நாகரிகம் எண்டு
எங்கடையள் சொன்னதில
நாசமாப் போனதெல்லாம்
நாம வாழ்ந்த வாழ்வுதான்
வளவெல்லாம் முளைச்சிருந்த
ஆமணக்கம் கிளை ஒடிச்சு
முட்டை விட்டு திரிஞ்சதொரு காலம்
தொட்டாற்சிணுங்கி முள் இழுக்க
காஞ்சோண்டி கை கடிக்க
பொன் வண்டு பிடிச்சதொரு காலம்
மழை பெஞ்ச தரையெல்லாம்
ரத்தம் ஊறுவதுபோல
கம்பளி பூச்சிகள் காலிடையில்
ஊர்ந்துவர
கைய்யுக்குள்ள பொத்திவச்சு
காவல் காத்தோம்
கூட்டாளியளின்ர சட்டைக்க
போட்டு விட்டு கூத்து பாத்தோம்
பாலப்பழச் சீசனுக்கு
பாழ்பட்ட சக்கரப்பாண்டி
தொல்லைவேற…
படுக்கைக்கு போவேக்க
பஞ்செடுத்து காதுக்க வைக்காட்டி
குறுக்கால போன கிழவி கத்தும்
சோமற்ற பெடியொண்டு
சக்கரப்பாண்டி போய்த்தான்
செத்துப்போனதெண்டு….
மாரி மழை பெஞ்சதெண்டால்
காணும்
கோதாரி விழுந்த தவளைகள்
குட்டை குளமெல்லாம்
கத்தும்
ஆமிக்காரன் ரோந்து போல
கறுத்த கலர் அட்டையெல்லாம்
வீடுவாசல் மிச்சமின்றி
சுத்தும்
சிறட்டை பந்து விளையாட்டும்
சில்வண்டின் இரைச்சலும்
மாட்டுவண்டி சத்தமும்
மண்புளுதித் தெருக்களும்
மறக்க முடியுமா
எத்தனை நினைவுகள்
அத்தனையும் இனிமைகள்
இன்று ஆமணக்கும் இல்லை
அப்பத்தாவும் இல்லை
பொன் வண்டுமில்லை..
எங்கள் பூர்வீக வாழ்வுமில்லை…
அனாதியன்