வடதமிழீழம், சாவகச்சேரிப் பிரதேச சபையின் கட்டட அங்கீகாரமின்றி நாவற்குளியில் அமைக்கப்பட்ட விகாரை தொடர்பான வழக்கு மீண்டும் செப்ரெம்பர் 20 ஆம் திகதிக்கு சாவகச்சேரி நீதிமன்றினால் நேற்று முன்தினம் ஒத்தி வைக்கப்பட்டது.
நாவற்குளிப் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில், தென்னிலங்கை மக்கள் அத்துமீறிக் குடியமர்ந்த பின்னர் அங்கு சிறிய பௌத்த மத வழிபாட்டுத் தலம் ஒன்று அமைக்கப்பட்டு பின்னர் ,அதனை விரிவுபடுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது . இது தொடர்பாக சாவகச்சேரி பிரதேச சபையினால் சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சபையின் அங்கீகாரமின்றி கட்டடம் அமைப்பது குற்றமான செயல் என்பதால், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து சபையின் அங்கீகாரம் பெற்று கட்டட வேலைகளை அமைக்குமாறு விகாராதிபதிக்கு அறிவுறுத்திய நீதிவான், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில் தாமதமின்றி அனுமதியை வழங்குமாறு பிரதேச சபை செயலருக்கும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிமன்றில் நடைபெற்று வருகிறது.
வழக்கு நேற்று முன்தினம் நடந்த போது உரிய ஆவணங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்பவில்லையென பிரதேச சபையினால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கினை வரும் செப்ரம்பர் 20 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார் எனத் தெரிவிக்கப்பட்டது