வடக்கு கிழக்கு வீடமைப்பு திட்டம் மேலும் சிக்கலாகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்த விவகாரம் ஒரு அரசியல் போட்டியாக உருமாறி வருகிறதென்பதை, நேற்று இரா.சம்பந்தன் அனுப்பி வைத்த கடிதம் உறுதிசெய்துள்ளஶ்ரீலங்கா ஜனாதிபதி தலைமையிலான அணிக்கும், பிரதமர் சார்பான அணிக்குமான போராக மாறிவரும் வீடமைப்பு திட்ட விவகாரத்தில், இறுதி நிலவரமாக, நேற்று பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பணியகத்தின் மேற்பார்வையிலும் கண்காணிப்பிலும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணியையும் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக மேற்கொள்ளுமாறு அவரது கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 50,000 கல்வீடுகளை அமைக்க, ஜனாதிபதியின் கீழ் செயற்பட்ட தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சு ஊடாக முன்னெடுக்க முன்மொழியப்பட்டிருந்தது. பின்னர் 25 ஆயிரமாக வீடுகள் குறைக்கப்பட்டன. ஜனாதிபதியின் கீழ் இயங்கிய தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சு, அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சுடன் நான்கு மாதங்களின் முன் இணைக்கப்பட்டது.
வீட்டுத் திட்டத்தை வீடமைப்பு செயலணி ஊடாக நடைமுறைப்படுத்தும் அமைச்சரவை பத்திரத்தை கடந்த மாத இறுதியில் அமைச்சர் மனோ கணேசன் சமர்ப்பித்திருந்தார். எனினும், அமைச்சரவையில் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இரா.சம்பந்தன் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக வீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த பரிந்துரைத்து கடிதம் அனுப்பியுள்ளார்.
மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக வீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தவே ஐ.தே.கவும் விரும்புவதாக தெரிகிறது. இதன் எதிரொலியாகவே இந்த கடிதம் அனுப்பப்பட்டிருக்கலாமென அனுமானிக்கப்படுகிறது.
மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்ட பல திட்டங்களில் பெருமளவு பணம் ஐ.தே.கவிற்கு தரகுப்பணமாக செல்வது ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு கடுமையாக அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. உருக்கு வீட்டு திட்டத்திலும் இதே விதமான அனுபவத்தை ஜனாதிபதி அடைந்திருந்தார். இதனால், மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அனுமதியளிக்க வாய்ப்பில்லையென்றே தெரிகிறது. இதனாலேயே, பிரதமர் அலுவலகத்தின் கண்காணிப்பில் அது மேற்கொள்ளப்படலாமென சம்பந்தன் பரிந்துரைத்துள்ளார். எனினும், ஜனாதிபதி அதற்கு அனுமதிப்பாரா என்பது தெரியவில்லை.