடிப்படையில் தொடர்பற்ற இருவேறு அமைப்புகளே.எதற்கும் பின்பு சில குழப்பங்களைத்தவிர்க்க அந்த அமைப்பின் நிர்வாகத்தினரோடு தொடர்பு கொண்டு சில விடயங்களைத்தெளிவு படுத்திக்கொண்டேன்.இப்போது நமக்குள் எந்தக்குழப்பங்களுமில்லை.ஆனால் ஒரே பெயர் அதுவும் இரண்டுமே சேவை நிறுவனங்கள் என்பதால் மக்களிடையே இப்படி சில சந்தேகங்கள் உள்ளன.ஆனால் நமது பதிவுகளில் “பிரான்ஸ் தமிழ்விருட்சம் என்று தெளிவாகப்பதிவிடுகின்றோம்.அப்படியும் சந்தேகத்தோடு நேரடியாகத்தொடர்புகொள்பவர்களுக்குத்தெளிவு படுத்துகின்றோம்.கடலூரான் சுமன் கூட சேவை நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவர்.அவரிடம் சில செயற்பாடுகள் பற்றி பேச எடுத்த போது அவரும் இரண்டும் ஒரே அமைப்பு என்றே நினைத்திருந்தார்.பின்பு தெளிவுபடுத்தினேன்.ஒரே பெயரென்ன? வேறு பெயரென்ன?செய்யப்படுவது சேவை என்றால் யாவும் மகிழ்வே….
கடலூரான் சுமன் – தமிழ்விருட்சம் அமைப்பினூடாக நீங்கள் இதுவரை செய்த உதவித்திட்டங்ள் எவை?
அனுசியா- மேலே குறிப்பிட்டது போல,தாயகம் தான் நம் சேவைக்கான பொருத்தமான இடம் என்று தெளிவடைந்த பின்னர்,இங்கே கலைவிழாக்கள் செய்வதை முற்றாக நிறுத்தினோம்.ஒரு கலைவிழாவை முழுமையாகச்செய்து முடிக்க குறைந்தது 2000 யூரோக்கள் (கிட்டத்தட்ட மூன்றரை இலட்சம் ரூபாய்கள்) அவசியம்.அதை நிறுத்தியதால் வருடமுடிவில் கிட்டத்தட்ட 2800 யூரோக்கள் 2016 கடைசியில் மிகுதியானது.சிறிது சிறிதாகவே மற்றவர்கள் ஊடாக உதவிகளை ஆரம்பத்தில் செய்ததால்,மூன்று இலட்சங்களை வாழ்வாதார உதவியாக,வடக்குக்கிழக்கிலிருந்து முன்னாள்போராளிகளைத்தெரிவுசெய்து வழங்கினோம். ஆனால் தொடர்ந்தும் அங்கொன்று இங்கொன்றாக வழங்குவது நிறைவாகப்படவில்லை.அதனால் தொடர்ந்து வரும் வருட வருமானங்களை நிலையான திட்டங்கள் மூலம் இன்னும் ஆக்கபூர்வமாக செலவிட வேண்டும் என்று முடிவு செய்தோம்.அந்த நேரத்தில் தான் மிக வறுமைநிலையிலிருந்த குடும்பங்களிலிருந்து தமது பிள்ளைகளுக்கு கல்வி உதவி வழங்குமாறு கோரிக்கை வந்தது.அதற்கு, ஒரு தடவை கற்றல் உபகரணங்கள் வழங்குதல் நிலையான உதவியாய் இருக்காது என்று முடிவு செய்து,முடிந்தவரை கற்றலுக்கு மிகவறுமை தடையாக உள்ள மாணவரை தெரிவுசெய்து அவர்கள் கற்றல்காலம் முடியும் வரை உதவி செய்து ஒரு தொழில்துறையில் காலூன்றும் நிலையை ஏற்படுத்துவது என்ற முடிவுக்கு வந்தோம்.