நீங்கள் எப்படிப்பட்ட நண்பர்? உங்களுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சிகள், ஏமாற்றங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய நண்பர்கள் யாராவது உங்களுக்கு உண்டா? அவர் எப்போதும் உங்களுக்கு விசுவாசமாக உங்களுடன் இருப்பாரா? அல்லது, நல்ல நேரத்தில்மட்டும் இருந்துவிட்டுப் பிரச்னை வந்தவுடன் ஓடிவிடுவாரா? உங்களுடைய உறவு, நிபந்தனையற்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததா? அல்லது, நீங்கள் இருவரும் உங்களுக்குள் சில உண்மைகள், உணர்வுகளை மறைக்கிறீர்களா? சுவாரஸ்யமான இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்தால், நமது நலன், உயிர்ப்பு, நீடித்துநிற்கும் தன்மை ஆகியவை காக்கப்படும் என்கிறது உளவியல். மருத்துவத்துறையும் இதனை ஏற்றுக்கொள்கிறது, பல ஆய்வுகளில் இதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.
பழக்கவழக்கம்சார்ந்த மருத்துவம் என்பது, நெருங்கிய சமூக உறவுகளுக்கும் ஒருவருடைய நலனுக்கும் இடையிலுள்ள இணைப்பை உறுதிப்படுத்துகிறது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்குமுன்பே அரிஸ்டாட்டில் இதைப்பற்றிப் பேசியுள்ளார். நெறிமுறைப்படி நடத்தல், ஆளுமை நல்லொழுக்கங்கள், நிகோமேச்சியன் நெறிமுறைகளைப்பற்றிய அவரது எழுத்துகளில் இது இடம்பெற்றுள்ளது. அரிஸ்டாட்டில் வரையறுத்த மூன்றுவகை நட்புகள் மிகவும் பிரபலமானவை, பெரும் தாக்கத்தை உண்டாக்கியவை: பயன் கருதிய நட்புகள், மகிழ்ச்சிக்கான நட்புகள், மற்றும் நெறிமுறை சார்ந்த நட்புகள். இதில் பயன் கருதிய நட்புகள் என்பவை பெரும்பாலும் தொழில் உறவுகளாகும். இதில் நட்பாகிற இருவருக்கும் வெளிப்படையான பலன்கள் இருக்கும். உதாரணமாக, பணமோ அதிகாரமோ கிடைக்கும். அடுத்து, மகிழ்ச்சிக்கான நட்புகள். இங்கே நண்பர்கள் மகிழ்ச்சிதரும் ஆர்வங்களுக்காக ஒன்றுகூடுகிறார்கள். உதாரணமாக, விளையாட்டுப்போட்டிகள், இசை நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகச் செல்லுதல் போன்றவை. அரிஸ்டாட்டிலைப் பொறுத்தவரை, இந்த மூன்று வகைகளில் நெறிமுறை சார்ந்த நட்புதான் மிகச்சிறந்தது. இதில் உணர்வுசார்ந்த அக்கறையும் இரக்கம் மிகுந்த கவனிப்பும் இருக்கும். அவரைப்பொறுத்தவரை, நெறிமுறை அடிப்படையிலான நட்புதான் ஒவ்வொருநாளும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.
அதன்பிறகு, அரிஸ்டாட்டிலின் பார்வையை மோசஸ் மைமொனிடெஸ் என்பவர் விரிவுபடுத்தினார். இவர் சமூகத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கிய ரப்பினிக் அறிஞர், மருத்துவர் ஆவார். உதாரணமாக, அவர் எழுதிய “குழம்பியவர்களுக்கான கையேடு” என்ற படைப்பில் மைமொனிடெஸ் இவ்வாறு கூறுகிறார், “நம் ஒவ்வொருவருக்கும் வாழ்நாள்முழுக்க நண்பர்கள் தேவை. இது எல்லாருக்கும் தெரியும். ஒருவர் நல்ல ஆரோக்கியத்துடன், வளத்துடன் இருக்கும்போது, நண்பர்களுடன் நேரம் செலவிட விரும்புகிறார். பிரச்னை வரும்போதும் அவருக்கு நண்பர்கள் தேவைப்படுகிறார்கள். வயதாகி அவரது உடல் தளரும்போது, அவருக்கு உதவ நண்பர்கள் தேவைப்படுகிறார்கள்.”
