தமிழ் சினிமாவில் சரித்திரம் படைத்த சாவித்திரி – தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்,
கன்னடம் என்று ஐந்து மொழிகளில் 300- க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனைகளின் உச்சம் தொட்டவர். ‘பாசமலர்’ மூலம் தமிழ் சகோதர, சகோதரிகள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர்.
மகாதேவி, கை கொடுத்த தெய்வம், மாயாபஜார், மிஸ்ஸியம்மா என்று அவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். வாழ்வின் முற்பகுதியில் நடிப்பு, காதல், குடும்ப வாழ்வு என்று சிறப்புடன் சென்றவர், பிற்பகுதியில் சினிமாவில் சரிவு, காதல் வாழ்வில் பிளவு, சோகம், ஏமாற்றங்கள் என்று எண்ணிலடங்காத துயரங்களை தொடர்ந்து சந்தித்து மது பழக்கத்தினால் கோமா நிலையை அடைந்து காலமானார்.
நான் சென்னை வந்த புதிதில் சாவித்திரியை முதன் முதலாக பார்த்தது அவரது உயிரற்ற உடலை. உடல் சுருங்கி ஒரு சிறுமியின் தோற்றத்தில் அவரை பார்த்த போது மனம் கலங்கி போனேன். ஜெமினியின் இல்லத்திலிருந்து அவரது இறுதி ஊர்வலம் சென்ற போது, அதில் முதல்வர் எம்.ஜி.ஆரும் கலந்து கொண்டார்.நானும் அந்த ஊர்வலத்தில் சென்றேன், நுங்கம்பாக்கம் மயானம் வரையிலும். என் மனதை பாதித்த துயரம் அது.
சாவித்திரி ‘இதயம் பேசுகிறது’ இதழில் தன் வாழ்க்கை அனுபவங்களை தொடராக எழுதினார்.ஆனால் அது முற்று பெறவில்லை.
இத்தனை வருடங்களுக்குப்பின் சாவித்திரியின் வாழ்க்கையை ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் சினிமாவாகக் கொண்டு வந்துள்ளனர்.
தைரியமான முயற்ச்சி. நிறைய செலவு செய்து பிரமாண்டமாக எடுத்துள்ளனர்.சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நல்ல தேர்வு. தோற்றமும் நடிப்பும் அவருக்கு பெருமை சேர்க்கும். மற்றபடி ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கில் உருவாக்கப்பட்ட படம் என்பதால் முற்பகுதியில் அந்த தொனி அதிகமுள்ளது. வர்த்தக நோக்கத்தில் ஜெமினியாக மலையாள நடிகர் துல்கர் சல்மானை ( மம்முட்டியின் மகன் ) நடிக்க செய்துள்ளனர். மனோபாலா மட்டும் தமிழராக இருக்கிறார் ( இயக்குனர் வேடம் ).
படத்தில் மனதில் நிற்பவை கீர்த்தி சுரேஷ், இசை+ ஒளிப்பதிவு, கார்க்கியின் வசனம் மற்றும் சாவித்திரியின் தாய் மாமனாக வரும் ராஜேந்திர பிரசாத். பிற்பகுதியில் சாவித்திரியின் கடின வாழ்வு வெளிப்பட்ட விதம் டப்பிங் படம் என்பதை தாண்டி மனதை கலங்கடித்தது.
சினிமா நடிகையை இழிவாகப் பார்க்கும் இந்த சமூகத்தின் பார்வையை சற்றே மாற்றியமைக்கும் விதமாக இந்த படத்தினை உருவாக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் பாராட்டுக்குரியவர்.