அதன்படி 2017 வருட வகுப்பு வருமானங்களை கணக்கிட்டு பத்து மாணவர்களை கிளிநொச்சி,முல்லைத்தீவு,மூதூர் பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்து இணைப்பாளர்கள் மூலம் அவர்கள் கற்றல் நிலை கண்காணிக்கப்பட்டு தொடர்ச்சியாய் ஒவ்வொரு மாதமும் பாடசாலை மாணவருக்கு மாதாந்தம் 2000 ரூபாய்களும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாய்களும் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம்.முதல் கொடுப்பனவுகளை வழங்கச்சென்றபோது உதவி பெறுபவர்களை விட இன்னும் மேலதிகமாய் வந்திருந்த ஏனைய பெற்றோரினதும்,பிள்ளைகளினதும் ஏக்கம் நிறைந்த பார்வை மனதிற்கு கவலையளித்தது.எப்படியும் பின்பாவது தமக்கும் வழங்குவார்கள் என்ற அவர்களின் எதிர்பார்ப்பு நிரம்பிய பார்வைகள்,உதவ மனமிருந்தும் நிதி போதாத பற்றாக்குறை தந்த இயலாமை,என்னை அடுத்தவரின் உதவியையும் நாட வைத்தது.அது தான் என் முதல் முகநூல்பதிவாக பிள்ளைகளைப்பொறுப்பெடுங்கள் என்றபதிவை இட வைத்தது.பதிவின் அவசியம் உணர்ந்தவர்கள் மெல்ல மெல்ல தமிழ்விருட்ச உதவியாளராகினார்கள்.ஐந்து பிள்ளைகள்,இரண்டு பிள்ளைகள்,ஒரு பிள்ளை என்று எனது தங்கைகுடும்பம், மற்றும் அன்புநிறைந்த முகநூல்உறவுகள்,நட்புகள் ஒவ்வொன்றாய் இணைந்து இன்று அழகிய தமிழ்விருட்சம் குடும்பமாய் கைகோர்த்துப்பயணிக்கின்றோம்.இப்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு,மூதூர்,அக்கரைப்பற்று,வடமராட்சிகிழக்கு,யாழ்ப்பாணம் பிரதேசங்களிலிருந்து 29 பாடசாலை மாணவர்களும்,2 பல்கலைக்கழக மாணவர்களும் தமிழ்விருட்சம் கல்வித்திட்டத்தின் கீழ் நிரந்தரப்பயனாளிகளாக உள்ளனர்.அதைவிடவும் பிரான்ஸ் தமிழ்விருட்சம் வருமானத்தில் ஆண்டிறுதியில் மிஞ்சும் நிதியிலும்,ஒருதடவை உதவி செய்ய விரும்பும் சில உதவியாளர்கள் வழங்கும் நிதியிலும் சுழற்சி முறையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்குதல்,வாழ்வாதார உதவிகள் செய்தல்,மற்றும் மிகப்பின்தங்கிய பிரதேசங்களில் தங்கள் கலைவெளிப்பாடுகளை வெளிப்படுத்த வாய்ப்பில்லாமல் ஆனால் மிகத்திறமைகள் உள்ள மாணவர்களுக்காய் சிறிய கலைவிழாக்களை நடாத்துதல் என்று நம் சேவைகள் தொடர்கின்றன. இனியும் தொடர்வோம்.இப்போது வருடத்தில்அண்ணளவாய் 10 இலட்சம் ரூபாய்களை சேவைக்காக நிரந்தரமாய் தாயகத்தில் வழங்கும் அமைப்பாக நமது அமைப்பு தொடர்கின்றது
கடலூரான் சுமன் – தமிழ்விருட்சம்அமைப்பானது ஈழத்தில் ஒரு கட்டமைப்பாக இயங்குகிறதா? முடிந்தால் அதன் செயற்பாட்டாளர்களை அறிமுகப்படுத்துங்கள்.
