நேற்று முன்தினம்(09.08.2018) மரணித்த இசையமைப்பாளர் யாழ் ரமணன் அவர்கள் இசையமைத்த ஈழ விடுதலைப் பாடல்கள்.
முல்லைமண் எங்களின் வசமாச்சு:ஈழம்
முற்றிலும் வெல்வது திடமாச்சு
தொல்லைகள் நீங்கிடும் மகிழ்வாச்சு:உயர்
தலைவனின் வழியிலே நிமிர்ந்தாச்சு
இப்பாடல் ஈழ விடுதலைப் போராட்டகால பாடல்களில் பிரபலமான ஒன்று. ஜெனரல் அனுருத்த ரத்வத்த தலைமையிலான படைகள் யாழ் குடாநாட்டினை கைப்பற்றிய நிலையில் வன்னியில் தலைமை நிர்வாகத்தை புலிகள் ஏற்படுத்திய பின்னர் முல்லைத்தீவுப் படைமுகாம் ‘ஓயாத அலைகள்’ எனும் பெயரிலான நடவடிக்கை மூலம் வெற்றிகொள்ளப்பட்டபோதிலே இப்பாடல் வெளியானது. பாடலை வேலணையூர் சுரேஷ் எழுத யாழ் ரமணன் அவர்கள் இசையூட்டி இருந்தார். இதனோடு சேர்ந்து வெளியான மேலதிக முல்லைப் பாடல்களுக்கு தமிழீழ இசைக்குழுவினர் இசை வழங்கினர்.
பெண் மாவீரர் மாங்கனி தான் வாழும் காலத்தில் பாடிய இப்பாடல் ஈழப்படல்களில் தனித்துவமானது. பெண் போராளி ஒருத்தி அம்மாவுக்குச் சொல்லும் சேதியாக இப்பாடல் அமைகின்றது. இப்பாடலுக்கும் யாழ் ரமணன் அவர்களே இசை ஊட்டினார். பல்லவி இதோ.
நீரடித்து நீரிங்கு
விலகாது அம்மா
நெஞ்சிலுந்தன் பாசம் என்றும்
அகலாது அம்மா
இப்பாடலின் முதற்சரணம் இவ்விதம். மாங்கனி தொடர்ந்து பாடுகின்றார்.
எட்டி நின்று பார்ப்பதிலே
பெருமை இல்லை அம்மா
வெற்றி எங்கள் வீடுதேடி
வருவதில்லை அம்மா
சுற்றி நிற்கும் பகைவர் வாழ
விடுவதில்லை அம்மா
நான் செத்துவிழும்போதும் பாசம்
விழுவதில்லை அம்மா
‘திசைகள் வெளிக்கும்’ திரைப்படத்தில் உலவும் கீழ்வரும் இப்பாடலும் பெண்களின் மனக்குமுறலுக்கானது. திசைகள் வெளிக்கும் திரைப்படத்தினை ந.கேசவராஜன் இயக்கி இருந்தார். இப்பாடலினை குமாரசுவாமி பாடியிருந்தார். பாடலின் பல்லவி இது…
கன்ணகி வீட்டு யன்னலைக்கேட்டு
உணமையைத் தேடுங்கள்
கம்பனின் சீதை ஏறிய தீயில்
பெண்மையைப் பாருங்கள்
பாரதியே பாட்டெடுத்து மூட்டிவைச்ச நெருப்பு
பாதிகூட எரியலையே யாரிதற்குப் பொறுப்பு
அப்படத்தின் நான்கு பாடல்களும் யாழ் ரமணன் அவர்களின் இசைதான். ஈழப்பெண்களின் பாதுகாப்பு மாற்றம் சம்மந்தப்பட்ட திரைப்படம் அது. விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் திரைப்படத்தினை தயாரித்திருந்தது. பாடல் வரிகள் புதுவை இரத்தினதுரை. இப்பாடலும் அப்படத்தில் இடம்பெற்ற பாடலே. இது ஒரு காதற்தோல்விப் பாடல்.
இருள் சூழ்ந்த என்வாழ்வில்
ஒளிவீசுமா?
என் இதயத்தில் விடிவெள்ளி
இனி பூக்குமா?
கருக்கொண்ட துயர்மேகம் கலைந்தோடுமா?
களிப்போடு உன்வாழ்வு இனிமீளுமா?
இப்படி ஒரு சரணம்
நான்மட்டும் கன்ணீரில்
தினம் தோய்வதா?
எனை நட்டாற்றில் விட்டவன்
அதில் மீள்வதா?
தேனாக அவன்வாழ்வு இனிதாவதா?
இந்த தேசத்தில் துயரத்தால்
நான் சாவதா?
உதயம் இசைநாடாவில் இடம்பெற்ற கீழ்வரும் இப்பாடல் மாவீரர்களுக்கான பாடல்.
