இலங்கையின் வடக்கே மன்னார் மறைமாவட்டத்தில் மடு என்ற புனித இடத்தில் அமைந்துள்ளது மடு அன்னை திருத்தலம்.
சுமார் 400 வருட பைழமை கொண்டது மடு அன்னையின் திருத்தலம்.போர்த்துக்கேயரின் வருகையின் பின்னர் 1544ஆம் ஆண்டில் மன்னாரைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் தற்போதைய மடுத் திருத்தலப் பகுதியில் ஒரு சிறிய அன்னை மரியாள் உருவத்தை வைத்து வணங்கினர்.
மேலும், 1583ஆம் ஆண்டில் மேலும் சில கிறிஸ்தவர்கள் ஒரு சிறிய ஆலயத்தை இவ்விடத்துக்கு அருகில் கட்டினர்.
மண்தாய் ( Mantai) என்று அழைக்கப்பட்ட இதுவே மடு அன்னை மரியாவின் முதல் வீடாக இருந்தது. 1656 ஆம் ஆண்டில் டச்சுக்காரர் சிலோனில் (இலங்கை) காலனி ஆதிக்கத்தைத் தொடங்கிய போது கத்தோலிக்கரை துன்புறுத்தியதாக வரலாறு கூறுகிறது.
அப்போது புகலிடம் தேடிய 30 கத்தோலிக்க குடும்பங்கள் தங்களுடன் மடு அன்னையின் திருவுருவத்தை எடுத்துச் சென்று 1670ஆம் ஆண்டில் மருதமடு என்ற இடத்தில் அதனை வைத்தனர்.
அந்த இடத்தில் தான் தற்போதைய மடு அன்னை திருத்தலம் உள்ளது.
இது, இலங்கை தமிழ் மற்றும் சிங்கள கத்தோலிக்கரின் புனித வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது.போர் தொடங்கியதில் இருந்து இவ்வாலயத்திற்கு செல்வோரின் தொகை பல மடங்கு குறைந்த நிலையில் காணப்பட்டது.
போரின் தாக்கத்தினால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்காண மக்கள் இவ்வாலயச் சுற்று வட்டத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மடு ஆலயத்தை நோக்கி இராணுவ முகாம் பகுதியில் இருந்து தொடர்ச்சியாக நடத்தப்பட்ட எறிகணை வீச்சினால் ஆலயம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியது.
இதனால் அங்கு அடைக்கலமடைந்திருந்த மக்கள் அனைவரும் வேறு பாதுகாப்பான இடத்தை நோக்கி இடம்பெயர்ந்து சென்றனர். அந்த ஆலயத்தில் இறுதியாகத் தங்கியிருந்த குருக்கள் மற்றும் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறினர்.
இதனை அடுத்து தேவாலயத்தில் 400 ஆண்டுகளாக அருள் பாலித்து வரும் மடு அன்னை சொரூபத்தின் பாதுகாப்புக் கருதி அச்சொரூபம் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி புனித சவேரியர் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக மடு அன்னையின் திருச்சொரூபம் மட்டுமின்றி மடு அன்னையின் பிள்ளைகளும் இடம்பெயர்ந்தனர்.
பல்வேறு இழப்புக்களை மடு அன்னையை விசுவசித்த மக்கள் சந்தித்தனர். உைடமைகளை இழந்தனர்.உயிர்களையும் இழந்தனர். கொடிய யுத்தத்தினால் பலர் அங்கவீனமாக்கப்பட்டனர்.மீண்டும் யுத்தம் முடிவடைந்து தமது இடத்தை நோக்கி மடு அன்னை திருச்சொரூபம் நகர்ந்த போது மக்களும் நகரத் தொடங்கினர். அப்போது மக்களின் உைடமைகள் அப்பிரதேசத்தில் யுத்தத்தினால் முழுமையாக அழிக்கப்பட்டன.
-யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மடுவை சூழவுள்ள மக்கள் கட்டம் கட்டமாக குடியேற்றம் செய்யப்பட்டனர். மடு அன்னையின் விசுவாசத்தில் வாழ்ந்து வரும் மக்கள் தொடர்ந்தும் தமது துன்ப துயரங்களையும், நன்மை தீமைகளையும் மடு அன்னையின் விசுவாசத்தோடு சமர்ப்பித்து வந்தனர்.
மடு அன்னையின் ஆவணி மாத பெருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 6 ஆம் திகதி நடைபெற்றது. இன்று புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில்,ஏனைய மறை மாவட்ட ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கின்றனர்.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் மடு திருத்தலத்தை சூழ்ந்துள்ளனர்.கடந்த 6 ஆம் திகதி முதல் இன்று வரை இலட்சக்கணக்கான மக்கள் மடு திருத்தலத்தை சார்ந்த பகுதிகளில் தற்காலிக கூடாரம் அமைத்து மடு அன்னையை தரிசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.றொசேரியன் லெம்பேட்