போர் முடிவுற்ற நிலையில் ஆரம்பிக்கப்பட்டதே இன்று ராணுவம் நிலைக்கொண்டுள்ள வடக்கு கிழக்கில் உள்ள சட்ட விரோத குழுக்களின் செயற்பாடு. இந்தக்குழுக்கள் தமிழர்களின் பிரதேசங்களில் மட்டும் வன்முறைகளையும் சமூக சீர்கேடுகளையும் தோற்றுவிப்பதாக சந்தேகம் எழுப்புகிறார் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல்.
அவர், “2009ம் ஆண்டு வரையில் சமூக விரோத குற்றங்களுக்கு வளைந்து கொடுக்காத சட்டம், தமிழர் பிரதேசங்களில் நிலவி வந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த காலத்தை தமிழர்களுக்கு கிடைத்த ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். ஏனென்றால் தமிழ் மக்களுடைய பண்பாடும் ஒழுக்கமும் சமூகக்கட்டுப்பாடும் ஓங்கி நின்ற காலம் அது.
இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்காது இருந்த போதும் கூட, வன்னியில் வாழ்ந்த தமிழ் மக்கள் சுதந்திரத்தை உச்ச கட்டமாக அனுபவித்த காலம் அது. எனவே இதனை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனையோடு சர்வதேசத்தின் ஆதரவோடு இலங்கை அரசு ஓர் இன அழிப்பை மேற்கொண்டது. இவ்வாறு கொலைகளைப் புரிந்தவர்கள் தொடர்ச்சியாக தமிழர்பிரதேசங்களில் இன அழிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு செயற்பட்டு வருகின்ற ஒரு காலம் தான் 2009 ம் ஆண்டுக்கு பின் உள்ள காலம்.
2009ம் ஆண்டுக்குப்பின் இன்று வரையில் முழுமையாக தமிழ் மக்களை ராணுவத்தினர் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றனர். இவ்வாறான கால கட்டத்தில் தான் கிரீஸ்பூதம், வாள் வெட்டு சம்பவங்களை சந்திக்க நேர்ந்தது. மேலும் தமிழர் பிரதேசங்களில் ஆவா குழு ஒன்று செயற்பட்டது. அதுவும் இதே போன்று வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டது. இந்த ஆவா குழு தொடர்பாக தற்போது சுகாதார அமைச்சராக இருக்கின்ற ராயித்த சேனாரத்தின அவர்கள், கடந்த 2016, 2017ம் வருடங்களில் கூட பகிரங்கமாக ஊடக சந்திப்பில் குறிப்பிட்ட ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில், ஆவா குழுவினரை உருவாக்கியது கடந்த கால ஆட்சியில் பாதுகாப்புச்செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்சே தான் என்று. இதை உருவாக்க யாழ்ப்பாணத்திலேயே ஒரு ராணுவ அதிகாரியை நியமித்திருந்தார். அது மட்டுமல்ல ஆயுதமும் பணமும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது’ என்றும் அவர் அறிவித்தார். தற்போதைய ஆட்சியின் கீழ் தான் இந்த செய்தி வெளியில் வந்தது.
இது குறித்து நல்லிணக்க அரசாங்கம் கோத்தபாய மீது விசாரணை நடத்த வேண்டும். ஆனால் இது வரையில் எந்த நடவடிக்கையும் ஆளும் அரசு எடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் இந்த அரசாங்கமும் ஆவா குழுவையும் இதற்கு மூலையாக செயற்பட்டவர்களையும் பாதுகாக்க முயற்சிக்கின்றது என்பது தான் வேதனைக்குறிய விஷயமாகும்.
ஆவா குழு உறுப்பினர்கள் என்று கூறி இலங்கை போலீஸார் சிலரை கைது செய்தனர். ஆனால் “தாம் ஆவா குழுவினரே இல்லை, தாம் சமூகவிரோத குற்றங்களுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள், தங்களைப்பிடித்து அடைத்து வைத்துள்ளனர் “என்று புலம்புகின்றனர்.
அப்படியானால் இந்த ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படவில்லை?. அவர்கள் ராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் என்றே கருத வேண்டியுள்ளது’ என்றார்.
கடந்த ஜனவரி 2014ல் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட குமரேசன் வினோத், ஆவா குழுவை வழிநடத்தியவராக சொல்லப்பட்டது. அவருடன் பல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வசமிருந்த வாள்களும், கையெறி குண்டுகளும், வாகனங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன. அதன் பிறகு ஆவா குழுவின் செயல்பாடுகள் குறைந்து காணப்பட்ட நிலையில், ஆவா குழுவின் பெயரால் பலரை காவல்துறையினர் கைது செய்ததாக குறிப்பிடுகிறது அடையாளம் எனும் கொள்கை ஆய்வுக்கான நிலையம். ஓர் உணவகத்தின் வெளியே நண்பர்களுக்கிடையே நடந்த தகராறில் சிலர் கைது செய்யப்படுகின்றனர். கைது செய்யப்பட்டப் பின்னர், ஆவா குழு உறுப்பினர்கள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் சொல்லப்பட்ட சம்பவத்தை இந்த சூழலுக்கான சான்றாக சுட்டிக்காட்டுகின்றது அந்த ஆய்வு நிலையம்.
தொடரும்…..