மைமொனிடெஸ் ஒரு மருத்துவராகப் போற்றப்படுகிறார். ஆனால், அவர் வாழ்ந்த நாளில் எந்த மருத்துவச் சிறப்புத்தன்மையும் இல்லை. 19ம் நூற்றாண்டின் நிறைவில்தான், அறிவியல்சார்ந்த ஆளுமை ஆய்வுகள் தொடங்கின. சிக்மண்ட் ஃப்ராய்ட் போன்றோரின் விசாரணை ஆய்வுகள் நடைபெற்றன. ஆச்சர்யமான விஷயம், ஃப்ராய்ட் நிறைய எழுதியிருந்தாலும், ஆண்கள், பெண்கள்மத்தியில் நட்பு ஒரு நேர்விதமான ஆற்றலை வழங்குகிறது என்பதுபற்றி அவர் அநேகமாக எதுவுமே எழுதவில்லை. அத்துடன், நரம்புத்தளர்ச்சிபற்றிய அவரது கோட்பாட்டில், ஒருவர் நண்பர்களை உண்டாக்கிக்கொள்ளும் தன்மையானது அவரது குழந்தைப்பருவத்தில் பெறப்படுகிறது அல்லது பாதிக்கப்படுகிறது என்பதை அவர் விளக்கவில்லை.
நட்பைப்பற்றி ஃப்ராய்ட் அதிகம் பேசாவிட்டாலும், அவருடன் பணிபுரிந்த அல்ஃப்ரெட் அட்லெர் இதுபற்றி நிறைய பேசியிருக்கிறார். அட்லெர் முதல் உலகப்போரின்போது ஆஸ்திரிய ராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரிந்தவர். அப்போது அவர் மனித ஆவேசத்தின் கொடுமைகளை நேருக்குநேர் பார்த்துள்ளார். இதன் அடிப்படையில்தான் அவர் மிகுந்த தாக்கம் உண்டாக்கிய தனது ‘சமூக உணர்வு’க் கோட்பாட்டை உண்டாக்கினார். மனிதர்கள் எல்லாருக்கும் அக்கறை, அன்பு ஆகிய குணங்கள் இயல்பாகவே உண்டு என்றார் அட்லெர். ஆனால், இந்தக் குணங்கள் அவர்களுடைய இளம்பருவத்தில் வலுப்படுத்தப்படவேண்டும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பள்ளியிலுள்ள மற்ற நிபுணர்கள் அதனை வலுவாக்கவேண்டும், அப்போதுதான் இந்தக் குணம் சிறந்துவிளங்கும், இல்லாவிட்டால் வலுவிழந்துவிடும்.
குழந்தைகள், வளர்இளம்பருவத்தினர்மத்தியில் சமூக உணர்வை எப்படி வளர்ப்பது என்பதுபற்றி அட்லெர் நிறைய எழுதினார், அதற்காக உலகப்புகழ் பெற்றார். ஆளுமை கண்டறிதலைக் கற்றுத்தரும்போது, ‘ஒரு குழந்தையின் உணர்வு நலனைக் காட்டும் ஒரு முக்கியமான சான்று, அதன் நண்பர்கள்தான்’ என்று வலியுறுத்துகிறார் அட்லெர். இதற்காக அவர் ஆராய்ச்சித் தரவுகளை அதிகம் பயன்படுத்தவில்லை, மருத்துவ அனுபவங்களை முன்வைத்துதான் வாதிட்டார். நண்பர்கள் இல்லாத இளைஞர்களுக்கு மன நலப் பிரச்னைகள் வரும் வாய்ப்பு அதிகம் என்றார் அவர், அத்தகைய இளைஞர்களுக்கு சமூகத் திறன்களைக் கற்றுத்தருவது அவசியம் என்றார். அப்படிப்பார்த்தால், நேர்வித உளவியல் எனும் இன்றைய புதிய இயல் அட்லெரிடம் தொடங்குவதாக நாம் எண்ணலாம். குடும்பச் சிகிச்சை, பள்ளி வழிகாட்டல் போன்றவற்றின்மூலம் சமூக உணர்வுகளை வலுப்படுத்தலாம் என்று அவர் குறிப்பிட்டதையும் அதனை ஆராய்ந்ததையும் இந்த இயலின் தொடக்கமாகக் கருதலாம்.
