நாங்கள் மத்திய அரசிடம் பல விதமான கோரிக்கைகளை முன்வைத்து எழுத்து மூலமாக தெரிவித்து நேரடியாக பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டோம். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.என வடமாகாண மகளிர் விவகாரம் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். 96 வது சர்வதேச கூட்டுறவு தினம் மன்னார் நகரசபை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (11) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
இந்த அரசாங்கம் மக்களிடம் இருந்து எம்மை பிரித்து தனிமைப்படுத்தும் செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். காரணம் போரினால் பாதிக்கப்பட்ட பெண்ணாக எனக்கு நிறைய ஆதங்கங்கள் உள்ளது.
எமது பெண்கள் மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்ற குழந்தைகள் முன்னாள் போராளிகள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என்று ஒட்டு மொத்த வடக்கு மாகாணமும் பல்வேறு தேவைகளை நாடி நிற்கின்றது. நாங்கள் மத்திய அரசிடம் பல விதமான கோரிக்கைகளை முன்வைத்து எழுத்து மூலமாக தெரிவித்து நேரடியாக பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டோம். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.
மாறாக அரசாங்கம் தான் நேரடியாக அரசாங்க அதிபர்கள் ஊடாக மத்தியில் இருந்து தாங்கள் கடமைகளை செய்வதாக சொல்லி செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இன்னும் ஒரு வேடிக்கையான விடயம் மாகாணத்திற்குரிய அதிகாரம் பெற்ற கூட்டுறவையும் அவர்கள் விடவில்லை. இந்த கூட்டுறவிற்குள் நேரடியாக தலையிடுகிறது என்றால் அவர்களின் உள் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்களிடம் இருந்து எம்மைப் பிரித்து அந்நியப்படுத்துகின்ற செயல் ஒன்றை அவர்கள் செய்கிறார்கள்.
மத்தியில் உள்ள கூட்டுறவு அமைச்சர் தலையிடுவது மட்டுமல்ல நிதியமைச்சர் கூட இந்த கூட்டுறவு விடயதானங்களுக்குள் நேரடியாக தலையிடுவதை நீங்கள் பார்க்கலாம். இந்த நுண் கடன் விடயத்தில் அவர்கள் மூக்கை நுழைப்பது பிரிக்கின்ற செயற்திட்டம். ஆகவே மக்கள் இதில் விழிப்பாக இருக்க வேண்டும்.
அதிகரித்த வட்டி வீதத்தில் நுண்கடன்களை பெற்றுக்கொள்பவர்கள் அவற்றை தவிர்த்து எமது மாகாண அதிகாரத்திற்கு உட்பட்டு இயங்குகின்ற கிராமிய வங்கிகள் சிக்கன கடன் வங்கிகள் போன்றவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மிகக்குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கி வைக்க தயாராக இருக்கின்றார்கள்.
கிராமிய வங்கிகள் சிக்கன கடன் வங்கிகளை நீங்கள் நாடுகின்ற பொழுது அது உங்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும் என வடமாகாண மகளிர் விவகாரம் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் உள்ள 219 கூட்டுறவுசங்கங்களில் இருந்தும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இதன் போது சங்கங்களை முன்னேற்றும் முனைப்புடனும் நம்பிக்கை விசுவாசத்துடனும் செயற்பட்டவர்கள் கௌரவவிக்கப்பட்டார்கள்.
பனங்கட்டகொட்டு மீனவர் சங்கத்தினரால் அந்த கிராமத்தை சார்ந்த மாணவி ஒருவர் 2017 சாதாரண தரத்தில் ‘9 ஏ’ சித்தி பெற்றமையை பாராட்டி 10 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும், அதே கிராமத்தை சேர்ந்த பொது அமைப்புகளால் 18 ஆயிரம் ரூபாவும் குறித்த மாணவிக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்ப விருந்தினராக வடமாகான கூட்டுறவு ஆணையாளர் வாகீசன் , மன்னார் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் தலைமைக்காரியாலய கூட்டுறவு செயலாளர் ஹசானா, மன்னார் மாவட்ட கூட்டுறவு திணைக்கள உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர் என்.பரமதாசன் மற்றும் மன்னார் மாவட்ட பதிவு செய்யப்பட்ட அனைத்து சங்கங்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது