வடதமிழீழம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விசுவமடு இராணுவ முகாமில் ஒரு மாதப் பயிற்சி வழங்கப்படுகின்றது.
கடந்த 29ஆம் திகதி தொடக்கம் விசுவமடு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் முகாமில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. குறித்த பயிற்சிக்காக இரண்டு மாவட்டங்களின் முன்பள்ளி ஆசிரியர்கள் 150 பேருக்கு ஒரே தடவையில் குறித்த பயிற்சிகள் இடம்பெறுகின்றன.
ஆசிரியர்கள் இரவு பகலாகக் குறித்த முகாமிலேயே தங்க வேண்டும். இந்தப் பயிற்சி எதிர்வரும் 23ஆம் திகதி நிறைவுபெறவுள்ளது.
இந்தப் பயிற்சி நெறியில் திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணமாகாதவர்கள் என்பதற்கு அப்பால் சிறு பிள்ளைகளின் தாய்மாரும் அதிகளவில் அழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தொடர் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இராணுவச் சீருடையைப் போன்ற உடை அணிதல் வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மாவட்டங்களைச் சேர்ந்த குறித்த முன்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சுமார் 200 பேருக்குச் சில மாதங்களுக்கு முன்னர் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.