நட்பு மற்றும் பழக்கவழக்க மருத்துவம்
1970களில், பழக்கவழக்க மருத்துவம் கண்டறியப்பட்டது. அப்போது தொடங்கி, சமூக ஆதரவு என்பதைப்பற்றிப் பலரும் ஆராய்ந்துவருகிறார்கள். இந்தத் துறை தொடங்கியதுமுதல், கருவிசார்ந்த ஆதரவையும் உணர்வுசார்ந்த ஆதரவையும் வித்தியாசப்படுத்திக் காண்கிறார்கள் ஆய்வாளர்கள். கருவிசார்ந்த ஆதரவு என்பது, பணம், உணவு, சமைத்தல் அல்லது வீட்டைச் சுத்தப்படுத்துதல் போன்ற வெளியே தெரியும் பொருள்களைச் சார்ந்து அமைகிறது. ஆனால், உணர்வுசார்ந்த ஆதரவானது பச்சாத்தாபம் மற்றும் அறிவுரை போன்ற கண்ணுக்குத் தெரியாத பொருள்களைச் சார்ந்து அமைகிறது. இப்போதெல்லாம், ஆய்வுகள் சமூக ஆதரவின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் கவனம் செலுத்துகின்றன: நெருங்கிய நண்பர் உறவு. சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் இன்னொருவரை அல்லது இன்னும் சிலரை நம்புகிறார்கள், முக்கியமான தனிப்பட்ட விவரங்களை அவரிடம்(அவர்களிடம்) பகிர்ந்துகொள்கிறார்கள். பொதுவாக இவர்களை ‘நெருங்கிய நண்பர்’ என்பார்கள். ப்ரிகாம்-யங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியானெ ஹால்ட்-லன்ஸ்டட் மற்றும் அவரது சக ஊழியர்கள் இதய நோய் மற்றும் உளவியல் சமூகக் காரணிகளைப்பற்றி ஆராய்ந்தார்கள். அவர்கள் குறிப்பிடுவது, “சில உறவுகள் மற்ற உறவுகளைவிட அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நம்ப இடமிருக்கிறது, ஒருவர் இன்னொருவருடன் எந்த அளவு நெருங்கியிருக்கிறோம் என்று உணரும் அளவானது மிகவும் முக்கியமாகத் திகழ்கிறது, இதுதான் நமது புரிந்துகொள்ளலுக்குப் பங்களிக்கும் காரணியாக அமைகிறது.”
