கோபி கிருஷ்ணன் படைப்புகள் உளவியல் சார்ந்த தனி மனிதனின் சிக்கல்கள், பொருளாதாரம் சுமத்தும் வாழ்வியல் பிரச்சனைகள், சமூகம் சார்ந்த பிரச்சனைகள் தனி மனிதன் மீது ஏற்படுத்தும் தாக்குதல்கள், ஒடுக்கப்பட்ட பாலியல் ஏற்படுத்தும் மனிதனிடம் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்று உளவியலை மையமாக வைத்து எழுதிய கிட்டத்தட்ட 90 சிறுகதைகள், 4 நாவல்கள், கட்டுரைகள் அவரது நேர்காணல் என்று தொகுக்கப்பட்டிருக்கிறது.
பெரும்பாலான கதைகள் அவர் சொந்த வாழ்வில் நடந்த சம்பவங்கள் தான். அவர் பணிபுரிந்த இடத்தில் அவரை சுற்றி இருந்த மனிதர்களின் பிரச்சனைகள், அங்கும் அவர் குடியிருந்த வீடுகளிலும் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகள் என்று அவரை சுற்றி உள்ள உலகம் என்றாலும் எந்த இடத்திலும் எழுத்தாளர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் பிரிச்சனைகளை மையப்படுத்தியே எழுதி இருக்கிறார்.
இவரின் எழுத்துகள் பெரும்பாலும் விரக்தியை பேசினாலும் எங்குமே விரக்தி என்பது வலிந்து திணிக்கப்ட்டதாக இருக்காது..அநேக இடத்திலும் அதை நகைச்சுவையாகவே சொல்லி இருப்பது அவரது எழுத்தின் பலம். நாம் சாதாரணமாக கடக்கும் நிகழ்வுகளுக்கு பின் இருக்கும் அசாதாரனங்களை அனாயசமாக கோபி சொல்லி இருப்பார். “சகல சம்பத்துகள்” என்ற கதையும் “காத்திருந்த போது” என்ற கதையிலும் அவர் பார்க்கும் உலகத்தை விவரித்து கொண்டே செல்வார். அவர் அப்படி விவரித்து கொண்டு செல்லும் போது அந்த காட்சி அப்படியே வாசிப்பவரின் மனக்கண்ணில் விரியும். சகல சம்பத்துகள் கதையில் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவன் கோவிலுக்கு செல்லும்போது கோவிலை அந்த சூழலை எப்படி பார்ப்பான் என்ன மாதிரி சிந்தனை ஓட்டங்கள் என்பதை விவரித்து செல்லும்போதே கோவிலை அப்படியே நம் மனக்கண்ணில் நிறுத்துவார்.
அதேபோல் ‘காத்திருந்த போது’ கதையில் தன் மகளையும் மனைவியையும் பள்ளி ஆண்டுவிழாவுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் விழா முடிந்து வெளியே வரும் மூன்று மணி நேரம் காத்திருக்கும்போது என்னென்ன பார்க்கிறார், அவரை கடக்கும் மனிதர்களில் ஆரம்பித்து அந்த சூழல் வரை அவ்வளவு கோர்வையாக சொல்லி கொண்டே போவார். நாமும் தானே காத்திருந்திருக்கிறோம் இப்படி எல்லாம் நம்மை சுற்றி உள்வாங்கி இருக்கிறோமா என்று நினைக்காமல் இருக்க முடியாது. “பச்சையான வாழ்க்கை” என்ற கதையிலும் வேறு சில சிறுகதைகளிலும் ஒண்டு குடித்தனக்காரர்க்ளின் நிலையை அவர்கள் பிரச்சனைகளை கீழ் மத்திய தர மக்களின் இயலாமையை, அவர்கள் சந்திக்கும் அவமானங்களை அப்பட்டமாக சொல்லி இருப்பார்.
பச்சையான வாழ்க்கை கதையில் வீட்டுக்கார அம்மாளின் பையனின் புதிய ஜட்டி ஒன்று காணாமல் போக அந்தம்மாள் குடித்தனக்காரர்களை விசாரிக்கும் விதம் அதன் பின் யார் எடுத்தது என கண்டுபிடிக்க முடியாமல் பொதுவில் காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் வசை பாடுவதும் இறுதியில் என்ன லுங்கியை தூக்கியா பார்க்க முடியும் என்று பேச அவமானத்தால் கூனி குறுகும் குடித்தனக்காரனின் இயலாமையும் அழகாக வெளிப்படுத்தி இருப்பார். இந்த கதை ஒண்டிக்குடித்தனகாரர்களின் நிலையை சொல்லும் ஒரு சிறு கதை தான்.
