தமிழீழ தேசிய பொதுநிகழ்வுகளில் எமது தேசிய கொடியினை நிராகரிப்பதன் மூலம் இனப்படுகொலை அரசின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றிவரும் பிரித்தானிய தமிழர் பேரவை!
- தமிழீழ விடுதலைச் செயற்பாட்டாளர் தாமோதரம்பிள்ளை மயூரன் கண்டனம்
பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளில், பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) தமிழீழ தேசியக்கொடியை ஏற்ற மறுத்து வருவது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வேதனையை தோற்றுவித்து வருகின்றது. மக்களின் அபிலாசைகளுக்கு விரோதமான போக்கை கைவிடும்படி, பிரித்தானிய தமிழர் பேரவையின் (BTF) தலைமையிடம் பல தரப்பட்டவர்களும் கோரிக்கைகளை முன்வைத்து வரும் இவ்வேளை, துறைசார் நிபுணர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள் என பலரும் தமது கருத்துக்களை ஊடக மூலம் வெளியிட்டு மக்களை தெளிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வகையில், தனது கருத்தை வழங்கிய நெல்லியடி மத்திய கல்லூரி ஆசிரியரும், தமிழீழ விடுதலைச் செயற்பாட்டாளருமான தாமோதரம்பிள்ளை மயூரன் BA (Arts), Dip Tech. அவர்கள், தமிழீழ தேசிய பொதுநிகழ்வுகளில் எமது தேசிய கொடியினை நிராகரிப்பதன் மூலம் இனப்படுகொலை அரசின் எதிர்பார்ப்பினை பிரித்தானிய தமிழர் பேரவை நிறைவேற்றிவருகிறது என ஆதங்கம் தெரிவித்தார். அவர் வழங்கிய கருத்தின் முழு வடிவத்தை கீழே காணலாம்:
ஈழத்தமிழரும் தேசிய கொடியும்…….
ஈழம் என்பது வரையறுக்கப்பட்ட எல்லைகளை கொண்ட பன்னெடுங்காலமாக ஒரு மக்கள் கூட்டம் வாழும் ஒரு தேசம். அங்கு வாழும் தமிழினம் என்பது ஒரு தேசிய இனம். அவர்களுக்கென்று மிக தொன்மையான ஒரு மொழி உண்டு. மிக நீட்சியான வரலாறு உண்டு. அவர்களுக்கென்று தனித்துவமான கலாசாரம், கலை, இலக்கியம் பண்பாடு விழுமியங்கள் உண்டு.
பல்வேறு இராஜ்ஜியங்களையும் அரச வம்சங்களையும் கொண்ட அத்தேசம் காலானித்துவ ஆட்சியில் தனது இராஜ்ஜீயத்தை இழந்து காலானித்துவ ஆட்சியாளர்களால் இலங்கை என்ற இன்னொரு தேசத்துடன் இணைக்கப்பட்டது. அன்றிலிருந்து ஈழத்தமிழர் தமது தேசத்தின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் இழந்தனர்.
அதற்குப் பின் நாம் இழந்த சுதந்திரத்தையும் எமது இறையாண்மையையும் மீட்டெடுப்பதற்காக தோற்றம் பெற்ற விடுதலை அமைப்புத்தான் ‘தமிழீழ விடுதலை புலிகள்’ அமைப்பு அவ் அமைப்பின் தலைவராகவும் உலக வாழ் தமிழ் மக்கள் எல்லோரினதும் மனங்களை வென்று உன்னத சுதந்திர போராட்ட வீரனாக ‘தமிழீழ தேசிய தலைவர்’ ஆக மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் போற்றப்படுகின்றார்.
தேசிய இலக்கு இல்லாத போலி ஜனநாயக அரசியல் கட்சிகள், விடுதலை நோக்கிய பயணத்தை தொடர்வதற்கு திராணியற்ற ஆயுத குழுக்கள், ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பல துண்டுகளாக யாழ்ப்பாணம், வன்னி, கிழக்கு என பல கூறுகளாக இருந்தது தமிழர் தேசம். இவ்வாறு மிக சிக்கலாக இருந்த எமது தேசத்தை மிக கடுமையாக போராடி பல அளப்பரிய தியாகங்களை செய்து தமிழர் நிலத்தை ‘தமிழீழம்’ என்ற ஒரு தேசமாக ஒருங்கிணைத்தது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு.