கடந்த 30 ஆண்டுகளாக, பழக்கவழக்கங்கள் சார்ந்து நடைபெற்ற ஆய்வுகளில், ஒருவருக்கு நெருங்கிய நண்பர் இருப்பதற்கும் அவரது தனிப்பட்ட நலனுக்கும் இடையே அளவிடக்கூடிய இணைப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுகள் பலவகைகளில் அமைந்துள்ளன: போதைப்பழக்கம் அதிகமுள்ளோர்பற்றிய ஆய்வுகளில் தொடங்கி, அமெரிக்கப் பதின்பருவத்தினர்மத்தியில் மன அழுத்தம்பற்றிய ஆய்வில் தொடர்ந்து, இளம் மெக்ஸிக இளைஞர்கள்மத்தியில் முன்னெச்சரிக்கையான நலப்பராமரிப்பு ஆய்வுகள்வரை. இந்த ஆய்வுகளில் நாம் திரும்பத்திரும்பப் பார்க்கிற ஒரு விஷயம், நம்பகமான ஒரு நண்பர் இல்லாதவர்கள் எல்லாவிதமான ஆபத்துகளிலும் இறங்குகிறார்கள், தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அதேபோல், நெருங்கிய நண்பரைக் கொண்டவர்கள் தங்களுடைய ஒட்டுமொத்த நலன் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள், அவர்களுக்கு இதய நோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நாள்பட்ட மருத்துவப் பிரச்னைகள் வரும் வாய்ப்பு குறைகிறது. இவர்களுடைய உளவியல்சார்ந்த எதிர்த்துநிற்கும் திறன் அதிகமாக உள்ளது, இவர்களுக்கு மன அழுத்தம் வரும் வாய்ப்பு குறைகிறது. டாக்டர் பால் சர்டீஸ் மற்றும் அவரது சக ஊழியர்கள் பிரிட்டனில் அதீத உடல்பருமன் மற்றும் செயல்சார்ந்த உடல்நலம்பற்றி ஓர் ஆய்வை நடத்தினார்கள். இந்த ஆய்வில் தெரியவந்த விஷயம், ஒருவருக்கு நெருங்கிய நண்பர் இருக்கிறார் என்றால், அவரது வாழ்நாள் அதிகரிக்கிறது: பெண்களுக்கு ஐந்து வருடம், ஆண்களுக்கு நான்கு வருடம்.
ஒரு நண்பர் நம்முடைய நலனில் இப்படியொரு தாக்கத்தை உண்டாக்கமுடியுமா? இது எப்படி? இந்தக் கேள்விக்குத் துல்லியமாகப் பதில்சொல்லும் ஆய்வுகள் இன்னும் நடைபெறவில்லை. ஆனால், இதில் நேரடி, மறைமுகத் தாக்கங்கள் இரண்டுமே உண்டு என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள். நேரடியான தாக்கம் என்பது, நெருங்கிய நண்பரின் பச்சாதாபம், வழிகாட்டுதல் ஆகும். அந்த நெருங்கிய நண்பருக்கு இவருடைய ஆளுமை புரிந்திருக்கும், இவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காகச் செயல்படுவார். ஆகவே, ஒருவருக்கு ஒரு நெருங்கிய நண்பர் இருக்கிறார் என்றால், அவர் தனது பணிசார்ந்த, குடும்பம்சார்ந்த பிரச்னைகளில் சிறப்பான தீர்மானங்களை எடுக்கிறார், அதனால், தினசரி வாழ்க்கையில் அவருக்கு வரக்கூடிய அழுத்தங்கள் குறைகின்றன. மறைமுகமாகப் பார்க்கும்போது, ஒருவருக்கு நம்பிக்கையான, நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார் என்றால், அவரிடம் இவர் தன்னுடைய தனிப்பட்ட உணர்வுகளைப் பகிர்ந்துகொள்கிறார், அதனால், பதற்றத்தால் ஏற்படுத்தப்படும் ஆரோக்கியமற்ற செயல்பாடுகளான புகைத்தல், அதிகம் உண்ணுதல், போதைப்பொருள்களைப் பயன்படுத்துதல், உழைப்பில்லாமல் அமர்ந்திருத்தல் போன்றவற்றில் இவர் ஈடுபடமாட்டார். ஆகவே, நெருங்கிய நண்பர்களைக்கொண்டவர்கள் உள் கொந்தளிப்புகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆரோக்கியமற்ற பழக்கங்களை நம்பமாட்டார்கள். இன்றைய சமூகம் அதிவேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இதில் அழுத்தம் இப்போதைக்குக் குறையப்போவதில்லை, ஆகவே, நம்பிக்கையான ஒரு நண்பரைக் கொண்டிருத்தல் நம்முடைய தினசரி நலனுக்கு நல்லதாகும்.
