வடதமிழீழம், வவுனியா, ஒலுமடுவில் உள்ள வெடுக்குநாறி மலையைத் தொல்லியல் திணைக்களம் உரிமை கோருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்களால் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா வடக்குப் பிரதேச செயலம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
வவுனியா, வெடுக்குநாறி மலையும், ஆதி லிங்கேஸ்வரரும் எமது அடையாளம். அவற்றை ஆக்கிரமிக்க எடுக்கும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த எதிர்வரும் 21ஆம் திகதி காலை 9 மணிக்கு வவுனியா வடக்குப் பிரதேச செயலகம் முன்பாகக் கூட வேண்டும் தனது முகநூல் பக்கத்திலேயே இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
தமிழரின் பூர்வீகக் கன்னியா வெந்நீர் ஊற்றைத் தாரைவார்த்துக் கொடுத்ததைப் போன்று எமது வன்னியின் அடையாளத்தை, எமது வடக்கின் அடையாளத்தைத் தொல்பொருள் திணைக்களத்திடம் தாரை வார்க்கத் தயாரில்லை. வெடுக்குநாறி மலையும், ஆதி லிங்கேஸ்வரரும் எமது அடையாளம். எமது மக்களின் அடையாளம்.
எமது அடையாளத்தைப் பாதுகாக்க, ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த கட்சி பேதமின்றித் தமிழராய் அனைவரும் ஒன்றிணைந்து எமது எதிர்ப்பை வெளிக்காட்டுவோம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலை மீது ஆதி ஐயனார் ஆலயம் அமைந்துள்ளது. அங்கு மக்கள் காலங்காலமாக வழிபடுகின்றனர். தற்போது அது தொல்லியல் திணைக்களத்துக்குச் சொந்தமானதென அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி குறித்த ஆலயத்தை சேர்ந்தவர்களை நெடுங்கேணி பொலிஸார் அழைத்து விசாரணைக்கும் உட்படுத்தியிருந்தனர். ஆலயத்துக்குச் செல்லவேண்டாமென்றும் மீறிச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டனர். அதற்கு மறுநாள் ஆடி அமாவாசை திதி என்பதால் தொல்லியல் திணைக்களம் மற்றும் பொலிஸாரின் அனுமதியுடன் அங்கு சென்று பூசை வழிபாடுகளை மேற்கொண்டனர்.
கடந்த 12ஆம் திகதி மீண்டும் ஆலய நிர்வாகத்தினரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த பொலிஸார், ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள தடையில்லையெனக் குறிப்பிட்டனர்.
ஆனால், ஆலயத்தில் மாற்றங்கள் செய்தல், கட்டடங்களை அமைத்தல் போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாதென அறிவுறுத்தியுள்ளனர். ஆலயத்தை சூழவுள்ள காட்டுப் பகுதி தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அங்கு செல்லக் கூடாதென்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழர்களின் எல்லைக் கிராம பகுதியில் காணப்படும் இந்த ஆலயத்தை காலங்காலமாக தரிசித்து வந்த நிலையில், அதனை அபகரிக்க முயல்கின்றனர் என்று பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.