செம்புழுதி கிழித்தபடி பின்துரத்திவர
செவ்வானக்கதிரதை கூடற்பனை மறைத்துநிற்க
பள்ளத்திலும் பக்குவமாய் நகர்ந்துவரும்
வல்லவன் காலத்து வழிப்போக்கை நினைக்கிறேன்.
இறக்கம் ஏற்றம் என்ற தூயதமிழை உச்சரிக்கும்
நீலக்கலர் சட்டையணித்தவர்கள் நெஞ்சிலே
நடத்துனர் என்ற முத்திரை பதிக்கப்பட்டிருக்கும்
தமிழீழப் போக்குவரவுக்கழகமே பயணக்காவல்
பெண்களிடம் யாரும் உரசல் சேட்டையிட்டதை
இந்தப்பேரூந்து வரலாற்றில் அறிந்திராது..
பக்கத்திலிருக்கும் கன்னியுடன் யாரும்
பேச்சில் கூட இம்சையிட அஞ்சுவார் இதிலே..
முதியவர் ,கற்பிணிப்பெண்கள்,மாற்றுத்திறனாளிகள்
அவரவருக்கென இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.
எழுத்தில் மட்டுமல்ல நடைமுறையிலும் இருக்கும்
மாணவர்களுக்குரிய மரியாதை தனியாகவிருக்கும்.
கட்டணங்களும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
ஒரு ரூபாய் என்றாலும் மிகுதி தரப்படும்
பற்றுச்சீட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டே
பணத்தைப் பெறுவார் நடத்துனர் பயபக்தியுடன்.
மக்களை யாரும் உதாசீனம் செய்யமுடியாது
கள்ளவேலைகளும் சாத்தியமில்லை..
தகவல் பெட்டிக்கு கடிதம் போனால் தண்டனை..
ஆய்வாளர்கள் ஆங்காங்கே கடமை செய்வார்.
போட்டிக்கு ஓடி விபத்தான கதையே கிடையாது
பயணிகளை வேகமாக இறங்கும்படி நடத்துனர்
அவரப்படுத்தி சேதம் விளைவிக்கவும் முடியாது.
ஏழையோ பணக்காரனோ எல்லோரும் சமமே..
பேரூந்து நிலையங்களின் தரிப்பிட நிழற்குடைகள்..
தமிழரசி,தமிழ்மதி என தமிழே வரவேற்கும்.
பயணிகள் பக்குவமாய்த் திரிந்த தமிழனின் காலமது
நினைக்கையில் வலிக்கும் இழந்ததன் பெருமைகள்..
–வன்னியூர் செந்தூரன்–