ஒரு நெருங்கிய நட்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கான 6 உத்திகள்
1. உண்மையாக இருங்கள், தெளிவாக உரையாடுங்கள். ஒருவர் என்னதான் நல்லவராக இருந்தாலும் சரி, அவர் தனது உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தாவிட்டால், யாரும் அவர்மீது இரக்கம் காட்டமாட்டார்கள், உதவமாட்டார்கள். உதாரணமாக ஒருவர் தன் நெருங்கிய நண்பரிடம் பேசுகிறார், “கொஞ்சநாளாக எனக்கு மனம் சரியில்லை” என்று சொல்கிறார். இதைவிட, “என்னுடைய வேலை எனக்கு மன அழுத்தத்தைத் தருகிறது” என்று அவர் சொன்னால், நண்பருக்குப் பிரச்னை தெளிவாகப் புரியும், உதவியும் கிடைக்கும்.
2. தற்காதலைத் தவிர்க்கவும். உணர்வுப் பரிமாற்றங்கள் பரஸ்பரம் நடைபெறுவது நல்லது. அதாவது, நன்றாகப் பேசினால்மட்டும் போதாது, நன்றாகக் கேட்கவேண்டும். உங்கள் நெருங்கிய நண்பரின் வாழ்க்கை நிகழ்வுகளில் உண்மையான ஆர்வம் காட்டவேண்டும்.
3. உங்கள் நெருங்கிய நண்பரிடம் “அக்கறைச் சலிப்பை” உண்டாக்கிவிடக்கூடாது. உங்கள் உணர்வுகளில் எதையெல்லாம் அவரிடம் சொல்வது, குறிப்பாக, எப்போது சொல்வது என்று ஓர் ஒழுங்கைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். உங்களுடைய மிகச்சிறிய உணர்வுப் பிரச்னையைக்கூட அவரிடம் சொல்லிக்கொண்டே இருந்தால் பலனிருக்காது.
4. அவரிடம் நன்றியுணர்வோடு இருங்கள். ‘இவர் என்னைப் பயன்படுத்திக்கொண்டுவிட்டார்’ என்று அவர் நினைத்துவிடக்கூடாது. நெருங்கிய நண்பர் என்பவர், மனநல நிபுணர் அல்ல, மருத்துவர் அல்ல. ஒருவர் தன்னுடைய நன்றியைப் பலவிதங்களில் வெளிப்படுத்தலாம்; உங்களுக்கு மிகவும் பொருந்தும் ஒரு முறையைப் பின்பற்றுங்கள்.
5. அவ்வப்போது, இதைப்பற்றி அவர்களிடம் நேரடியாகவே கேளுங்கள். உங்கள் நெருங்கிய நண்பரிடம், ‘நான் என்னுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறேனா? உங்கள் அறிவுரைகளுக்குச் செவிசாய்க்கிறேனா? அல்லது, திரும்பத்திரும்ப அதே பிழைகளைச் செய்துகொண்டிருக்கிறேனா?’ என்று நேரடியாகக் கேளுங்கள். பயம் வேண்டாம். அவர் சொல்லும் பதிலைக்கேட்டு, அதன்படி நடக்கத் தயாராக இருங்கள்.
6. ஒவ்வொரு உறவுக்கும் சமநிலை தேவை. ஆகவே, வெறுமனே கவலைகளைமட்டும் அவரிடம் சொல்லாதீர்கள், உங்கள் வாழ்க்கையில் வரும் மகிழ்ச்சிகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். புன்னகையும் நகைச்சுவையும் துயரத்தையும் தீவிரத்தையும் விரட்டும். அவ்வப்போது இணைந்து சில மகிழ்ச்சியான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். இது உங்கள் இருவருக்கும் புத்துணர்ச்சியைத் தரும்.