விடுதலைக்குப் போராடும் ஈழத்து தமிழ் மக்கள் பாகம் – 8
மதம் என்ற ஒன்று உலகில் தோற்றம் பெற்றமையால் மக்களிடையே கருணை, சாந்தி, சமாதானம், நல்வாழ்வு என்பன உயர்வடைந்தது/உயர்வடையும், சிறப்படைந்தது/சிறப்படையும் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அது உண்மையா அல்லது சரியா இல்லை எங்களால் ஒத்துக்கொள்ளப்பட முடியுமா என்பதை நாமும் தேட வேண்டிய தேவை உள்ளது. இது மத எதிர்ப்பு அல்ல. மதவாதிகளின் கருத்து நிலையை உணர்தல் மட்டும்தான். மதங்களின் தாக்கம் என்பது மனிதர்கள் மீது செலுத்தும் செல்வாக்கு எத்தகையது என்பது நான் கூறி உணரவேண்டிய நிலையில் மக்கள் இல்லை. இந்த உலகில் புதிய கண்டு பிடிப்புகள் அல்லது கொள்கை மாற்றங்களை முற்றிலும் விரும்பாதவர்கள் என்றால் அது மதவாதிகளாகத்தான் இருக்கும். காரணம் உருவாகும் புதிய கொள்கைகள், மதங்களின்மீது மக்கள் கொண்டுள்ள பற்றினை சிதைக்கும், நம்பிக்கையை உடைக்கும், மனங்களை மாற்றும் இதனால் மதம் என்ற அடிப்படையையே ஆட்டம் காணவைத்துவிடும். இவ்வாறான ஒரு பயம் மதங்களை கையாள்வோர் மனதில் எப்போதுமே இருந்துள்ளது. கடந்தகால வரலாறுகளை எடுத்துப்பார்க்கும்போது இவை எமக்கு தெளிவாகவே தென்படும். நாம் வாழும் பூமி தொடர்பாக புதிய கருத்துக்கள் வெளியிட்ட பலர் சிரச்சேதம் செய்யப்பட்ட வரலாறுகளை நாம் படிக்கின்றோம். இதற்கு காரணமாக இருந்தவர்கள் அன்று ஆட்சி செய்த மன்னர்கள் என்பதிலும் அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மதவாதிகளே என்பதை தெரிந்துகொள்ளலாம். அன்றைய அரசுகளையும் சரி இன்றைய அரசுகளையும் சரி மதம் சூழ்ந்து கொண்டால் அந்த ஆட்சி படும் துன்பங்களுக்கு இலங்கை ஒரு உதாரணம் இது போன்ற இன்னும் பலநாடுகள் இன்றும் உண்டு. இதேவேளை மக்களைப் பொறுத்தவரை மதங்களின் மீதான நம்பிக்கைக்கும் இறையருள் பெறுவதற்கும் கடவுளுக்கு சமமாக மதத்தலைவர்களை நம்புகின்றனர். உண்மையில் மததலைவர்கள் எங்களைப்போல இறைவனால் படைக்கப்பட்டவர்கள், அப்படிஎன்றால் அவர்கள்மீது இறைவன் காட்டும் விசுவாசத்தை நம்மீது காட்டுவான் தானே என்று நினைப்பதில்லை. இந்த அறியாமை நிலைப்பாட்டினை பயன்படுத்தியே மதவாதிகள் தங்களை வெற்றிகரமாக நிலைப்படுத்திக் கொள்கின்றனர். அதனால்தான் பலமான கொள்கைகளோ மானிடர் மீது ஆழமான நேசமோ அற்ற அரசியல் தலைவர்களின் அரசியல் நடத்த அமைந்த கருவிகள் என்று மதங்களை அல்லது மதத்தலைவர்களை குறிப்பிடலாம்.. அவர்கள் எவ்வாறு மக்களின் அறியாமைமீது ஏறிநின்று தங்கள் பயணத்தை தொடர்கிறார்களோ அதே மதத்தலைவர்களை பயன்படுத்தி தங்கள் திட்டங்களை அவர்கள் ஊடாக உட்செலுத்தி காரியங்களை சாதிப்பது சுலபம் என்று தீர்மானிக்கிறார்கள் அரசியல்வாதிகள். இந்த அடிப்படையில் இலங்கை நாட்டில் பௌத்தம் முதலிடம் பெறுகின்றது.