மாவீரர் யாரோ என்றால்
மரணத்தை வென்றுள்ளோர்கள்!
தாய் மானம் காக்க என்றே
தம்மையே தந்துள்ளோர்கள்!
ஊர் வாழ வேண்டும் என்றே
உன்னத ஆர்வம் கொண்டோர்!
ஏராளமான துயர்
எண்ணங்கள் தாங்கி நின்றோர்!
ஜெயா சுகுமார் பாடிய கீழ்வரும் பாடலும் யாழ் ரமணன் அவர்களின் இசையில் வெளியான பேர்பெற்ற பாடல்தான்.
நிலவில் புதிய கவிதை எழுத
நிமிர்ந்த புயல்களே
உலகில் அதிக விரைவில் எழுந்த
உயர்ந்த பயிர்களே
இனியும் உமக்குச் சிறையா?
இனி இருளில் இருத்தல் முறையா?
மேற்குறிப்பிட்ட பாடல் பெண்களின் எழுச்சியை மேம்படுத்தும் ஈழப்பாடலாம். யாழ்ப்பாண இடப்பெயர்விற்குப் பின்னர் அதிக நெருக்கடியான காலகட்டத்தில் ஈழப்போராட்டத்திற்கு யாழ் ரமணன் அவர்கள் வழங்கிய இசைப்பங்களிப்பு மிக முக்கியமானதும் போற்றப்பட வேண்டியதுமாகும்.
கீழவரும் இப்பாடல் ஈழப்போர்க் காலத்தில் மேடைகளில் தொடர்ச்சியாக பாடப்பட்ட பாடல். பாடலை திருமலைச் சந்திரன் குழுவினரோடு பாடியிருந்தார்.
கிழக்கு வானம் சிவந்தது
சிறைகள் உடைந்து விழுந்தது
குனிந்த தலைகள் நிமிர்ந்தது
குயில்கள் பாடிப் பறந்தது
புதிய திசையில் பயணம் தொடரும்
புலிகள் சேனை சரிதம் எழுதும்
எழுக எழுக தளிர்களே
எமது தேசம் புலரவே
‘பிஞ்சுமனம்’ திரைப்படம் ஈழத்தில் போர்க்காலத் திரைப்படங்களில் அதிகம் பேசப்பட்ட ஒன்று. ந.கேசவராஜன் இத்திரைப்படத்தினை இயக்கி இருந்தார். சொந்தங்கள் யாருமே இல்லா நிலையில் ஓர் உறவு பாடுவதான அப்பாடல் மனங்களில் இலகுவாகப் பதிந்துவிடும். இசை யாழ் ரமணன் அளிக்க, புதுவை இரத்தினதுரை பாடலை எழுதி இருந்தார். குமாரசுவாமி பாடிய பாடல் இது.
பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது
ஆலமரம் வேர்களின்றி அலைகின்றது
அந்திமத்தில் யாருமின்றி அழுகின்றது
ஆற்றினிலே நீருமில்லை
ஆதரிப்பார் யாருமில்லை
நேர்றிருந்த சொந்தமெல்லாம்
நேரினிலே இன்று இல்லை
களத்தில் ஒரு போராளி மடிந்துவிட இன்னுமொருவர் அதன் வழி தொடர தயாராக இருப்பதான கருத்தில் வெளியான இப்பாடலும் அதிகமாக ஒலித்த பாடல்களில் ஒன்று. பல்லவி இதுதான்.
ஓ மரணித்த வீரனே
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதணிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா
ஈழப் போரியல் வரலாற்றில் நீண்டகாலம் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையாகிய ஜெயசிக்குறு நடவடிக்கை காலத்தில் மரணித்த கரும்புலிகளுக்கான இப்பாடலையும் யாழ் ரமணன் இசையமத்திருந்தார். கரும்புலிகளான மேஜர் நிதன், மேஜர் யாழினி, மேஜர் சாதுரியன் ஆகியோருக்கான பாடலிது.
திருவுடலில் வெடிசுமந்து
நிதன் எழுந்தவன்
எங்கள் சாதுரியன் யாழினியும்
உயிர் கொடுத்தனர்
பெருவிழியில் கனல் சுமந்து
இவர் நடந்தனர்
தாண்டிகுளமிருந்த பகை முடித்து
இவர் விழுந்தனர்
இப்பாடலை குமாரதாஸ் பாடி இருந்தார்.
செங்கதிர் அவர்களும் யாழ் ரமணன் அவர்களின் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார். பாடும் அலையே ஆடும் அலையே பாடல் இதில் அதிகம் பேசப்பட்டது.
