யாழ்ப்பாணத்தில் அதிகரித்த குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த சிறப்புப் காவல்துறை குழுக்கள் களமிறக்கப்பட்டன. சுற்றுக் காவல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதனூடாக குற்றச் செயல்களை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம். இவ்வாறு வடக்கு மாகாண மூத்த பிரதிப் காவல்துறை மா அதிபர் ரொசான் பெர்ணான்டோ தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் காவல்துறை நிலையத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கில் உள்ள 53 காவல்துறை பிரிவுகளில் 5 காவல்துறை பிரிவுகளில்தான் அதிக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. தற்போது சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சமூக விரோதச் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம், மானிப்பாய், காங்கேசன்துறை ஆகிய காவல்துறை பிரிவுகளில் அதிக சமூக விரோதச் செயல்கள் நடைபெற்றன. அவற்றைத் தடுக்க காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டன. குற்றச் செயல்கள் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நல்லுறவும், தொடர்பாடலும் இருக்க வேண்டும். மக்கள் எந்த முறைப்பாடாக இருந்தாலும் எனக்கு அறிவிக்கலாம். முறைப்பாடுகளைக் கடிதம் மூலமும் அனுப்பலாம். வடக்கு மாகாண பிரதிப் காவல்துறை மா அதிபர் ரொசான் பெர்னாண்டோ காங்கேசன்துறை என்ற முகவரிக்கு அனுப்பலாம். அலைபேசி ஊடாக தகவல்கள் தர விரும்புபவர்கள் 076 609 3030 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்தித் தகவல் தரலாம்.
காவல்துறை அறிவுறுத்தல்கள் அடங்கிய 5 ஆயிரம் துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த மக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த பொது மக்கள் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் – என்றார்.