வட தமிழீழம் , முல்லைத்தீவில் இரவோடு இரவாக காவற்றுறையினரால் கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. சட்டவிரோத கடற்றொழில் களுக்கு எதிராக ஆர்ப்பாடடத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்படுகின்றனர்.
கடந்த 02.08.2018(வியாழன்) அன்று முல்லைத்தீவு மீனவர்கள் மாவட்டத்தில் நிலவும் சட்ட விரோத கடற்றொழிலுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இந் நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணைக்காக அழைக்கப்பட்டு வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா – ரவிகரன் அவர்கள் 2018.08.10[வெள்ளி] அன்று மாலை 02:00மணியளவில் கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் மாலை 06:00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் இல்லத்தில் முன்னிலைப்படுத்திபிணையில் விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவற்றினைத் தொடர்ந்து இரவோடு இரவாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களாக கருதப்படுபவர்களை முல்லைத்தீவு காவற்றுறையினர் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர்.
இதில் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களான வின்சன்டி போல் அருள்நாதன், ஜெராட் ராயன், திலீபன் ஆகியோர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.