கீழ்வரும் இப்பாடல் ஈழப்போரியற் காலத்தில் எழுச்சிப் பாடலாக பரவலாக ஒலித்த ஒன்று. பல்லவி இதோ…
ஓ வரும் வரும்
மரணம் வரும் வரும்
மானம் இங்கே வாழும் வாழும்
பெரும்புயல் வரும் பூகம்பம் வரும்
வானம் சிவந்து போகும்
ஒரு சரணம் இப்படி வருகின்றது
பிரபாகரன் விழிகள் காட்டிடும் வழிகள்
யாவிலும் புலிகள் பாயும்
கரிகாலன் ஆணையெனில்
காற்றிலேறிப்பகை வீழ்த்தியே
புலிகள் பாயும்
புறங்காட்டியே பகையும் சாகும்
யாழ் ரமணன்தான் இப்பாடலுக்கு இசை அமைத்தார் எனச் சொல்லத்தக்கதாக தனக்கான தனித்துவ இசைககோர்வையை வைத்திருப்பவர் யாழ் ரமணன். பள்ளி மாணவர்கள் தமது மாணவர் மன்ற நிகழ்ச்சிகளில் யாழ் ரமணன் அவர்கள் இசையமைத்த பாடல்களைப் பாடுவதை நாம் கண்டிருக்கின்றோம்.
மகிழ்ச்சியான தருணங்களில் பாடத்தக்க இப்பாடல் போர்க்காலங்களில் நடனத்திற்காக அதிகம் உபயோகிக்கப்பட்டது. இதோ அப்பாடல்.
ஆடிப் பாடுவோம் கூடிப் பாடுவோம்
கவலைகள் பறந்தாச்சு
புது கவிதையும் பொறந்தாச்சு
பெண்ணை மிதித்தவர்
கண்ணைத் திறந்திடும்
காலமும் உருவாச்சு
புது கோலமும் உருவாச்சு
யாழ் ரமணன் அவர்களின் இசைக்கு இன்னுமொரு நற்சான்று இந்தப்பாடல். இடப்பெயர்வினால் சிதைந்த குடும்ப வாழ்க்கையை காட்டும் இப்பாடல் போர்க்காலத்தில் அதிகமாக பேசப்பட்ட பாடல். இதோ பல்லவி
குருவிக் கூட்டம் போல
எங்கள் வாழ்விருந்தது
கொடும் பறவைக் கூட்டம் வந்ததனால்
அது அழிந்தது
படையெடுத்து வந்த பகை
வீடெரித்தது
கண்ணயரும் நிலை அகற்றும்
காலமானது
இப்பல்லவிக்கு முன்னரான தொகையறா ‘அன்னை தந்தை தங்கையோடு மகிழ்ந்திருந்தது அன்று… ‘ எனத் தொடரும்.
கிற்றார் வாத்தியத்தில் அதிகப் புகழ் பெற்ற யாழ் ரமணன் அவர்களுக்கு உலகப்புகழ் பெற்ற அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள்தான் ‘யாழ் ரமணன்’ என பெயர் சூட்டினார். இந்தியப் படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் தனது இசையினால் மக்கள் மத்தியில் எழுச்சியை தக்கவைத்த இவர், பாலஸ்தீனக் கவிதைகளையும் இசைக்கு கொணர்ந்தவர். போர் முடிந்த 2009இற்குப் பின்னர் நிறையவே பக்திப் பாடல்களுக்கும் இசை வழங்கியவர்.
யாழ் ரமணன் அவர்கள் மறைந்தாலும் அவரது பாடல்கள் புதிய உதயம் காணுகின்றன. யாழ் ரமணன் எனும் இசையாளனை இந்நாட்களில் அநேகர் தேடுகின்றனர். ஆவணம் எனும் விடயத்தில் நாம் பின் நிற்கின்றோம். போர்க்காலப் படைப்பு சரியாக ஆவணப்படுத்த வேண்டும். யாழ் ரமணன் அவர்கள் போன்ற தகுதிமிக்கோர் பற்றி எதிர்காலச் சந்ததியும், இக்காலச் சந்ததியும் நிறையவே அறிய வேண்டும். யாழ் ரமணன் அவர்கள் இசையமைத்த இன்னும் அநேக பேர்பெற்ற பாடல்கள் உள.
யாழ் ரமணன் அவர்கள் இசையமைத்த இப்பாடலும் பிடித்த ஒன்று. போர்க்காலத்தில் எழுச்சிப் பாடலாக உலாவந்த இப்பாடலை ஜெயா சுகுமார் பாடியிருந்தார்.
ஓடு ஓடு ஓடு
நீயும் ஓய்ந்துவிட்டால்ல் வரும் கேடு
காடு மேடுகள் முள்ளும் தாண்டி
நீயும் ஓடு
ஈழ நாடு மீளற்காக
வேகம் கொண்டு ஓடு.
வரைவு:யோ.புரட்சி