“ஈடன் தோட்டம் தொட்டு இறையுணர்வு கூட்டம் ஊடாக ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரை” என்ற சிறுகதையில் பாலியல் உணர்வுகள் நீக்கமற எங்கும் இருக்கிறது என்பதை சொல்லியிருப்பார். முடியாத சமன் கதை மாதிரி சில கதைகளில் ஒடுக்கப்பட்ட பாலியல் பிரச்சனைகளால் மனபிரள்வுக்கு ஆளானவர்கள் நிலை பற்றியம் பாலுணர்வின் தகிப்புகளை சகஜமாக சொல்லியிருப்பார். நிறைய கதைகளில் அவர் சொல்லியிருக்கும் எதார்த்த உணர்வுகளை சிறு புன்னகையுடனும், சிறு அதிர்ச்சியுடனும் அதிக சிந்தனையுடன் தான் கடக்க முடிகிறது.
“உள்ளே இருந்து சில குரல்கள்” அப்படின்ற தலைப்புல மனநோய் மருத்துவமனையில் அவர் பார்த்த காட்சிகள், அங்கு வரும் நோயாளியின் நிலை, நோயாளி தன்னை பற்றி தனக்கு என்ன நேர்கிறது என்பதை அவரே விவரிக்க எந்த பூச்சும் இல்லாமல் அப்படியே எழுதியிருப்பார்.
சமூக பணிகளுக்கு பின் இருக்கும் அரசியல், சமூகப் பணியை கருணையோடு அணுகாமல் அதிகார தோரணையோடு அணுகும் அதிகாரிகள், துறை பதவி சார்ந்த மமதையால் உதவி பெறுபவர்களை தாழ்வாக பார்க்கும் மனப்போக்கு, சமூக பணியாளர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புகள் அவர்கள் எப்படி மக்களை அணுக வேண்டும், அவர்களுக்கு இருக்க வேண்டிய மனமுதிர்ச்சி, ஆழ்ந்த சிந்தனைத் திறன், யாரெல்லாம் சமூக பணிக்கு வரவேண்டும் அவர்கள் செய்ய வேண்டிய செயல்கள் குறித்தும் விரிவாக கோபி பதிவு செய்கிறார்.
இன்னும் தொடரும் பழமையில் மனநோய மக்களால் எவ்வாறு அணுகப்படுகிறது, அதற்கு சிகிச்சைகள் என்ற பெயரில் இன்று வரை என்ன நடக்கிறது, கோவில் மசூதி, சர்ச் என்று எல்லா இடங்களிலும் மக்களின் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையை எப்படி சாதகமாக உபயோகப்படுத்தி மனிதர்களை சிதைக்கிறது என்பதை வெளிப்படையாக பேசுகிறார்.
மனநோயாளிகள் குறித்த நம்முடைய அறியாமை, மனநோயாளிகள் மீது சக மனிதர்கள் காட்ட வேண்டிய பரிவு, நோயாளிகள் இங்கே நடத்தப்படும் நிலை, மருத்துவர்கள் அவர்களை கையாளும் முறை அதில் இருக்கும் ப்ளஸ், மைனஸ் எல்லாம் அலசி இருக்கிறார்.
இவர் தம் எழுத்துகளுடன் சிக்மன் ப்ராய்ட் உள்ளிட்ட பல உளவியலார்களின் கருத்துகளையும் நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மனச்சிதைவு என்பது ஒரு உள்நோக்கிய பயணம், இழந்ததை மீண்டும் பெற மனம் எடுத்து கொள்ளும் ஒரு பிரயத்தனம் . மனநோயின் வகைகள் எதனால் ஏற்படுகிறது என்று நிறைய ஒரு சாதாரண வாசகருக்கு வேறு ஒரு புது வகையாக மனிதர்களின் உளவியல் பிரச்சனைகளை அறிந்து கொள்ள வழிகாட்டுகிறார். கோபியின் படைப்புகளை இலக்கியம் என்ற வரையறைக்குள் மட்டும் சுருக்கிவிட முடியாது. அதற்கு மேல் உளவியலில் ஆர்வம் இருப்பவர்களும் உளவியல் ஆய்வு மேற்கொள்பவர்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.
– கமலி பன்னீர்செல்வம்