வடதமிழீழம், யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் போதைவஸ்துப் பாவனையினைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு செய்யும் விசேட கூட்டம் நேற்று வியாழக்கிழமை யாழ்.சுண்டுக்குளியிலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் இடம்பெற்ற இந்த விசேட கூட்டத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், காவல்துறை மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், மதத் தலைவர்கள் குடாநாட்டிலுள்ள அனைத்துப் பிரதேச செயலாளர்கள் ,சமூக அக்கறையுடைய புத்திஜீவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மூன்று மணி நேரம் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் அரச உயரதிகாரிகளினாலும், சமூகப் பிரதிநிதிகளினாலும்,மதத் தலைவர்களினாலும் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக தென்மராட்சி கெற்பேலி, தனங்கிளப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பிலும்,குடியிருப்பாளர்களற்ற வீடுகளில் இடம்பெறும் கலாசார மற்றும் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பிலும்,நாவற்குழிக் கரையோரத்தினை அண்டிய பகுதியில் கஞ்சா பாவனை அதிகரித்துள்ளமை தொடர்பிலும் இந்த விசேட கூட்டத்தின் போது வடமாகாண ஆளுநருக்கு எடுத்துக் கூறப்பட்டது.
இதேபோன்று காரைநகர், புங்குடுதீவு, அனலைதீவு உள்ளிட்ட பிரதேசங்களில் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவது தொடர்பிலும், அதற்கு உடந்தையாக இருப்போர் குறித்தும் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் நடவடிக்கைகளில் எதுவித முன்னேற்றமும் காணப்படாமை தொடர்பிலும் அதிகாரிகள் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினர்.
இதேவேளை,யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ள வன்முறை மற்றும் சமூகச் சீரழிவுகளைத் தடுப்பதற்காகச் சமூகப் பிரதிநிதிகளையும்,மதத் தலைவர்களையும்,அதிகாரிகளையும், சட்டத்துறை சேர்ந்தவர்களையும் பாதுகாப்புத் தரப்பினையும் ஒன்றிணைத்துக் வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும், இதற்கான முன் ஏற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
- வடக்கில் சொற்ப அதிகாரங்களுடன் இருக்கும் மாகாணசபையை கூட உள்ளெடுக்காது திட்டமிட்ட வகையில் ஆளுநர் அதிகாரங்களை கையகப்படுத்தும் ஒரு நிகழ்வே இந்த ஒன்று கூடல்
- அதிகரித்துள்ள வன்முறை மற்றும் சமூகச் சீரழிவுகளிற்கு படையினரும் காவல்துறையினரும் பக்கத்துணையாக இருப்பது யாவரும் அறிந்ததே