முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி மலைப் பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்துள்ளது.
நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில், பழைமை வாய்ந்த சிவன் ஆலயம் ஒன்று உள்ளது. அங்கு சென்று தமிழ் மக்கள் வழிபாடுகளை நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், அப்பகுதி மக்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களை, பொலிஸ் ஊடாக அழைத்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், வெடுக்குநாறி மலைப்பகுதிக்கு யாரும் செல்லக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம் உள்ளிட்ட அரசின் நிர்வாக கட்டமைப்புகள் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றன.
தொல்பொருள் சின்னமான யாழ்ப்பாணம் கோட்டைக்குள், சிறிலங்கா இராணுவத்தினர் முகாமிட்டுத் தங்குவதற்கு அனுமதி அளித்துள்ள தொல்பொருள் திணைக்களம், தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டு இடமான வெடுக்குநாறி மலைக்குச் செல்வத்தற்கு தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.