இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சிக்கலான மற்றும் நெருக்கடியான பல திட்டங்களை கையாண்டது மற்றும் சில திட்டங்களுக்கு தலைமை வகித்ததன் மூலம் பெண்கள் பல தடைகளை உடைத்து முக்கிய பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்கள்.
ஆனால் தற்போது ஒரு மிக முக்கியமான நடவடிக்கையாக ஒரு பெண் விஞ்ஞானிக்கு, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் போன்ற இந்தியாவின் எதிர்கால திட்டமொன்றின் பெரிய தலைமை பொறுப்பை வகிக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் விண்வெளி நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகள் பெரிய அளவில் மாற்றி அமைக்கப்பட்டன. இதில் கடந்த மாதம் வெற்றிகரமாக சோதனை ஒன்றை நடத்திய ஒரு திட்டத்துக்கு வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் விமானத்தில், நெருக்கடியான நேரத்தில் அதில் பயணிக்கும் குழு தப்பித்து வெளியேறுவதற்கான மாதிரி செயல்முறை கடந்த வாரம் நடந்தது. மிகப்பெரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்குத்தான் லலிதாம்பிகா தலைமை பொறுப்பு வகிக்கவுள்ளார்.
மனிதனை சுமந்து செல்லும் விண்வெளி வாகனத்தில் அவசர காலத்தில் அதில் உள்ள விண்வெளி வீரர்கள் குழு இருக்கும் பகுதி கழன்றுகொள்ள வகை செய்யும் ”பேட் அபார்ட்” அமைப்பின் சோதனை ஸ்ரீஹரிகோட்டாவில் நடந்தது. இந்த சோதனை விண்வெளி பயணத்தில் 300 சென்சார்கள் வெவ்வேறு செயல்பாட்டு அம்சங்களை பதிவு செய்தன என இஸ்ரோ கூறியது.
பிபிசி இந்தியிடம் இஸ்ரோ தலைவர் கே. சிவன் விரிவாக பேசினார்.
” லலிதாம்பிகா தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்ல நிர்வாக அனுபவமும் கொண்டவர். இஸ்ரோ ஆண்கள் பெண்கள் என்றெல்லாம் வித்தியாசம் காட்டாது. நாங்கள் எப்போதுமே ஒரு வேலைக்கு யார் பொருத்தமானவர் என்பதை பார்த்துதான் தேர்ந்தெடுப்போம். இந்த திட்டத்தை பொருத்தவரையில் நாங்கள் இரண்டு சக பெண் ஊழியர்கள் பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என கண்டுகொண்டோம்” என்றார்.
- இஸ்ரோ: வெற்றிகரமாக சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி ராக்கெட் – 6 முக்கிய தகவல்கள்
- `ராட்சத ராக்கெட்’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது: இஸ்ரோ சாதனை
- விண்ணையும் வசப்படுத்தும் இஸ்ரோ பெண் விஞ்ஞானிகள்
- ஜிஎஸ்எல்வி – எஃப்08 ராக்கெட் குறித்த 5 சுவாரஸ்ய தகவல்கள்!
டாக்டர் சிவன் குறிப்பிட்ட அந்த மற்றொரு பெண் விஞ்ஞானி தற்போது செயற்கைக்கோள் தகவல்தொடர்பு திட்டத்திற்கு தலைமையேற்றிருக்கும் டாக்டர் அனுராதா. ” நாங்கள் சமமான வாய்ப்புகளை கொடுக்க விரும்பினோம் மேலும் இருவரும் ஆற்றல்மிக்க பெண்களாவர்” என்றார்.
உலகம் முழுவதும் பெரும் பாராட்டை பெற்ற ஒரு ராக்கெட்டுக்குள் 104 செயற்கைகோள்களை ஏவிய திட்டத்தின் குழுவிற்கு தலைமை ஏற்றவர் லலிதாம்பிகா. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் துணை இயக்குநர் இவர். இந்தியாவின் இத்திட்டத்தின் வெற்றியின் அளவை அதில் பயணித்த எந்தவொரு செயற்கைகோளும் ஒன்றோடு மற்றொன்று மோதிக்கொள்ளவில்லை என்பதை வைத்து அளவிட முடியும்.
” மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டால் இந்த அலுவலகம் பல கிளைகளை கொண்ட ஒரு மைய நிறுவனம் போல இயங்கும். ஏனெனில் வேறு சில அரசு முகமைகளுடன் இந்த அலுவலகம் இணைந்து வேலை செய்யவேண்டியதிருக்கும்” என்கிறார் டாக்டர் சிவன்.
