ஆஸ்திரேலியா: அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களின் கோரிக்கையினை பரிசீலித்து அவர்களை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கும் பட்சத்தில் சட்டவிரோத படகுகளின் வருகைகள் நிறுத்தப்படும் என ஆஸ்திரேலிய பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏடம் பண்ட் (Adam Bandt) நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
தங்களுடைய கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என அகதிகள் நம்பும் பட்சத்தில் படகுகளை நிறுத்தும் முயற்சி சாத்தியப்படும் எனக்கூறியுள்ள ஏடம் பண்ட், “போரினால் வெளியேறிய மக்களும் முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்களும் ஆஸ்திரேலியாவுக்கு வந்தடைய வேறு இல்லாததால் ஆட்கடத்தல்காரர்களின் வார்த்தைகளை நம்புகின்றனர்.”
“இந்தோனேசியா, மலேசியா, மற்றும் இன்னும் பிற பகுதிகளில் உள்ள அகதிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படுகிறது என்பதை அந்த அகதிகள் தெரிந்து கொள்ளும் போது, உயிரை பணயம் வைத்து படகு மூலம் ஆஸ்திரேலியா வருவது தேவையற்றது என்பதை அகதிகள் புரிந்து கொள்வார்கள்” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியே ஆஸ்திரேலியாவில்தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகின்றது.
அண்மையில் இப்பாதுகாப்பு கொள்கைகள் தொடர்வதை உறுதிச் செய்த ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர்டட்டன்,“2500 பேரை கடத்தி வரும் முயற்சிதடுக்கப்பட்டு 33 படகுகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன” எனக் கூறியிருந்தார். அத்துடன், படகுகளை திருப்பு அனுப்பும் கொள்கையால் பல உயிர்பலிகள் தடுக்கப்பட்டுள்ளதாக இக்கொள்கைக்கு வலுவூட்டியிருந்தார்.
இதை விமர்சிக்கும் விதத்தில் பேசியுள்ள பசுமைக் கட்சியின் ஏடம் பண்ட், “ஆஸ்திரேலிய அரசு படகுகளை திருப்பி அனுப்புவதன் மூலம் மரணங்களை தடுக்கவில்லை, அந்த மரணங்கள் வேறு எங்கோ நடக்கின்றன. மரணங்கள் இன்னும் நடக்கின்றன, நாம் அதை பார்க்கவில்லை அவ்வளவு தான்” எனக் கூறியிருக்கிறார்.
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மியான்மர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்து வெளியேறும் அகதிகள் படகு வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயற்சிக்கும் பொழுது, ‘இந்தோனேசியா’வை கடந்தே ஆஸ்திரேலியா செல்ல வேண்டி இருக்கின்றது. படகு பழுதடைந்தோ அல்லது எரிபொருள் இல்லாமலோ இந்தோனேசியாவில் இவர்கள் தஞ்சமடைய வேண்டியுள்ளது, இல்லையெனில் ஆஸ்திரேலிய எல்லைப்படையினரிடம் நடுக்கடலில் அவர்கள் சிக்கும் பொழுது இந்தோனேசியாவை நோக்கி திருப்பி அனுப்பப்படுகின்றார்கள்.
இன்றைய நிலையில், ஐ.நா. அகதிகள் ஆணையத்திடம் பதிந்த 14,000 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் இந்தோனேசியாவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவின் மனிதாபிமான திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவில் மீள்குடியேறிலாம் என நம்பியுள்ளனர். ஆனால், ஜூலை 1, 2014 பிறகு ஐ.நா.விடம் பதிந்து இந்தோனேசிய முகாம்களில் உள்ள எவரும் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோர முடியாது எனக் கூறி வருகின்றது ஆஸ்திரேலிய அரசு. அது மட்டுமின்றி, இதற்கு முன்பு வந்த அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களின் கோரிக்கையினை பரிசீலிப்பதையும் 5 ஆண்டுகளுக்கு மேலாக தாமதித்து வருகின்றது ஆஸ்திரேலிய அரசு.
தாமதிப்பதன் வழியாக அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் மனதில் ஆஸ்திரேலியாவுக்கு செல்வது சாத்தியமற்றது என்ற எண்னத்தை உருவாக்கலாம் என ஆஸ்திரேலியா அரசு நினைப்பதாகவும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.