நாட்டுப்புறவியலும் செவ்வியலும் மிகப் புராதனமான புனைவியல் சகோதரிகள். இருவரும் தனித்தனி ஸ்திரிகள் என்றாலும் ஒருத்தியின் ஆடையை மற்றவள் உடுத்தி விளையாட்டயர்வது சர்வசாதாரணம். ஒருத்தியின் வேஷத்தைக் களைத்தால் மற்றவள் இருப்பாள். கிளி எழுபதில் இவர்களது மாறுவேஷங்களைக் கண்டு மகிழலாம். வடஇந்தியாவில் வாய்மொழிக் காமியக் கதைகளாக நிலவிய வந்த இவை 12ஆம் நூற்றாண்டில் தொகுத்து எழுதப்பட்டன.
இதிலுள்ள எழுபது கதைகளும் எழுபது இரவுகளில் கிளியொன்று கணவன் அயலூர் சென்ற தனிமையின் தகிப்பைத் தாங்க முடியாத இளம் மனைவி இரவில் சோரநாயகனைத் தேடிப் புறப்பட்டபோது தடுத்துக் கூறுவனவாக உள்ளன. அந்த எழுபது கதைகளும் ’பதிவிரா தருமத்தை’ தாண்டுகின்ற பத்தினிகள் மீறுகிற சந்தர்ப்பங்களில் தங்கள் கணவரிடம் கையும்களவுமாகப் பிடிபடுவதையும், அத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்கள் எவ்வாறு தந்திரங்களாலும் சாகசங்களாலும் தப்புவதையும் பற்றியே கூறுகின்றன. பெரும்பாலான கணவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்; ஒரு கதையில், கட்டிலில் தனது மனைவியும் வேறொரு ஆடவனும் கூடியுள்ள காட்சியைக் கணவன் கண்ட போது, ‘இன்னும் ஒரு வாரத்தில் பாம்பு கடித்துக் கணவன் சாவான் என்றும் அப்படி நடவாதிருக்க அந்நிய புருசனோடு மனைவி கூடவேண்டும் என்பதற்காக இக்காரியத்தைச் செய்ய நேர்ந்ததாக’ மனைவி கூறக் கேட்டுக் கணவன் அவளது அன்பைப் பாராட்டுவதாக வருகிறது. இந்தக் கதையின் வேறு பாடபேதம்தான் இத்தொகுப்பில் உள்ளது.