அஸீஸ் பே சம்பவம் வாசிக்கும் எந்த வாசகருக்குள்ளும் தவிர்க்க முடியாமல் எழும் முதல் ஆச்சர்யமான கேள்வி ஒரு ஆணின் அகநெருக்கடிகளை பரிதவிப்புகளை இத்தனை அணுக்கமாக நெருங்கி எழுதியிருப்பது ஒரு பெண் எழுத்தாளரா? என்பது தான். கதாபாத்திரங்கள் என்று பார்க்கும்போது அஸீஸ் பே, அவன் தந்தை, தாய், அவன் விரும்பும் பெண் (அவன் காதலி என்று கூற இயலவில்லை), அவன் மனைவி, அவன் நண்பன் ஆகியோர்களே பிரதானம் எனினும் காதல், பயணம், காத்திருப்பு, ஏமாற்றம், வெறுமை, விரக்தி, தன்னை உணர்தல், இசையால் மீழுதல் என கதையின் மையம் அஸீஸ் பேயின் உள நெருக்கடிகளையும் காதலால் அலைவுறும் சராசரி ஆணின் பலவீனமான இதயம் எதிர்கொள்ளும் நிறைவேறாத ஏக்கங்களின் பாதிப்புகளையும் பேசுகிறது நாவல். தஸ்தாயெவ்ஸ்கியைப் போல மனதின் அடியாழங்களின் இருளை தத்துவார்த்தமான விவாதங்களுக்கு உட்படுத்துவதில்லையெனினும், அய்பர் டுன்ஷ்ஷின் கதாநாயகன் அஸீஸ் பே கிட்டத்தட்ட தஸ்தயேவ்ஸ்கியின் கதாநாயகனின் மனவோட்டங்களும், பிதற்றல்களும் கொண்ட அதே பிம்பமாக தெரிகிறான். தஸ்தாயெவ்ஸ்கியின் கதாநாயகன் தன்னைப்பற்றியே முழு சிந்தனையில் மூழ்கியவனானாலும் அவனுக்கு புறவுலக இயக்கங்களின் மீதும், சுற்றியுள்ள மக்கள் படும் வேதனைகளிலும் மனம் கவனம் கொள்கிறது. அதிலிருந்து, அவர்களுக்காக தன் வேதனையை சகித்து ஏற்றுக்கொள்வதில் ஆறுதலடைகிறது. அஸீஸ் பே முழுக்க முழுக்க தன் சுயதிருப்திகளின் மீது மட்டுமே கவனம் கொண்டவனாக தன் காதலின் தீவிரத்தில் இந்த மொத்த உலக இயக்கங்களும் அவனுக்கு கண்ணுக்கெட்டாததாக, அலுப்படையச் செய்வதாக தான் அடையும் வெறுமையிலும் தன் சுயநலன் மீதான குற்றவுணர்வை உணராமல் ஒருவித மெத்தனத்துடனேயே தன்னை எப்போதும் நிறுவிக்கொள்ளும் அறியாமையின் இருள் பீடித்திருக்கும் ஒரு சராசரி இளைஞனைப் பிரதிபலிக்கிறது. கதாபாத்திரங்களின் குணநலன்கள் வேறுபட்டிருந்தாலும் கதாபாத்திரங்களின் உருவாக்கத்திலும் மனவோட்ட சித்தரிப்புகளிலும் அஸீஸ் பே தஸ்தயேவ்ஸ்கியின் கதாநாயகனோடு ஒத்துப்போவதைப் போலவே உணர முடிகிறது.
நம் அந்தரங்க விருப்பங்களின் கீழ்மைகளையும் மேன்மைகளையும் வெளியார் காதுகளுக்கு கேட்டிராத வகையில் மறைமுகமான மொழியில் நம் மனதின் காதுகளில் மட்டும் ஒலிக்கும் வண்ணம் நம் அகத்தோடு உறவாடும் படைப்புகளை அடையாளம் கண்டு கொண்டு அதன் பரிசுத்தத்தை உலகத்தின் முன்பாக கொண்டாடி தீர்ப்பதில் வாசகன் அடையும் பேரானந்தம் அவன் கொள்ளும் உணர்வு எல்லைகளின் உச்சம். அந்த தனித்துவமான மொழியின் தொனி தன் முதல் வார்த்தையிலேயே அவனுக்குள் ஏற்படுத்திய அதிர்வு, அவன் கால் தடுமாற்றத்தை அறிந்தும் கண்டுகொள்ளாத புனிதத்தன்மையுடன் உடன் நடந்து வந்த அதன் மேன்மை, குளிர்காய்ச்சலை உண்டாக்கி பின் அதற்கு இதமாகவே அவனுக்குள் படர்த்திய கதகதப்பு ஆகிய இவைகளே வாசிப்பின் அரவணைப்பை நோக்கி வாசகனை செலுத்துவதாக இருக்கிறது. நாம் எதிர்கொள்ளும் எதிர்பாராத தோல்விகளிலும் அவமானங்களிலும் அதற்கு காரணம் நம் சுயநலம் சார்ந்த விருப்பம் இருப்பதாக உணர்ந்து ஏற்றுக்கொள்வதில் தோல்வி கொடுக்கும் பேரமைதியானது வெற்றியின் பதட்டத்தை விட மேலான ஒன்றாக நமக்கு உணர ஆரம்பிக்கிறது. அஸீஸ் பே சம்பவம் வாசகனுக்கு உணர்த்தும் கருத்து இதுவாகத்தான் இருக்கிறது. பேசும் நிகழ்வைச் சார்ந்து அல்ல, பேசும் முறையைச் சார்ந்தே இலக்கியம் சமகாலத்தன்மை பெறுகிறது அதற்கு அஸீஸ் பே சம்பவம் ஒரு உதாரணம் என்று சுகுமாரன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அஸீஸ் பே சம்பவம் சுகுமாரனின் கூற்று எவ்வளவு நிஜம் என்பதை உணர்த்துகிறது.
-ரஞ்சித் குமார்.