தாய்லாந்தில் உள்ள தாம் லுயங் குகையிலிருந்து மீட்கப்பட்ட 3 குழந்தைகள் மற்றும் பயிற்சியாளருக்கு தாய்லாந்து அரசு குடியுரிமை வழங்கியுள்ளது.
கடந்த ஜூன் 23 அன்று ‘வைல்ட் போர்ஸ்’ என்ற கால்பந்தாட்ட அணியை சேர்ந்த 12 குழந்தைகளும் அவர்களது பயிற்சியாளரான எகோபோல் சந்தோவங்கும் (25) வெள்ளப்பெருக்கின் காரணமாக தாம் லுயங் என்ற குகையில் சிக்கிக் கொண்டனர்.
இவர்களை மீட்கும் பணி உள்ளூர் செய்தியாக மட்டுமின்றி பல்வேறு நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வாக மாறியிருந்தது. இதற்கிடையில் 18 நாட்கள் கழித்து குகையில் சிக்கிக்கொண்ட அனைவரும் மீட்புப்பணியின் பலனாக ஜூலை 10 அன்று மீட்கப்பட்டனர்.
தற்போது குடியுரிமை வழங்கப்பட்டுள்ள நான்கு பேரும் தாய்லாந்திலேயே பிறந்து வளர்ந்தவர்களாக இருந்த நிலையிலும அவர்கள் நாடற்றவர்களாக வசித்து வந்துள்ளனர். குடியுரிமை கொண்டிராத இவர்களுக்கு உரிமைகள் மற்றும் அரசு உதவிகள் மறுக்கப்பட்டு வந்துள்ளது. அத்துடன் அவர்கள் வசிக்கும் சியாங் ராய் மாகாணத்திலிருந்து வேறெங்கும் செல்ல முடியாது நிலை இருந்துள்ளது.
இந்த நால்வருக்கும் குடியுரிமை இல்லாத தகவல மீட்புப்பணியின் போது வெளிச்சத்துக்கு வந்ததாக கூறப்படுகின்றது. அதைத் தொடர்ந்து அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் ஏற்பாட்டை தாய்லாந்து அரசு மேற்கொண்டுள்ளது.
சில தினங்களுக்கு முன், அந்த நால்வருடன் 30 பேருக்கு குடியுரிமை வழங்கிய மே சாய் மாவட்டத்தின் தலைவர் சோம்சக், “இன்று உங்கள் அனைவருக்கும தாய்லாந்து குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது” என்றார். அதே சமயம், குகை நிகழ்வுக்கும் குடியுரிமைக்கும் எந்த தொடர்பு இல்லை எனக்கூறியுள்ள சோம்சக், “அவர்கள் அனைவரும் குடியுரிமை பெற தகுதியானவர்கள்” என ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாய்லாந்தில் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் நாடற்றவர்களாக உள்ளதாக அரசு கணக்குகள் குறிப்பிடுகின்றன. ஆனால்இ உண்மையான எண்ணிக்கை 35 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் எனக் கணக்கிட்டுள்ளது நாடற்ற நிலையை ஆராயும் சர்வதேச கண்காணிப்பகம் (International Observatory on Statelessness).
இவர்களில் பெரும்பாலானோர் நாடோடி பழங்குடி இனத்தை சேர்ந்த மக்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பன்னெடுங்காலமாக தாய்லாந்து, மியான்மர், லாவோஸ் மற்றும் சீன எல்லைப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் என அறியப்படுகின்றது.