ஶ்ரீலங்கா இராணுவத்தின் பெரும்பிரச்சாரங்களுடன் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி முன்னெடுத்துவரும் தென்னை மரநடுகை திட்டம் வீதியினை கூட விட்டுவைத்திருக்கவிலலையென்பது அம்பலமாகியுள்ளது.
வலி. வடக்குப் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான பிரதான வீதிகளில் ஒன்றான கட்டுவன் மயிலிட்டி வீதியின் நட்டநடுவே தர்சன ஹெட்டியாராட்சியின் ஆலோசனையின் பேரில் படையினர் தென்னங்கன்றுகளை நாட்டிவருவதாக தெரியவருகின்றது.
மயிலிட்டிப் பிரதேசங்களில் மயிலிட்டி கட்டுவன் வீதியின் ஒரு பகுதி அண்மையில் விடுவிக்கப்பட்டபோதிலும் மேலும் சிறு பகுதி படையினரின் பிடியிலேயே காணப்படுகின்றது. இவ்வாறு படையினரின் பிடியில் காணப்படும் வீதிக்குரிய பிரதேசங்களிற்கான போக்குவரத்து இன்று வரையில் தனியார் காணிகளின் ஊடாகவே இடம்பெறுகின்றது.
மக்களின் நிலமும் வீதியுமுள்ள நிலப்பரப்பில் பழைய வீதியினை கனரக வாகன மூலம்; உழுது நடுவீதியில் படையினர் தென்னச் செய்கை மேற்கொள்வதாக வலிவடக்கு பிரதேச சபை தலைவர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தில் தென்னிலங்கை வர்த்தகர்கள் சிலரது ஒத்துழைப்புடன் ஒரு இலட்சம் தென்னைகளை நடும் திட்டமொன்றை தர்சன் ஹெட்டியாராட்சி ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.