இந்திய விமான படை, டிஆர்டிஓ மற்றும் வேறு சில முகமைகளுடன், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் தொடர்பான வெவ்வேறு அம்சங்கள் குறித்து இஸ்ரோ ஒருங்கிணைந்து செயலாற்றும். இந்திய விமானப்படையின் விமான ஓட்டியான ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர். 1984-ல் சோவியத் ரஷ்ய விண்வெளிப் பயணம் மூலமாக விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் எனும் பெயரை இவர் பெற்றார்.
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்ட சில காலம் எடுக்கக்கூடும் ஏனெனில் இந்தியாவின் நோக்கம் தற்போது, விண்வெளி தொழில்நுட்பங்களை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வகையில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதில்தான் இருக்கிறது. இவ்வருடம் நூறாவது பிறந்ததினத்தை கொண்டிருக்கும் விண்வெளி திட்டத்தின் நிறுவனரான டாக்டர் விக்ரம் சாராபாயின் சிந்தனையும் விண்வெளி தொழில்நுட்பங்களை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்பதாக இருந்ததது.
கல்வி, தகவல் தொடர்பு, புவியை ஸ்கேன் செய்யும் ரிமோட் சென்சிங் உள்ளிட்டவற்றுக்காக செயற்கைகோள் ஏவப்படுவதில் இருந்த இந்தியாவின் கவனம் ஒரு புது திருப்பத்தை கண்டுள்ளது. பிஎஸ்எல்வி மூலமாக செயற்கை கோள்களை ஏவுவதை சார்ந்திருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து தற்போது பெரிய செயற்கைகோள்களை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக ஏவுவதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.
ஆனால், 2019 மத்தியில் எஸ்எஸ்எல்வி (Small Satellite Launch Vehicle) ராக்கெட் செய்துகாட்ட வேண்டும் என்ற திட்டமிட்டிருக்கிறது.
” தனியார் துறையானது செயற்கைகோளை உடனடியாக ஏவுவதற்கு ஆர்வம் காட்டுகிறது. ஆகவே எஸ்எஸ்எல்விக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. பிஎஸ்எல்வி செய்வதில் பத்தில் ஒரு பங்குதான் இதைச் செய்வதற்கு செலவாகும். மேலும் பெரிய ஏவுகணைகளை சுமந்து செல்லும் ஊர்தியை தயாரிப்பதற்கு 300 – 400 பேர் தேவைப்படுவதைப் போல மனித வளம் இதற்குத் தேவையில்லை. இவற்றைத் தயாரிக்க மூன்று முதல் ஆறு பேர் மட்டுமே தேவை” என்கிறார் டாக்டர் சிவன்.
”எஸ்எஸ்எல்வி தேவைக்கேற்ப ஏவ உதவும் ஏவுகணையாகும். 500- 700 கிலோ எடையுள்ள செயற்கைகோளை ஏவுவதற்கு 72 மணிநேரம் இதற்கு போதுமானது. இதனை எந்த நாட்டுக்கும் எடுத்துச் செல்லலாம் அங்கிருந்தே ஏவமுடியும்.” என்றார் அவர்.
”ஆர் எல் வி எனப்படும் மறுபயன்பாட்டுக்கு உதவும் ஏவுகணை திட்டமானது, தொழில்நுட்பங்கள் தொடர்ந்து சோதனை நிலையில் இருப்பதால், சற்று தள்ளிப்போகலாம்” என்கிறார் டாக்டர் சிவன். ”ஆர்எல்வி நன்றாக வடிவமைக்கப்பட்டால் ராக்கெட்டுக்கான செலவில் சுமார் 50% வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது” என்றார் அவர்.
”பொதுவாக ஒரு செயற்கைகோள் ஏவப்படும்போது, ராக்கெட்டின் சில பாகங்கள் கடலில் தொலைந்து விடும் அல்லது எரிந்துவிடும். ஆனால் ஆர்எல்வி குறிப்பிட்ட தளத்திற்கு திரும்புவதை உறுதி செய்யும். இது மிகவும் சிக்கனமானது” என்கிறார் டாக்டர் சிவன்.
ஆனால், செலவை குறைப்பதற்கான இஸ்ரோவின் நோக்கம் தனியார் துறைக்கு பலன்களைத் தரும் என்பது சுவாரஸ்யம்.
”செலுத்து வாகனத்தைப் பொருத்தவரையில் 90 சதவீதமும் செயற்கை கோளைப் பொறுத்தவரை 50 சதவீதமும் வணிகம் தொழில்துறைக்குச் செல்லும் ” என்கிறார் டாக்டர் சிவன்