அனுசியா – தமிழ்விருட்சம் அமைப்பானது ஈழத்தில் ஒரு கட்டமைப்பாகவே இயங்குகிறது.ஆனால் பிரான்ஸில் பதியப்பட்ட அமைப்பு என்பதால் தேவையாளர்கள்,சேவையாளர்கள் எல்லோருமே பிரான்ஸ் தலைமையகத்துடனேயே தொடர்பாடலைப்பேணும்வகையிலும்,தாயக நிதிக்கொடுப்பனவுகளை மேற்கொள்ள அங்கே ஒரு தலைமைப்பிரதிநிதியையும்,ஒவ்வொரு பிரதேசத்திலும் உதவி நடவடிக்கைகளைக்கண்காணிக்க இணைப்பாளர்களைக்கொண்டும் நமது கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.அனைவரும் எந்த சுயநலமுமற்ற,கொடுப்னவுகள் எதுவும் வழங்கப்படாத,சேவை மனதோடு மட்டும் இயங்கும் சேவையாளர்களே.இந்நேரத்தில் நமது தமிழ்விருட்ச உதவியாளர்கள் அனைவருக்கும்,தாயக செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் சிரம்தாழ்த்தி நன்றிகளைத்தெரிவிக்கின்றோம்.இந்த முகநூல் பக்கத்தை பார்வையிடுவதன் மூலம் மேலும் நம்செயற்பாடுகள் பற்றிய தெளிவைப்பெற்றுக்கொள்ளலாம்.தமிழ்விருட்சம்தொடர்பான எந்த தொடர்பாடலுக்கும் இந்த முகநூல் உட்பெட்டியிலேயே தொடர்பை ஏற்படுத்தலாம்..
கடலூரான் சுமன் – புலம்பெயர் எம் உறவுகளின் ஈழம் தொடர்பான நிலைப்பாடு எவ்வாறுள்ளது?
அனுசியா – ஈழம் பற்றிய எண்ணங்கள் எல்லாம் மறந்து,இந்நாட்டு நீரோட்டத்தில் கலந்து,நாட்டு நினைப்பு வந்தால் மட்டும் சுற்றுலாப்பயணிகளாய் தாயகத்தில் ஒரு சுற்றுலா என்று ஒரு சாரார்;எப்போதும் தாயகப்பிரிவைத்தாங்காது எப்படியும் தம் அடையாளங்களை தம் சந்ததிக்குக்கடத்தியே தீர வேண்டும் என்ற உறுதியோடு தம் பிள்ளைகளுக்கு எத்தனை வேலைப்பளுவிலும் ஓடி ஓடி தமிழையும்,கலை கலாச்சாரங்களையும் ஊட்டுவதற்காக தாகத்தோடு முயன்றுவரும் ஒருசாரார்,இன்னும் தமது தீர்வெல்லாம் மேற்குலகின் கையிலேயே என்று அதை எட்டிப்பறிக்க என்ன செய்யலாம் என்ற யோசனையுடன் சிறு கூட்டம்;நன்றாய் தம் குடும்பத்தினர் இந்த நாட்டில் வாழும் தகுதி பெற்றுவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தியபின் கருத்தியல் அரசியலில் களமிறங்கி கருத்துக்களாய் கொட்டித்தீர்க்கும் கூட்டத்தினர்;போராளிகளுக்கு வேதவாக்காய் தலைவர்புகட்டிய “செய் அல்லது செத்துமடி” வாசகத்தை நினைக்க வேண்டிய இடத்தில் மறந்து,தப்பிப்பிழைத்து புலம்வந்து தாம் பதுகாப்பாய்க் காலூன்றிவிட்டு வீராவேசம்பூண்டு முகநூலில் போராட்ட அடையாளங்களோடு மற்றவனை ஆயுதம் ஏந்தச்சொல்லி உசுப்பேத்தும் தம்பிகள் கூட்டம்.ஐயோ அங்கே வறுமையிலிருப்பவன்,எனக்காய் போராடியவன்,என் சகோதரன் என்னும் துடிப்புடன் எப்படியும் முடிந்ததைச்செய்வோம் என்று தன்வருவாயில் இழுத்துப்பிடித்து மிகுதிப்படுத்திப் பகிர்ந்தளிக்கும் கருணைக்கூட்டம் என்று ஈழம் பற்றிய புலத்து நிலைப்பாடுகள் இப்படித்தான் இங்கே பரந்து விரிந்து ஆளுக்காள் விமர்சித்துத் தொடர்கின்றன.இத்தனை முரண்பாடுகளுடன் கருத்துக்களாலும்,செயல்களாலும் ஒன்றாய் இணைதல் என்பதும் ஈழம் தொடர்பான காத்திரமான முன்னெடுப்புக்கள் என்பதும் சுயபரிசீலனை செய்யும்வரை வெறுங்கனவே.இது என்பார்வையில்…….பார்க்கும் கோணங்கள் ஆளுக்காள் வேறுபடலாம்.