எந்த ஒரு தேசத்தையும் பிரதிபலிப்பதற்கு ஒரு கொடி அவசியமாகின்றது. அந்த வகையில் தமிழீழ தேசம் வராற்று ரீதியாக பல்வேறு கொடிகளை பயன்படுத்திவந்ததை மனதில் நிறுத்தி தமிழர்களின் பண்பான ‘வீரத்தை’ கருத்தில் கொண்டு பாயும் புலிக்கொடி தமிழீழ தேசிய கொடியாக அங்கீகரிக்கப்படுகின்றது.
ஆக்கிரமிப்பு படைகளிடம் இருந்து எமது நிலத்தை விடுவித்து விடுவித்த நிலத்தை தேசமாக உருவாக்கி ஒரு தேசத்திற்கு இருக்க வேண்டிய அனைத்து கட்டுமாணங்களையும் நிறுவி, சமூக நீதியை நிலை நிறுத்தி இராணுவ வெற்றிகள் மூலம் இராணுவச்சம நிலையை உருவாக்கி இலங்கை என்னும் தேசத்திற்கு சரிசமனாக ‘தாயகம் தேசியம், சுய நிருணயம் ‘ என்ற அடிப்படையில் தமிழீழ தேசத்தை உலக அரங்கில் நிலை நிறுத்தியது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு.
எமது தாயகத்தை நிராகரிக்கும் இலங்கை அரச பயங்கரவாதம் பல்வேறு நாடுகளின் கூட்டு சதி மூலம் எமது தேசத்தை 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி இனப்படுகொலை மூலமாக முற்றுமுழுதாக ஆக்கிரமித்துக்கொண்டது. மீண்டும் ஒரு முறை ஈழத்தமிழினம் தனது இறையாண்மையையும் சுதந்திரத்தையும் இழந்தது. இது ஒரு இனப்படுகொலை என்பதற்கான போதியளவு ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றது. இதற்கான நீதியினை பெறுவதன் மூலம் நாம் எமது சுதந்திரத்தையும் அங்கீகரிக்கப்பட்ட இறையாண்மையையும் பெற்றுக்கொள்ள முடியும்.
எமது தாயகம் ஆக்கிரமிப்பாளர்களால் சூழப்பட்டு தாயகத்தில் தமிழர் தேசியம் இனப்படுகொலை அரசினால் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு வரும் இத்தைகைய ஒரு காலகட்டத்தில் புலம்பெயர் ஈழ தமிழராகிய நாம் எமது தேசியத்தையும் தேசிய விழுமியங்களையும் பேணி பாதுகாத்து இன அழிப்பிற்கான நீதி வேண்டி தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். உலகமெங்கும் நீதி கேட்டு போராடும் ஈழத்தமிழ் இனத்தின் அடையாளமே சிறப்புமிக்க எமது தேசிய கொடிதான்.
இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் புலத்தில் உள்ள ஒரு சில அமைப்புக்கள், குறிப்பாக பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழீழ தேசிய பொது நிகழ்வுகளில் எமது தேசிய கொடியினை நிராகரிப்பதென்பது இனப்படுகொலை அரசின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதுடன் தேசத்தை இழந்த மக்களை தேசியத்தையும் இழக்க செய்வதாகும். அத்துடன் எமது தேசியத்தையும், தேசிய தலைமையினையும் நிராகரிப்பதென்பதாகும். எனவே இத்தகைய அமைப்புகளுக்கு எமது தேசத்தையோ எம்மின மக்களையோ பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கீகாரம் இல்லை. இதனால் புலத்தில் உள்ள தாயக செயல்பாட்டாளர்கள் மற்றும் தாயக மக்கள் தேசிய கொடியினை நிராகரிக்கும் பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற அமைப்புக்களை புறக்கணிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
‘தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்’
தாமோதரம்பிள்ளை மயூரன் BA (Arts), Dip Tech
நெல்லிடி மத்திய கல்லூரி.
யாழ்ப்பாணம்.