தாய்லாந்தில் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்து வரும் வெளிநாட்டினர்கள் முறையாக பதிவு செய்வதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில், பதியத் தவறிய சுமார் 1000 கம்போடிய தொழிலாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இதனை உறுதிச் செய்துள்ள பொய்பெட் எல்லையில் உள்ள அதிகாரிகள், இந்த நாடுகடத்தல் கடந்த ஜூலை 1 முதல் நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர். Banteay Meanchey என்ற கம்போடிய மாகாணத்தில் அமைந்திருக்கும் இந்த எல்லைப்பகுதி கம்போடியா மற்றும் தாய்லாந்தை இணைக்கும் முக்கிய தரைவழியாகும்.
தாய்லாந்தில் வேலை செய்து வரும் பெரும்பாலான கம்போடிய தொழிலாளர்களுக்கு ஜூலைக்கு முன்னதாக வேலை செய்வதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கொடுத்துள்ளதாக அம்மாகாணத்தின் தொழில் துறை இயக்குனர் ரோஸ் சரோம் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் , ஆவணமற்ற அல்லது சட்டவிரோத தொழிலாளர் என்பதே இனி இருக்க வாய்ப்பில்லை, அதையும் மீறி ஒரு கம்போடிய தொழிலாளர் கைது செய்யப்பட்டால் அவர் 800,000 கம்போடிய ரியால் (இந்திய மதிப்பில் சுமார் 14 ஆயிரம் ரூபாய் வரை) அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரித்திருக்கிறார்.
கம்போடியர்கள் தாய்லாந்துக்கு கடத்தி செல்லப்படுவது தொடர்பான ஆய்வில் ஈடுப்பட்ட ஐ.நா. போதைமருந்து மற்றும் குற்றப் பிரிவின் மண்டல் ஒருங்கிணைப்பாளர் பெஞ்சமின் சிமித், “சட்டவிரோதமான முறையில் தோராயமாக 3000 முதல் 4000 கம்போடியர்கள் நாள்தோறும் தாய்லாந்துக்குள் நுழைகின்றனர்” என கடந்த ஆண்டு ஓர் அதிர்ச்சி தகவலை சுட்டிக்காட்டியிருந்தார்.
முன்னதாக, தாய்லாந்தில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் சட்டத்தினைக் கடந்த 2017 ஜூன் மாதம் தாய்லாந்து ராணுவ அரசாங்கம்நடைமுறைக்கு கொண்டு வந்தது. பதிவுச் செய்யாத தொழிலாளர்களை பதிவுச்செய்வதற்கான பணிகள் நடைபெற்ற வந்தபோது, அச்சத்தின் காரணமாக பல வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தாய்லாந்தை விட்டு வெளியேறி வந்தனர். இதனால், வேலைக்கு போதுமான ஆட்களின்றி ஒரு நெருக்கடியான சூழல் உருவானது. அதுமட்டுமின்றி இத்தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருந்த தனியார் நிறுவனங்களிடமிருந்து எழுந்த அழுத்தத்தினாலும் இச்சட்டத்தினை அமல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டு வந்தது. நீண்ட காலத்தாமதம் மற்றும் காலக்கெடு நீட்டிப்பிற்கு பின் சட்டவிரோதமாக பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தாய்லாந்து அரசு மேற்கொண்டு வருகின்றது.
கம்போடியாவிலிருந்து தாய்லாந்து செல்ல 24,42,600 முதல் 30,53,250 ரியால் (41 ஆயிரம் முதல் 51 ஆயிரம் ரூபாய்) வரை செலவாவதாகவும், அதுவே சட்டவிரோதமான செல்லும் போது 305,325 முதல் 366390 (5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய்) வரை மட்டுமே தேவைப்படுவதாக சொல்லப்படுகின்றது. அத்துடன் பாஸ்போர்ட் மற்றும் வேலைக்கான உரிமங்களை பெற மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் தேவைப்படுகின்றன. ஏற்கனவே வறுமையில் சிக்கியுள்ள கம்போடியர்கள் இதனை ஒரு வாய்ப்பாக எண்ணி கடந்த காலங்களில் வேலைத் தேடி பெருமளவில் தாய்லாந்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.