இதை நான் தெளிவாகவும் உறுதியாகவும் சொல்லக்காரணம் இலங்கையின் விடுதலைக்கு முன்பும் பின்பும் உருவாகிய சுதேச அரசியல் தலைவர்கள் அனேகமாக கிறித்தவர்கள். அவர்களின் பெயர்களே அதற்கு குறிகாட்டிகள். ஆனால் அவர்கள் தங்களை பௌத்தர்கள் போல் காட்டி வெற்றிபெற முனைந்துள்ளனர் அல்லது வெற்றி பெற்றுள்ளனர். ஆனாலும் டி. எஸ் சேனநாயக்க, சேர் யோன் கொத்தலாவல போன்ற பல அரசியல் தலைவர்கள் பௌத்த மதம் அரசியலுக்குள் புகுவதை விரும்பவில்லை அல்லது எதிர்த்துள்ளார்கள். அந்த எதிர்ப்புகளால் பௌத்த துறவிகள் சீற்றமும் அடைந்துள்ளனர் என்பது வரலாறு காட்டும் உண்மை. பௌத்த துறவிகளின் இந்த வகையான எதிர்ப்பை அவதானித்த பண்டாரநாயக்க அதனை தனக்கு சாதகமாக்கி பௌத்தத்தினை முதன்மை படுத்துவதாகவும், தனிச்சிங்களசட்டம் கொண்டுவருவதாகவும் பௌத்த துறவிகளுக்கு உறுதியளித்து அவர்களின் ஆதரவுடன் பிரதமர் பதவியை கைப்பற்றினார் என்று கூறமுடியும். மதம் தொடர்பாக இந்தளவுக்கு சொல்லக்காரணம் இன்றைய இலங்கையின் அரசியலமைப்பிற்கு அடிப்படையாக அமைந்து சுதேச மக்களையும் அரசியலுக்குள் இழுத்துச் சென்றது டொனமூர் (1931) அரசியலமைப்பு என்று சொல்லமுடியும். அதன் பின் அது சோல்பரி (1947) அரசியல் அமைப்பாக மாற்றங்களை உள்வாங்கியது. இதன்பின்பே இலங்கை விடுதலை (1948) பெற்றது. இலங்கை விடுதலைபெற்றபோது அரசியல் அதிகார அடிப்படையில் இனம் என்ற வகையில் சிங்களம் பெற்றுக்கொண்ட வாய்ப்பு அல்லது பலத்தை ஏனைய எந்த இனமும் பெற்றுக்கொள்ளவில்லை என்று திடமாக சொல்லமுடியும். குறிப்பாக தமிழ் இனம் பெறவில்லை. உண்மையில் இதுவே சிங்கள பௌத்த பேரினவாதம் திரண்டெழுந்து இனமுரண்பாட்டை உருவாக்க வாய்ப்பை வழங்கியது என்று உறுதியாக கூறலாம். என்னதான் கல்வியால் முன்னேறியவர்கள் என்று தங்களை தாங்களே பெருமைப்படுத்திக்கொள்ளும் தமிழர்கள், ஆங்கிலேயரின் சார் பட்டத்திற்கும், அவர்களால் வழங்கப்பட்ட பதவிகளுக்கும் ஆசைப்பட்டார்களே தவிர அதிகாரத்தை பற்றிக்கொள்ளவோ தமிழர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்கவோ முனையவில்லை என்றே சொல்லவேண்டும். ஆனால் இந்த அறியாமை நிலை அன்றுடன் முடிந்து இன்று நாம் விழிப்படைந்திருக்கின்றோம், எங்கள் எதிர்கால சந்ததியின் இருப்பை பற்றி சிந்திக்கின்றோம் என்று சொல்ல முடியாது. எங்கள் அறியாமை தொடர்கின்றது என்றே சொல்லமுடியும்.
மதம் தொடர்பாக நான் நீட்டி முழக்கியமைக்கு இப்போது காரணம் சொல்கின்றேன். சோல்பரி அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருந்த தமிழர்களுக்கான அற்ப சொற்ப சனநாயக உரிமைகளும், பாதுகாப்பு அம்சங்களும் (1972) அரசியலமைப்பு மூலம் நீக்கப்பட்டது அல்லது பறிக்கப்பட்டது. அதேவேளை பௌத்த மதம் அரச மதமாக அறிவிக்கப்பட்டது. பௌத்த மதம் அரச மதம் என்பது மட்டுமல்ல, அம்மதத்தினை பாதுகாப்பதும், வளர்ப்பதும் அரசின் பொறுப்பு என்றும் அரசசாசனத்தில் கூறப்பட்டுள்ளது. இது பௌத்தமதம் உயரவும், அதேவேளை சைவமதம் கட்டுப்படுத்தப்படவும் ஆக்கப்பட்ட ஒன்று என்று உறுதியாக நம்பலாம். காரணம் என்னதான் எதிர்ப்பாக பேசினாலும் கிறித்தவ மதத்தை அல்லது முசுலிம் மதத்தை வலுவாக எதிர்க்கும் ஆற்றல் அல்லது துணிவு இலங்கைக்கு அல்லது இலங்கை அரசியல் தலைவர்களுக்கு கிடையாது. மேலும் 1972 இல் வகுக்கப்பட்ட இந்த அரசியல் வரிகள் இன்று என்ன செய்கின்றன என்பதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம் அனுபவிக்கின்றோம்.
இலங்கையை பொறுத்தவரை சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்று ஒரு சட்டம் வருவதால் சிங்களத்திற்கு எந்த நன்மையும் விளையப்போவதில்லை. காரணம் உள்ளது இருமொழிகள், அதிலும் பெரும்பான்மையினர் சிங்களவர்கள். எனவே எந்த மொழியும் எக்காலத்திலும் அவர்கள் நிலையை அசைக்கமுடியாது. எத்தனை மதம் வந்தாலும் பௌத்தம்தான் பெரும்பான்மை. பின் ஏன் அரசியல் அமைப்பு சட்ட மாற்றங்கள்? புதியஅரசியல் சட்டங்கள், காரணம் தமிழர் எதிர்ப்பு என்ற ஒன்றைத்தவிர வலுவான எந்த ஒரு அரசியல் சிந்தனையும் சிங்கள தலைவர்களிடம் இருக்கவில்லை. எனவே சிங்களமக்களை இன அடிப்படையில் சிந்திக்க வைத்து, தமிழின எதிர்ப்பை ஊட்டி உருவாக்கினர். சிங்கள மக்களால் எழுப்பப்படும் எந்த ஒரு கேள்விக்கும் விடை தமிழர்களால் தான் எமக்கு இந்த நிலை என்பதே. அது கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்நிலம் என எல்லாவற்றிற்கும் ஒரேவிடைதான். சிங்கள அரசியல் பழிவாங்கல்கள், தனிப்பட்ட பகைகள் என்பவற்றிற்காக கொல்லப்பட்ட சிங்கள தலைவர்களையும் தமிழர்கள் கொன்றார்கள் என்று காட்டி அதன்மூலமும் சிங்களவரை தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் செய்யத்தூண்டினர்.
– பரமபுத்திரன்.